நெம்மேலி, ஜன. 20– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (19.1.2026) செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருப்போரூர் மற்றும் திருக்கழுக் குன்றம் வட்டங்களில் பழைய மாமல்லபுரம் சாலைக்கும் கிழக்கு கடற்கரை சாலைக்கும் இடையில் கோவளம் உபவடி நிலப் பகுதியில் 5,161 ஏக்கர் பரப்பளவில் 342 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய குடிநீர் நீர்த்தேக்கத்திற்கு “மாமல்லன்” என்று பெயர் சூட்டி, நீர்த் தேக்கம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
புதிய நீர்த்தேக்கம் அமைப்பதற்கு 34 கி.மீ நீளத்திற்கு மண் கரை அமைக்கும் பணி, கோகிலமேடு முகத்துவாரத்திற்கு வெள்ள நீர் செல்வதற்கு ஏதுவாக நீர் தேக்கத்தின் தெற்கு பகுதியில் நீரொழிங்கி அமைத்தல், நீர் உள்வாங்குவதற்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கும் தேவையான நீரொழிங்கிகள் அமைத்தல், தேவைக்கு அதிகமான வெள்ள நீரினை மேற்கு மற்றும் கிழக்கு புற வெளிப்புற வடிகால்கள் மூலம் முட்டுக்காடு மற்றும் கோகிலமேடு முகத்துவாரங்கள் மூலம் வெளியேற்ற வடிகால்கள் அமைக்கும் பணிகள் அமையவுள்ளன. மேலும், பக்கிங்காம் கால்வாய் திருவிடந்தையிலிருந்து மகாபலிபுரம் வரை முற்றிலுமாக சீரமைத்து கடல்நீர் வருவதற்கேற்ப புனரமைக்க உத்தேகிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–
“சென்னையின் வளர்ந்து வருகின்ற பகுதிகளுக்காக நம்முடைய அரசு செய்த முக்கியமான பணியாக வரலாற்றில், இந்த நிகழ்வு நினைவுகூரப்படும். பொதுவாக, சிலர் உண்மை தெரிந்தும், பலர் உண்மை தெரியாமலும், “நம்முடைய கழக ஆட்சியில், அணைகளை கட்ட வில்லை” என்று ஒரு பொய்யை சொல்லுவார்கள். ஆனால், உண்மை நிலை என்ன? கலைஞர் தமிழ்நாட்டின் நீர் நிலைகளைக் காக்கக்கூடிய செயல்பாடுகளையும் அதிகமாக செய்திருக்கிறார்.
1967ஆ–ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து, 2011 வரை தமிழ்நாட்டில், 43 அணைகள் கட்டப்பட்டிருக்கிறது.
திராவிட மாடல் ஆட்சி அமைந்து, நீர்வளம் பெருக்க பல நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து எடுத்துக் கொண்டு வருகிறோம்.
கடந்த அய்ந்து ஆண்டுகளாக மேட்டூர் அணை முழு கொள்ளளவு எட்டப்பட்டு, குறித்த நேரத்தில் திறந்து வைத்திருக்கிறோம்.
25 ஆயிரம் கி.மீ.க்கு
தூர்வாரும் பணி
2021–-2025 ஆகிய அய்ந்து ஆண்டுகளில், காவிரி டெல்டா பகுதிகளில், தூர்வாரக் கூடிய பணிகள் 459 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்றிருக்கிறது. 24 ஆயிரத்து 833 கிலோமீட்டர் நீளத்திற்கு சிறந்த முறையில், இவை செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால், கடைமடை வரை விவசாயிகள் பயனடைந்தார்கள்.
மாநிலம் முழுவதும் புதிதாக 121 தடுப்பணைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
63 அணைகட்டுகள் அமைக்கக்கூடிய பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்பு கால்வாய் திட்டம். கடந்த ஆண்டு பிப்ரவரி 7-ஆம் நாள் துவங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
அய்ந்தாண்டுகளில், 9 டி.எம்.சி. நீர் வறட்சிப் பகுதியான திசையன்விளை மற்றும் சாத்தான்குளம் வரை கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
ஊரக வளர்ச்சித்துறை மூலமாக, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங் களிலும், 47 ஆயிரத்து 920 ஏரிகள் மற்றும் 1 இலட்சத்து 33 ஆயிரத்து 967 கிலோமீட்டர் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்த வரிசையில்தான், சென்னை மாநகரத்தில், பெருகிவரும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, மற்றுமொரு புதிய நீர்த்தேக்கமான திராவிட மாடல் ஆட்சி இதை அமைத்திருக்கிறது.
342 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இது அமைக்கப்பட இருக்கிறது.
நீர்வளத்துறை மற்றும் பிற துறை களுடன் ஒருங்கிணைந்து, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கின்ற கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளை தூர்வாரி, பொதுமக்கள் மற்றும் விவசாயி களின் நீண்டகால பயன்களைப் பெறும்வகையில், நிலையான நீர்வள மேலாண்மையினை உறுதி செய்யக்கூடிய அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பணிகளைப் பாராட்டி இன்றைக்கு ‘சிறந்த நீர் பாதுகாத்தல்’ விருதை வழங்கியதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
தலைநகர் சென்னைக்காக எத்தனையோ திட்டங்களை நம்முடைய கழக அரசு செய்து கொடுத்திருக்கிறது!
திறப்பு விழாக்கள்
அண்ணா மேம்பாலம் தொடங்கி, டைடல் பார்க் வரை 100-க்கும் மேலாக என்னால் பட்டியல் போட்டு சொல்ல முடியும்.
கடந்த 5 ஆண்டுகளிலும், சென்னை யின் முகமே மாறும் அளவுக்கு அனைத்து வகையான வளர்ச்சித் திட்டங்களையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்!
அடுத்தடுத்து, நிறைய, தொடர்ந்து வரிசையாக திறப்பு விழா காண காத்துக் கொண்டிருக்கிறது!
இன்றைக்கு நான் தொடங்கிய இந்த நீர்த்தேக்கப் பணி மக்களுக்கு காலந்தோறும் வாழ்வளிக்கப் போகிறது.”
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் க.செல்வம், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம்,
நீர்வளத்துறை செயலாளர் ஜெ.ஜெயகாந்தன், செங்கல்பட்டு கலெக்டர் தி.சினேகா, சார் ஆட்சியர் மாலதி ஹெலன், நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் கோபாலகிருஷ்ணன், சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் பொதுப்பணி திலகம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
