ஒட்டாவா, ஜன. 19- கனடாவின் முக்கிய மாகாணங்களில் ஒன்றான ஆல்பர்ட்டா, அந்நாட்டிலிருந்து பிரிந்து தனி நாடாக வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இது தொடர்பான புகார் மனுவில் கையெழுத்திட மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இயற்கை வளங்கள் மற்றும் கனிம வளங்கள் செழித்துக் காணப்படும் ஆல்பர்ட்டா மாகாணம், கனடாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் பங்களிப்பை வழங்கி வருகிறது. இருப்பினும் தங்கள் மாகாணத்தின் வருவாயில் பெரும் பகுதியை கனடா அரசு எடுத்துக்கொள்கிறது. பதிலுக்கு ஒன்றிய அரசு ஆல்பர்ட்டாவின் வளர்ச்சிக்கு போதிய முக்கியத்துவம் அளிப்பதில்லை. நாடாளுமன்றத்தில் தங்களின் குரல் மற்றும் கருத்துகளுக்கு மதிப்பளிக்கப்படுவதில்லை.
இத்தகைய காரணங்களால், தங்களை தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் ‘தனி நாடு’ தகுதி வேண்டும் என அந்த மாகாண மக்கள் கருதுகின்றனர். ‘ஆல்பர்ட்டா செழிப்புத் திட்டம்’ (Alberta Prosperity Project) என்ற அமைப்பின் தலைவர் மிச் சில்வெஸ்டர், இதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். அரசின் தேர்தல் ஆணையத்திடம் உரிய அனுமதி பெற்று, கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா பிரிவது தொடர்பான அதிகாரப்பூர்வ புகார் மனுவை அவர் உருவாக்கியுள்ளார்.
இந்த மனு குறித்து விவாதிக்கப்படும் கூட்டங்களிலும், கையெழுத்திடும் நிகழ்வுகளிலும் திரளான மக்கள் பங்கேற்று வருகின்றனர். மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஆதரவை பதிவு செய்யும் காட்சிகள் கனடா அரசியலில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அடுத்த நான்கு மாதங்களுக்குள் சுமார் 178,000 கையெழுத்துக்களை அந்தப் புகார் மனுவில் சேகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டும் பட்சத்தில், மாகாணத்தின் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியான அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
