நாடு எங்கே போகிறது – இதுதான் ஜனநாயகமா?

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஜம்மு–காஷ்மீர் பகுதியில் மருத்துவக் கல்லூரியில் ‘நீட்’ தேர்வில் தேர்வு செய்யப்பட்ட 50 இடங்களில்,
42 பேர் முஸ்லிம்கள் என்பதால், தேர்வையும், கல்லூரி அனுமதியையும் ரத்து செய்வதா?
ஆர்.எஸ்.எஸ். குருநாதர் எம்.எஸ்.கோல்வால்கர் எழுதியபடி முஸ்லிம்களையும், கிறிஸ்துவர்களையும் எதிரிகளாகக் கருதுவதா – நடத்துவதா?

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை!

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் ரியாசி மாவட்டத்தில் சிறீ மாதா வைஷ்ணோ தேவி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் எக்சலன்ஸ் மருத்துவக் கல்லூரியில் நடத்தப்பட்ட ‘நீட்’ தேர்வில் 50 இல், 42 இடங்களை முஸ்லிம்கள் பெற்றனர் (அது முஸ்லிம்கள் நிறைந்த பகுதி) என்ற காரணத்திற்காக, தேர்வையும், கல்லூரி அனுமதியையும் ஒன்றிய பி.ஜே.பி. அரசு ரத்து செய்திருப்பதுதான் ஜனநாயகமா? மதத்தின் அடிப்படையில் நாளும் வெறுப்பையும், எதிர்ப்பையும் காட்டலாமா? என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஜம்மு- காஷ்மீர் பகுதியில், கக்கிரியால், ரியாசி மாவட்டத்தில்,  பிரதமர் மோடியால் சகல வசதிகளுடன் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்ட ஒரு மருத்துவக் கல்லூரி சிறீ மாதா வைஷ்ணோ தேவி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் எக்சலன்ஸ் (shri mata vaishno devi institute of medical excellence)  என்பதாகும்.

அதில் மொத்த இடங்கள் 50. ‘நீட்’ தேர்வு நடத்தி அதன் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட முதல் அணி (First Batch) மாணவர்களில் 50 பேரில், 42 பேர் முஸ்லிம்கள்.

இதன் காரணமாக, அந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு வகுப்பில் சேர்ந்து படிக்கவேண்டியவர்களை ஒட்டுமொத்தமாகவே ஒன்றிய பா.ஜ.க. அரசு ரத்து செய்துள்ளது.

அந்த மருத்துவக் கல்லூரிக்குத் தந்த அனுமதியையோ திரும்பப் பெற்றுள்ளது.

பி.ஜே.பி. ஆட்சியில் சமூகநீதி என்பது ஒருதலைபட்சமா?

என்னே கொடுமை! எத்தகைய வன்ம அரசியல், மொத்தம் 50 இடங்களில் 42 பேர் – நீட் தேர்வின்படி – இடம் பிடித்தோர் முஸ்லிம்கள் என்பதால், இப்படி ஒரு தலைப்பட்சம் – இவ்வளவு சமூக அநீதி என்பது நியாயமா? ஏற்புடையதா?

இது அரசியலமைப்புச் சட்ட அடிப்படை உரிமையான Right to Education – கல்வி அடிப்படை உரிமை என்பதற்கு முற்றிலும் முரண்பாடல்லவா?

42 முஸ்லிம் மாணவர்கள் தேர்வாகி இருப்பதற்கு முக்கிய காரணம், அப்பகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினர் உள்ள பகுதி என்றும், இதை மறு ஆய்வு செய்ய வற்புறுத்தியும், அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினரே விளக்கி, ஒன்றிய அரசுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளார்!

முஸ்லிம் சிறுபான்மையினரின் கல்வி மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பு உரிமைகளை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கூறு (Article) 29 பாதுகாக்கிறதே – அதுபற்றிய கவனமே கிடையாதா?

நாள்தோறும் மதவெறிப் பேச்சுகள் – நிகழ்வுகள்!

அது மட்டுமா?

இதோ மற்றொரு அதிர்ச்சிக்குரிய, மனிதநேயத்திற்கு எதிரான மதவெறிச் செய்தி!

‘இந்திய ேஹட் லேப்’ (India Hate Lab) என்ற அமைப்பு இந்தியா முழுவதும் நடைபெற்ற வெறுப்புப் பேச்சுகள் தொடர்பான 100 பக்க அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதில், மதச் சிறுபான்மையினரைக் குறிப்பாக முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்களைக் குறி வைத்து 1,318 மத வெறுப்புப் பேச்சுகள், சம்பவங்கள் கடந்த ஆண்டு (2025) நடந்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

அதாவது, சராசரியாக நாள் ஒன்றுக்கு நான்கு வெறுப்புப் பேச்சு – நிகழ்வுகள் நடந்துள்ளன!

பதிவான மொத்த நிகழ்வுகளில் 1,156 (98%) வெறுப்புப் பேச்சுகள் முஸ்லிம்களைக் குறி வைத்து நடத்தப் பெற்றவை – 133  வெறுப்புப் பேச்சுகள் கிறிஸ்துவர்களை குறி வைத்து நடத்தப்பட்டுள்ளன.

மாறுவேடம் பூண்டு ஆட்சி நடத்தும் ஆர்.எஸ்.எஸ்.!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாவது தலைவரான மாதவ் சதாசிவ் கோல்வால்கர் என்ற புனே சித்பவன் பிரிவுப் பார்ப்பனர் – உயர்ஜாதிப் பார்ப்பனரான எழுதிய ‘Bunch of Thoughts’ (தமிழில் ‘ஞானகங்கை’) என்ற ஆர்.எஸ்.எஸ். கொள்கை – தத்துவ விளக்க நூலில் ‘‘நாட்டில் உள்ள எதிரிகள் முதலில் முஸ்லிம்கள், இரண்டு கிறிஸ்துவர்கள், மூன்று கம்யூனிஸ்டுகள் (நாத்திகர்கள்)’’ என்பதாக எழுதியுள்ளதை எவ்விதக் கூச்சமுமின்றி நிறைவேற்றுகிறார்கள். மாறுவேடம் பூண்டு ஒன்றிய ஆட்சியைப் பிடித்து, அடுத்தடுத்த கட்டங்களில் தங்களது அஜெண்டாவான வேலைத் திட்டத்தை செயல்படுத்துகிறார்கள் என்று தானே எவரும் முடிவுக்கு வர முடியும்?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினைக் காக்கும் லட்சணம் – பதவிப் பிரமாணம் எல்லாம் நீரில் கரைந்த எழுத்துகள்தானா?

நம் நாடு எங்கே செல்கிறது?

இது என்ன ஜனநாயகம்?

ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளிடையே, ஒரு நாட்டின் குடிமக்களிடையே இப்படி ஒரு வெறுப்பை நாளும் நடத்துவது எவ்வகை ஜனநாயகம் என்பது புரியவில்லை!

 

 

கி.வீரமணி

சென்னை    தலைவர்,

18.1.2026   திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *