சென்னை, பிப்.2 திராவிடர் கழகம், திராவிட இயக்கம் – பொதுவுடைமை இயக்கம் என்று சொன்னால், இணைந்து செல்லும் இரண்டு தண்டவாளங்கள் போன்றவை. சமதர்மம் – கொள்கை நெருப்பானது – சமதர்மத்திற்கு எதிராக இருப்பவர்களை எதிர்த்து நாம் போராடவேண்டிய அவசியம், மனுதர்மம் – குலதர்மம். இதற்கு அரசியல் என்பது மேலோட்டமாக இருந்தாலும், மனுதர்மத்திற்கும் – சமதர்மத்திற்கும் இடையேதான் போராட்டம். ஒருபோதும் சமதர்மம் தோற்காது; மனுதர்மத்தை ஆட்சிக்கு வர விடமாட்டோம் என்றார் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நேற்று (1.2.2026) மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.
எதிர்நீச்சல் அடித்தே வளர்ந்து கொண்டிருக்கக்கூடிய ஓர் இயக்கம்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா என்ற இந்த வரலாற்றுப் பெருமை மிக்க சாதனை சரித்திரம் அடங்கிய ஓர் இயக்கம், எதிர்நீச்சல் அடித்தே வளர்ந்து கொண்டிருக்கக்கூடிய ஓர் இயக்கம், எத்தனைத் தடைகள் என்றாலும், அவற்றையெல்லாம் நாங்கள் ஏற்போம். இறுதி வெற்றி எங்களுக்கே தவிர, பிற்போக்குவாதிகளுக்கு, மதவெறியர்களுக்குக் கிடையாது என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லக்கூடிய ஓர் இயக்கத்தினுடைய நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று இருக்கக்கூடிய அவ்வியக்கத்தின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் அன்பிற்குரிய தோழர் மு.வீரபாண்டியன் அவர்களே,
இந்த நிறைவு விழா மாநாட்டில், நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சி என்பதை உலகமே பார்த்து வியக்கக்கூடிய ஒன்றாக நடத்திக் கொண்டிருக்கின்ற நம்முடைய முதலமைச்சர் அவர்கள், நிறைவுப் பேருரை நிகழ்த்தவிருக்கிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவுப் பேருரையை ஸ்டாலின் ஆற்றுகிறார் என்பதுதான் சிறப்பு வாய்ந்ததாகும்.
இதுபோன்று இந்தியாவினுடைய வேறு எந்தப் பகுதியிலும் கிடையாது. ஏன்? உலகத்தில் வேறு எந்தப் பகுதிகளிலும் இதுபோன்று கிடையாது.
மீண்டும் அவர்தான்
முதலமைச்சர்!
‘‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் என்று’’ முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் எடுத்தார் நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு. மீண்டும் அவர்தான் முதலமைச்சர் என்று மக்கள் சொல்லிக் கொண்டிருக்கக்கூடிய அந்த வாய்ப்பைப் பெற்றி ருக்கக்கூடிய ஒருவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில், நிறைவுப் பேருரையை ஆற்றுகிறார் என்றால், இதைவிட வரலாற்றில் வேறு எதையும் சொல்ல முடியாது.
அப்படிப்பட்ட அருமைமிகு மாண்புமிகு மானமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் அன்பிற்குரிய அருமைத் தோழர் டி.ராஜா அவர்களே,
மேடையில் இருக்கக்கூடிய அத்துணைத் தலை வர்களே, ஒவ்வொருவரையும் விளித்ததாகக் கொள்ள வேண்டும். எனக்கு முன் உரையாற்றிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை அத்தனை பெயரையும் சொன்னார்; அதை நான் வழிமொழிகிறேன்.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், இது ஓர் அற்புதமான அணியினுடைய மாநாடு. வெறும் நிறைவு விழா மாநாடு மட்டுமல்ல. இது ஒரு கொள்கை மாநாட்டுக் கூட்டம்.
ஈரோட்டுக் குருகுலத்தில்
பயின்ற காரணத்தினால்…
இந்தக் கொள்கையினுடைய வெற்றி எந்த அளவிற்கு இருக்கிறது என்பதற்கு அடையாளம் – மாநாட்டின் நிறைவுப் பேருரையை ஆற்றவிருக்கின்றவர் ஸ்டாலின் அவர்கள் – அய்யாத்துரையாக வந்திருக்கவேண்டியவர். கலைஞர் அவர்களுடைய அற்புதமான சிந்தனையின் காரணமாக அவருக்கு ‘ஸ்டாலின்’ என்று பெயர் சூட்டப்பட்டது. அதற்குக் காரணம், ஈரோட்டுக் குரு குலத்தில் கலைஞர் அவர்கள் படித்த காரணத்தினால், மிகப்பெரிய அளவிற்கு சோசலிசம், கம்யூனிசம் என்பதை, முதன்முறையாக ரஷ்யாவிற்குச் செல்வதற்கு முன்னால், தன்னுடைய ‘குடிஅரசு’ ஏட்டில், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை (Communist Manifesto) மொழி பெயர்த்துத் தந்த இயக்கம் திராவிட இயக்கமாகும். இது திராவிட இயக்கத்தினுடைய வரலாறாகும்.
ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற இயக்கங்கள்!
எனவே, கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட இயக்கமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற இயக்கங்களாகும்.
வெறும் தேர்தலுக்காக மட்டும் இணைந்திருக்கின்ற இயக்கங்கள் அல்ல. இது ஒரு கொள்கைப் பயணம் – லட்சியப் பயணத்தை நோக்கிச் செல்கின்ற இயக்கங்கள்.
கம்யூனிசம் ஒருபோதும் தோற்காது;
அப்படிச் சொல்கிறவர்கள்தான் தோற்பார்கள்!
இந்த நூறாண்டுக் காலத்தில், இன்னமும் சிலர் உளறிக் கொண்டிருக்கிறார்கள், ‘‘கம்யூனிசம் தோற்றுவிட்டது’’ என்று. கம்யூனிசம் ஒருபோதும் தோற்காது; தோற்றுப் போய்விட்டது என்று சொல்லுகின்ற நீங்கள் தான் தோற்பீர்கள். நீங்கள் என்றைக்கும் வெற்றி பெற முடியாது.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் வகிதா நிஜாம், மாநிலக்குழு உறுப்பி னர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி ஆகியோர் பயனாடை ்அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினர் (சென்னை, 1.2.2026).
ஏனென்றால், கம்யூனிசம் என்பது, எங்கேயோ இருப்பதாக நம்புகின்ற மோட்சத்தைப் பார்த்துச் சொல்வது அல்ல. இங்கே இருக்கின்ற உழைக்கம் வர்க்கத்திற்கு, அடிமைப்பட்டுக் கிடக்கும் வர்க்கத்திற்கு எழுச்சி உருவாக்கவேண்டும் என்று சொல்லக்கூடிய ஓர் இயக்கம், அந்தக் கொள்கை – அந்தக் கொள்கைக் குடும்பம்தான் இங்கே இருப்பது. இது வெறும் கூட்டணி மட்டுமல்ல; இது ஒரு கொள்கைக் குடும்பம், லட்சியக் குடும்பம்.
பதவிக் கூட்டணியல்ல நண்பர்களே, இது கொள்கைக் கூட்டணி, லட்சியக் கூட்டணி!
அதனால்தான், ஊடகங்கள் எத்தனையோ கதைகளை எழுதுகின்றன. ‘‘இந்தக் கூட்டணியை விட்டு அவர் போய்விட்டார், இவர் போய்விட்டார்’’ என்று. எவரும் இந்தக் கூட்டணியை விட்டுப் போக மாட்டார்கள்; இக்கூட்டணியை நோக்கி பலர் வந்து கொண்டிருக்கின்றார்கள். அதற்குக் காரணம், இது பதவிக் கூட்டணியல்ல நண்பர்களே, இது கொள்கைக் கூட்டணி, லட்சியக் கூட்டணி!
தேர்தல் என்பதுகூட, வெறும் அரசியலுக்காகவோ, பதவிக்காகவோ அல்ல. அடுத்த தேர்தல் என்பது தலைமுறையைக் காப்பாற்றுவதற்காக.
மனுதர்மத்திற்கும் – சமதர்மத்திற்கும் இடையேதான் போராட்டம்!
திராவிடர் கழகம், திராவிட இயக்கம் – பொதுவுடைமை இயக்கம் என்று சொன்னால், இணைந்து செல்லும் இரண்டு தண்டவாளங்கள் போன்றவை. சமதர்மம் – கொள்கை நெருப்பானது – சமதர்மத்திற்கு எதிராக இருப்பவர்களை எதிர்த்து நாம் போராடவேண்டிய அவசியம், மனுதர்மம் – குலதர்மம்.
எனவேதான், அரசியல் என்பது மேலோட்டமாக இருந்தாலும், மனுதர்மத்திற்கும் – சமதர்மத்திற்கும் இடையேதான் போராட்டம்.
இங்கே இருக்கின்ற அணி முழுவதும், அந்த சமதர்மத்தை மக்களுக்குப் பெற்றுத் தரக்கூடிய அளவிற்கு வாய்ப்பை உருவாக்கவேண்டும் என்பதற்காகத்தான்.
கம்யூனிசம் வெற்றி பெற்றதா என்பதற்கு, தமிழ்நாடு மண், எத்தனையோ உதாரணங்களைச்
சொல்லலாம்.
சுயமரியாதைக் கொள்கைக்கு
எதிரான இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.

நம்முடைய முதலமைச்சருடைய பெயரைச் சொன்னோம். அதுமட்டுமல்ல நண்பர்களே, தமிழ்நாட்டில்தான், பொதுவுடைமை இயக்கப் பெயர்கள் அதிகளவில் சூட்டப்பட்டு இருக்கின்றன. தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய அதே ஆண்டில்தான், சுயமரியாதைக் கொள்கைக்கு எதிரான இயக்கமான ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் தொடங்கப்பட்டது.
எனவேதான், அன்றையிலிருந்து, இன்றைய வரையிலும், நாளைக்கும் இந்தக் கொள்கைப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
‘ரஷ்யா’ என்கிற பெயருக்குத் 90 வயது; ‘சமதர்மம்’ என்ற பெயருக்கு 80 வயது. அதுபோலத்தான், மார்க்ஸ், லெனின் என்று பெயர் சூட்டப்பட்டவர்கள் எல்லாம் வயதானவர்களாக இருக்கிறார்கள்.
அந்த அளவிற்கு, இந்த இயக்கத்தைத் தமிழ் மண், திராவிட மண், மக்கள் ஏற்று இருக்கின்ற காரணத்தினால்தான், நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தி ருக்கின்றோம்.
குறிப்பாக இரண்டு செய்திகளை மட்டும் இங்கே கோடிட்டுப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
ஒரே இலக்கை நோக்கி கைகோர்த்துக் கொண்டிருக்கின்றன!
எப்போதும், திராவிட இயக்கமும், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியும் ஒன்றாகவே, பிரிக்க முடியாத ஒரே இலக்கை நோக்கி கைகோர்த்துக் கொண்டிருக்கின்றன.
அன்றைக்குக் கோர்த்த கைகள்; இன்றைக்கும் அந்தக் கைகள் அப்படியே இருக்கின்றன.
சேலம் சிறைச்சாலையில், கம்யூனிஸ்ட் தோழர்கள் 14 பேரை அடித்துக் கொன்ற நேரத்தில், ‘விடுதலை‘ நாளேடுதான் அவர்களுக்காக மிகப் பெரிய அளவிற்கு வாதாடியது. வாதாடியவர் தந்தை பெரியார்.
ஈரோடு சமதர்மத் திட்டம்!
காரணம், இந்தக் கொள்கையில் இணைந்தவர்கள். ஒருபக்கம் சிங்காரவேலர் – இன்னொரு பக்கம் பெரியார். இந்த இருவரும் இணைந்துதான், ஈரோடு சமதர்மத் திட்டம்.
எனவே, இந்தக் கூட்டணி ஏதோ தேர்தலுக்காக அமைந்த கூட்டணியல்ல. இது கொள்கை, வரலாறு இவற்றைப் பொறுத்து அமைந்தக் கூட்டணியாகும் என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
தோழர் தா.பாண்டியனின்
புரட்சி முழக்கம்!
உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமானால், 9 ஆயிரம் ரூபாய் வருமான உச்ச வரம்பு கொண்டுவரப்பட்ட நேரத்தில், எங்களோடு எல்லா மேடைகளிலும் பேசிய தோழர் தா.பாண்டியனின் புரட்சி முழக்கத்தை – அதை நான் இன்றைக்கு நினைத்துப் பார்க்கிறேன். இன்னும் இதுபோல ஏராளமாகச் சொல்லலாம்.
கலைஞர் ஒருபக்கம், நாங்கள் எல்லோரும் ஓர் அணியாக நின்று, 9 ஆயிரம் ரூபாய் வருமான உச்ச வரம்பை ஒழித்துக் கட்டினோம். இன்றைக்கு மீண்டும் அது உயர்ஜாதி ஏழைகளாக வருகிறது.
எனவே, நம் முன் நிறைய பணிகள் இருக்கின்றன என்பதை மறந்துவிடக் கூடாது.
வெறும் தேர்தலில், ஓட்டுப்போடுவது மட்டுமல்ல நம் பணி; ஓட்டுத் திருட்டை நாம் கண்டுபிடித்து, அதற்கான பணிகளைச் செய்வது மட்டும் நம்முடைய வேலையல்ல. இன்னும் ஆழமாக, வேகமாகச் செல்லவேண்டிய பணி நம் முன் இருக்கிறது.
தமிழ்நாடு எதிர்த்து நிற்கும்!
நல்ல வாய்ப்பாக, நம்முடைய முதலமைச்சர் அவர்கள், ‘‘உங்கள் யாரையும் தலைகுனிய விடமாட்டேன்; தமிழ்நாடு ஒருபோதும் தலைகுனியாது’’ என்று சொல்லி, தமிழ்நாடு எதிர்த்து நிற்கும் என்று சொல்லி, எதிர்நீச்சலிலேயே வளர்ந்து, பக்குவப்பட்டு, இன்றைக்கு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றார்.
‘‘சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்’’ என்ற இலக்கை நோக்கி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஆட்சிதான் இந்தத் ‘திராவிட மாடல்’ ஆட்சி.
சுயமரியாதை இயக்கத்தின் வார்ப்படம்
தோழர் ஜீவா
நம்முடைய முதலமைச்சர் இந்த மேடையில் உரையாற்றுவதற்காக வந்திருக்கின்றார்கள். நேற்று முன்தினம், அவருடைய பணி என்ன? அது நேரிடை யாக, தோழர் ஜீவா அவர்கள், தந்தை பெரியார் சுயமரி யாதை இயக்கத்தின் வார்ப்படம் தோழர் ஜீவா அவர்கள்.
தோழர் ஜீவா அவர்களும், அண்ணல் காந்தியார் அவர்களும் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூருக்குப் பக்கத்தில் இருக்கக்கூடிய ‘சிராவயல்’ ஆசிரமத்தில் சந்திக்கிறார்கள், கருத்துப் பரிமாற்றம் செய்கிறார்கள்; கம்யூனிஸ்ட் இயக்கக் கொள்கையை, அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளாத காந்தியார் அவர்கள், ஏற்றுக்கொள்கிறார்.
திருப்பூர் மாநாட்டில் முதலமைச்சரிடம்
கோரிக்கை வைத்த தோழர் முத்தரசன்!
நம்முடைய தோழர் முத்தரசன் அவர்கள், செய லாளராக இருந்த காலகட்டத்தில், திருப்பூரில் நடை பெற்ற மாநாட்டில் அருமைத் தோழர் சுப்பராயன் அவர்களுடைய அற்புதமான முயற்சியில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் நாங்கள் எல்லாம் பங்கேற்றோம். அந்த மாநாட்டில், தோழர் முத்தரசன் அவர்கள், நம்முடைய முதலமைச்சரிடம் ஒரு வேண்டுகோளை வைத்தார்.
அந்த வேண்டுகோள் என்னவென்றால், முதலமைச்சர் அவர்களே, நீங்கள் நிறைய வரலாற்றுச் சின்னங்களை அமைக்கின்றீர்கள். தோழர் ஜீவாவும் – காந்தியாரும் சந்தித்த சிராவயல் நிகழ்ச்சியை வரலாற்றுச் சின்னமாக ஆக்கவேண்டும் என்று சொன்னார்.
அது உடனடியாக நிறைவேற்றப்படும் என்றார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள். பொதுப்பணித் துறை அமைச்சர் நம்முடைய செயல்வீரராக இருக்கக்கூடிய அருமை எ.வ.வேலு அவர்கள். அவரிடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்தார். இரண்டு நாள்களுக்கு முன்பு, தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டு, அவர்களுடைய சிலையைத் திறந்து வைத்துவிட்டுத்தான், இந்த மாநாட்டிற்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இங்கே வந்திருக்கின்றார்.
சில நேரங்களில்,
சொல்லாததையும் செய்யும்!
இந்த ஆட்சி, சொன்னதைச் செய்யும்; செய்வதைச் சொல்லும். சில நேரங்களில், சொல்லாததையும் செய்யும் என்கிற பெருமைக்குரிய ஆட்சிதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி.
எனவேதான், இந்தக் கொள்கை, இந்த அடையாளம் காப்பாற்றப்படவேண்டும். அதற்காக நாம், நம்முடைய பயணத்தைத் திட்டமிடவேண்டும்.
முன்பு இருந்த எதிரிகள், நாணயமுள்ள எதிரிகள். இப்போது இருக்கின்ற எதிரிகளோ நாணயமற்ற எதிரிகள்.
ஒருபோதும் சமதர்மம் தோற்காது; மனுதர்மத்தை ஆட்சிக்கு வர விடமாட்டோம்.
தமிழ் மண், சுயமரியாதை மண்!
இது தமிழ் மண், சுயமரியாதை மண் – சுயமரியாதை சமதர்மம் என்றே பல ஆண்டுகளுக்கு முன்பு திட்டத்தைத் தீட்டியது திராவிட இயக்கம்.
எனவேதான், கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவு விழா என்பது வெறும் விழா அல்ல நண்பர்களே, நாமெல்லாம் களப் போராளிகளாக நின்று கொண்டிருக்கின்றோம். நமக்கு முன் தோன்றி யிருக்கக்கூடிய அத்தனை அறைகூவல்களையும் சந்திப்போம், சந்திப்போம்! வெற்றி பெறுவோம்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
