போபால், ஜன.21 மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்ட பா.ஜ.க. தலைவராக இருப்பவர் சேஷ்ராவ் யாதவ். சிந்த்வாரா மாவட்டத்தின் ‘பால்’ எனும் சமூகத்தினரின் நிகழ்ச்சியில் சேஷ்ராவ் யாதவ் கலந்து கொண்டு பேசுகையில்,
‘‘பார்ப்பனர்கள் அரசு அதிகாரத்தையும் தங்களுடன் வைத்திருக்க விரும்புகின்றனர். அரசு நிர்வாகப் பணிக்கு பிற சமூகத்தினர் உள்ளனர். பார்ப்பனர்கள் வழிபாட்டிற்கான பூஜை, சடங்குகள் செய்வது மற்றும் அறி வைப் போதிப்பதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆட்சி செய்யும் உரிமை மற்றவர்களுக்கே சொந்தமானது’’ என்று பேசினார். அப்போது மேடையில் சிந்த்வாரா தொகுதி நாடாளுமன்ற பா.ஜ.க. உறுப்பினர் விவேக் சாஹு இருந்தார்.
பார்ப்பனரான விவேக் சாஹு முன்னி லையில் அவர் இவ்வாறு பேசியது விவகாரத்தை மேலும் உணர்வுப்பூர்வ மாக்கியது
நிகழ்ச்சிக்குப் பிறகு, அவரது பேச்சு சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது. இதைக் கேட்டு பார்ப்பன சமூகத்தினரும் அவர்களது சங்கத்தினரும் கடும் கோபம் அடைந்து போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.
இதுகுறித்து மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பார்ப்பன சமூக நிர்வாகிகள் கூட்டாக நடத்திய போராட்டத்தில் ‘‘சேஷ்ராவின் கருத்து சமூக நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவித்து, சமூகங்களுக்கு இடையே மோதலை உருவாக்கும் செயல் இது. இதற்காக, சேஷ்ராவ் யாதவ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த விஷயத்தில் பா.ஜ.க. தலைமை அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர்.
