மதம் ஒற்றுமையை வளர்க்கிறதா?
வடகலை – தென்கலை சண்டை சந்தி சிரிக்கிறது!
புதுடில்லி, ஜன.29 காஞ்சிபுரம் வரதராஜப் பொருள் கோவிலில் பிரபந்தம் பாடுவதில் வடகலை – தென்கலை பிரிவினருக்குள் ஏற்படும் சண்டையைத் தீர்த்து வைக்க உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலை மையில் மத்தியஸ்தம் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்தியின் விவரம் வருமாறு:

வடகலை – தென்கலை மோதல்
நூற்றாண்டு கால
வரலாற்றைக் கொண்டது
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில், காலையிலும் மாலையிலும் யார் பிரபந்தங்களைப் பாடுவது என்பதில் அந்தக் கோவி லோடு தொடர்புடைய வடகலை அய்யங்கார்களுக்கும், தென்கலை அய்யங்கார்களுக்கும் இடையிலான மோதல் நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்டது.
ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு…
மதம் ஒற்றுமையை வளர்க்கிறது என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு இருக்கின்றனர்; ஆனால், மதத்துக்குள்ளேயே அடிதடி! வடகலை – தென்கலைப் பிரிவினர் தெருவில் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு தெருவில் புரண்டதெல்லாம் உண்டு – வெட்கக்கேடு!
இந்த மோதல்கள் பல சமயங்களில் மிக மோசமான கட்டத்தையும் எட்டி யிருக்கின்றன. இந்த மோதலின் போது கோவிலுக்குள்ளேயே, கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்ட நிகழ்வு கள் அதிகம் உள்ளன.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில், வட கலை வைணவ சம்பிர தாயத்தின்படி நிர்வகிக்கப்படும் ஒரு கோவில். ஆனால், இந்தக் கோவில் தொடக்கத்தில் தாத்தாச்சாரியார் என்ற குடும்பத்தின் வசம் இருந்தது. இந்த தாத்தாச்சாரியார் என்போர் வடகலை வைணவப் பிரிவைச் சேர்ந்தவர்கள். இங்கிருக்கும் அர்ச்சகர்கள் அனைவரும் வடகலைப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
இப்படியிருக்கும்போது, இந்தக் கோவிலில் வரதராஜப் பெருமாளுக்கு முன்பாக பாடும் உரிமை தென்கலை வைணவர்களுக்கு எப்படிக் கிடைத்தது? இதற்கு ஒரு வரலாற்றுப் பின்னணியைச் சொல்கிறார்கள் வைணவர்கள். முக லாயப் படையெடுப்பின்போது, வரதரா ஜப் பெருமாள் கோவிலில் இருந்த சிலை, உடையார்பாளையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்த பாளையக்கா ரரின் வசம் இருந்தது.
இந்தத் திருமேனிகளைத் தேடிவந்த தாத்தாச்சாரியார்கள், அவை அங்கிருப்பதை கண்டனர். ஆனால், அந்தப் பாளையக்காரர் அதனைத் தர மறுத்துவிட்டார். அப்போது அந்த ஊரில் இருந்த ஆத்தாஞ்ஜீயர் என்பவர், அய்தராபாத்தில் உள்ள நவா பிடம் கூறி கூலிப்படைகளை அனுப்பி சிலைகளைப் பெற்றுக் கொடுத்தார். அதற்குப் பிரதிபலனாக, தினமும் வரதராஜப் பெருமாளுக்கு முன்பாக பிரபந்தங்களைப் பாடும் உரிமை ஆத்தாஞ்ஜீயரின் வம்சத்திற்கு அளிக்கப்பட்டது. பிறகு, அந்த உரிமை, ஆத்தாஞ்ஜீயரின் வம்சத்தினர் மட்டுமல்லாது பல தென்கலையாருக்கு கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
யானைக்கு நாமம் போடுவதில் பிரச்சினை!
சிறீரங்கத்திலே ஒரு யானை இருந்தது. 1918-1919 இல் ஒரு வழக்கு. யானைக்கு வடகலை நாமம் போடுவதா அல்லது தென்கலை நாமம் போடுவதா என்ற பிரச்சினை வைணவர்களுக்குள் ஏற்பட்டது. அப் பொழுது நீதிமன்றங்களை கடந்து, லண்டன் பிரிவு கவுன்சில் வரைக்கும் வழக்குப் போனது. கவுன்சிலிலே விசாரித்து ஒரு உத்தரவு போட்டார்கள். யானைக்கு ஒரு மாதம் வடகலை நாமம், ஒரு மாதம் தென்கலை நாமம் போடலாம் என்று சமரச தீர்ப்பு கொடுக்கப்பட்டது.
ஆனாலும், வடகலை – தென்கலை சண்டை தொடர்ந்து கொண்டே வந்தது.
உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற
நீதிபதி தலைமையில் மத்தியஸ்தம்!
வடகலை, தென்கலை பிரிவினரிடையே ஏற்பட்ட பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலை மத்தியஸ்தராக நிய மித்து உச்சநீதிமன்றம் நேற்று (28.1.2026) உத்தரவிட்டது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவி லுக்குள் பிரபந்தம் பாடுவதில் வடகலை, தென்கலைப் பிரிவினர் இடையே நீண்டகாலமாக பிரச்சினை நீடித்து வருகிறது. தென்கலைப் பிரிவு சார்பில் தொடரப்பட்ட வழக்கை கடந்த ஆண்டு டிசம்பரில் விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய அமர்வு, வரதராஜ பெருமாள் கோவிலில் பிரபந்தம் பாட, தென்கலை பிரிவினருக்கு என்று தனிப்பட்ட உரிமை வழங்கி 1915, 1963 ஆம் ஆண்டுகளில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை சுட்டிக்காட்டியது.
மேலும், வடகலை பிரிவினரையும் பிரபந்தம் பாட அனுமதித்து, கடந்த 2022 இல் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறை யீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நேற்று (28.1.2026) விசாரணைக்கு வந்தது.
பிரபந்தம் பாடுவதில் எழுந்துள்ள பிரச்சி னைகளுக்குத் தீர்வு காண, இரு தரப்புக்கும் இடையே உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலை மத்தியஸ்தராக நியமிக்கிறோம்.
சட்டம் – ஒழுங்கு நீதிபதி கவுல் தனக்கு உதவியாக தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் பாண்டித்யம் பெற்றவர்கள், கோவில் சடங்கு மற்றும் வரலாறுகளை நன்கு அறிந்தவர்களில் இருவரை தனது குழுவில் சேர்த்துக் கொள்ளலாம்.
மத மோதலாக
மாறிவிடக் கூடாது!
பிரபந்தம் பாடும் பிரச்சினை ராமா னுஜரின் சீடர்களுக்கு இடையே மத மோதலாக மாறிவிடக் கூடாது. பகை மையை விட, சகோதரத்துவமே முக்கியம். மத்தியஸ்தம் முடியும் வரை, தற்போதைய நிலையே தொடர வேண்டும். கோவிலுக்குள் காவல்துறையினரை அனுமதிக்கக் கூடாது. காவல்துறையினரின் தலையீடு ஏற்கத்தக்கது அல்ல. அமைதியை காப்பதற்கு பதில், அது நிலைமையை மோசமாக்கிவிடும்.
மத்தியஸ்தம் நடக்கும்போது எந்தப் பிரிவினரும் சட்டம் – ஒழுங்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் செயல்படக் கூடாது. சமரசம் ஏற்பட்டாலோ, மாநில அரசின் தலையீடு அவசியம் என்றாலோ, இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு இரு தரப்பினரும் கொண்டு வரலாம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
