நினைவிடத்தில் மரியாதை
சுயமரியாதைச் சுடரொளி சிதம்பரம் கு. கிருஷ்ணசாமி அவர்களின் 111 ஆவது பிறந்த நாளான இன்று (22.1.2026) அவரது நினைவாக கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது, மாவட்ட கழகத் துணைத் தலைவர் அன்பு. சித்தார்த்தன் தலைமையில் பொதுமக்கள் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
என்டிஏ. கூட்டணி
ஒரு மூழ்கும் கப்பல்
செல்வப்பெருந்தகை
என்டிஏ கூட்டணி மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி என்று செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். அதிமுக-பாஜக கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல் என்றும், அதில் யார் சேர்ந்தாலும் மூழ்கடிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இத்தனை நாள்களாக எடப்பாடியாரை துரோகி எனக் கூறிவந்த டிடிவி தினகரன் என்டிஏவில் இணைந்துள்ளார்; அக்கூட்டணி ஒரு இயற்கைக்கு முரண்பாடான கூட்டணி என்று அவர் சாடியுள்ளார்.
மருத்துவ அதிசயம்
ஆண் வயிற்றில் கர்ப்பப் பை!
மத்திய பிரதேசத்தில் இயங்கி வரும் பிரபல தனியார் ஸ்கேன் மய்யத்தில் 47 வயது ஆண் ஒருவர், அடிவயிறு வலியால் ஸ்கேன் எடுக்க சென்றுள்ளார். ஸ்கேன் ரிப்போர்ட்டில் அவருக்கு கருப்பை வளர்வதாக முடிவுகள் வந்ததை பார்த்து மருத்துவர்கள் ஆடிப் போயுள்ளனர். இதையடுத்து, ஒரு ஆணுக்கு எப்படி கருப்பை வளரும் என்று சுகாதாரத்துறையும் ஆய்வு செய்கிறது.
ரயில் விபத்தில் 377 பேர் பலி.. சோகம்!
சேலம் ரயில்வே கோட்டத்தில் மட்டும் கடந்த ஆண்டு 377 பேர் ரயில் விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, சேலத்தில் 132 பேர், தருமபுரி – 18, ஜோலார்பேட்டை – 125, காட்பாடி – 82, ஒசூர் – 20 என மொத்தம் 377 பேர் ரயிலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அதேநேரம், ரயில்வே கிராஸிங் & தண்டவாளங்கள் அருகே உள்ள கிராமங்களில் ரயில்வே தரப்பில் விழிப்புணர்வும் அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கி வழக்கு
உயர்நீதிமன்றம் உத்தரவு
மறைந்த முதலமைச்சர் ஜெயலலி தாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில் வசூல் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரி பாக்கி தொடர்பாக 2 வாரங்களில் பதில் அளிக்க வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருமான வரி பாக்கி தொடர்பாக அனுப்பிய, அறிக்கையை எதிர்த்து ஜெ.தீபா தாக்கல் செய்த வழக்கில் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
