கேள்வி 1: ஹிந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் மொழிப் புரட்சியை மய்யப்படுத்தி வெளிவந்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் இளைய சமுதாயத்தினர் இடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தந்தை பெரியாரால் 1957ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு நாட்டையே கிடுகிடுக்க வைத்த திராவிடர் கழகம் நடத்திய ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் கொளுத்திய போராட்டத்தையும் மய்யப்படுத்தி திரைப்படம் எடுக்கப்படுமா?
– மன்னை சித்து, மன்னார்குடி – 1.
பதில் 1: நான் பதில் சொல்ல முடியாது. காலம் உரிய நேரத்தில் பதிலை செயலாகத் தரும்.
கேள்வி 2: மாட்டுப் பொங்கலன்று எருமை மாட்டை ஊர்வலமிடுங்கள் என்று சென்ற ஆண்டு (2025) தாங்கள் விடுத்த வேண்டு கோளைத் தொடர்ந்து, தமிழ்நாட்டு மக்கள் இவ்வாண்டும் (2026) மகிழ்வோடு எருமை மாட்டை ஊர்வலமாக நடத்திச் சென்று அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்த பாங்கை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– செல்வி பாபு, மானாமதுரை.
பதில் 2: தந்தை பெரியாருக்குக் கிடைத்த வெற்றி, பண்பாட்டுப் புரட்சியின் – விடியலின் தொடக்கம்.
கேள்வி 3: மாநில சட்டமன்றங்களில் ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை மாற்றுவதற்கான அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை திமுக முன்னெடுக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியிருப்பதை அனைத்து மாநில முதலமைச்சர்களும் ஆதரிக்க முன்வருவார்களா?
– கி.துரைராஜ், கிண்டி.
பதில் 3: பாதிக்கப்படுபவர்கள்தான் இப்போது முன்வருவர், மற்றவர் பிறகு வருவர்!
கேள்வி 4: “ஒன்றிய அரசின் நிபந்தனைகள், அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு நிராகரிப்பு போன்றவை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளன” என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை மக்கள் மன்றம் ஏற்றுக்கொண்டு வருகின்ற (2026) சட்டமன்றத் தேர்தலில் ஒன்றிய அரசுக்குத் தக்க பாடம் புகட்டுவார்களா?
– எஸ்.இராபர்ட், இரும்பேடு
பதில் 4: அந்த அச்சம் ஆளும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கூட்டணிக்கு இருப்பதால்தான் முறையற்ற நிலைக்குத் தள்ளும் மிரட்டல் – அச்சுறுத்தலில் ஈடுபடுகிறார்கள்.
கேள்வி 5: “ஆர்.என்.ரவியைப் போன்று அநாகரிகமான ஆளுநரைத் தமிழ்நாடு சட்டப்பேரவை இதுவரை கண்டதில்லை” என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்து வருவதை ஆளுநர் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லையே?
– க.கண்மணி, காஞ்சிபுரம்.
பதில் 5: உணராதவர்கள் – உணர்த்தப்படுவார்கள். இது காலத்தின் கட்டாயம்.
கேள்வி 6: வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா இரண்டு நாள் (03&04.01.2026) மாநாட்டை மும்பைத் தோழர்கள் வெற்றிகரமாக நடத்தியதோடு, அனைத்து வகையிலும் புதுமையைப் புகுத்தி புரட்சி பூபாளம் படைத்தமைக்காக அவர்களை நோக்கி ‘ராயல் சல்யூட்’ செலுத்தலாம்தானே?
– சீ.இலட்சுமிபதி, தாம்பரம்.
பதில் 6: பலே, பலே, மகிழ்ச்சியோடு செலுத்தித்தான் ஆக வேண்டும்.

கேள்வி 7: வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை உச்சத்தை எட்டியுள்ள போதும் மக்களிடம் பதிந்துள்ள ‘தங்க மோகம்’ அகலுவதற்கு என்னதான் வழி?
– ந.தங்கமணி, திருச்சி.
பதில் 7: பொன்னாசையைத் துறந்ததாகக் கூறும் முனிபுங்கவர்களிடம் கேளுங்களேன்!
கேள்வி 8: “11.19 சதவீத பொருளாதார வளர்ச்சி மூலம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது” என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருப்பது பி.ஜே.பி. கட்சித் தலைவர்களின் செவிகளுக்கு எட்டுமா?
– அ.அப்பாசாமி, உளுந்தூர்பேட்டை.
பதில் 8: எட்டாது. காரணம் செவிப்பறைகள் பழுதாகிக் கிடக்கின்றனவே!
கேள்வி 9: பி.ஜே.பி. ஆளுகின்ற தலைநகர் டில்லியில் சாலைகள், பாலங்கள், காற்று மாசு உள்ளிட்டவற்றால் நாள்தோறும் மக்கள் கொல்லப்படுகின்றனர் என்று ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுக்கு என்னதான் தீர்வு?
-ஆர்.கார்த்தி, புதுடில்லி.
பதில் 9: மக்கள் நலனில் உண்மை அக்கறை கொண்ட ஆளுமையும், அதன் அயராத செயலாக்கமும்தான்.

கேள்வி 10: வாசகர்களின் வேண்டுகோளை ஏற்று ‘தினத்தந்தி’ நாளேட்டில் வெளியாகின்ற கேள்வி-பதில் பகுதியை நூலாக வெளியிட்டிருப்பதைப் போன்று ‘விடுதலை’ நாளிதழில் வெளிவருகின்ற கேள்வி-பதில் பகுதியையும் நூலாக வெளியிட ஆவன செய்வீர்களா?
– கி.கோவிந்தராஜ், வந்தவாசி.
பதில் 10: சிந்திக்கலாங்க! – நல்ல யோசனை இது!
