தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் அறிவுரை
புதுடில்லி, ஏப். 23- தேர்தல் நடை முறை மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் அறிவுறுத்தி உள்ளது. தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்ய ‘விவிபாட்’ எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ‘எம்3’ வகையிலான இந்த எந்திரங்கள் கடந்த 2018ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு, தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தேர்தல் ஆணையம் பயன்படுத்தி வந்த லட்சக்கணக்கான எந்திரங்களில் 6.5 லட்சம் விவி பாட் எந்திரங்கள் குறைபாடுள்ளவை என கண்டறியப்பட்டு உள்ளதாகவும், அவற்றை சரி செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
ஆனால் இந்த தகவல்களை மறுத்துள்ள தேர்தல் ஆணையம், 3.43 விவிபாட் எந்திரங்களுக்கு பராமரிப்பு பணிகள் தேவைப்படுவதாக கூறியுள்ளது. எனினும் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துள்ள காங்கிரஸ் கட்சி, தேர்தல் நடைமுறைகளில் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன்கெரா கூறியதாவது:- 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட எந்திரங்களில் மூன்றில் ஒரு பங்கு (37 சதவீதம்) எந்திரங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதால், இது தேர்தல் நடைமுறையின் நேர்மையைப் பாதிக்கும் “மிக தீவிரமான பிரச்சினை” என்று காங்கிரஸ் கருதுகிறது.
இது, நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த சட்டமன்ற தேர்தலிலும் பதிவான வாக்குகளை பாதித்திருக்கலாம். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் நட வடிக்கையாக விவிபாட் எந்திரங் கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதான கேள்விகள் அதிகரித்து வரும் சூழலில், இவ்வளவு பெரிய அளவிலான குறைபாடுகள், தேர்தல் செயல்பாட்டில் பொது மக்களின் நம்பிக்கையை குலைக்கிறது. எனவே வாக்காளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க முழு வெளிப்படைத்தன்மை தேவைப்படுகிறது.
இந்த விவகாரத்தை சிறு நிகழ்வாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த எந்திரங்கள் திருப்பி அனுப்பப்பட்டதற்கான காரணத்தை அரசியல் கட்சிகளிடம் விரிவாக எடுத்துக் கூறவில்லை. தேர்தல் அதிகாரிகளின் இந்த நடவடிக்கை பொது நடைமுறையாக மேற்கொள்ளப்படுவதாக தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாக எமது அடிமட்ட ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்படுவதை விட, ஊடக அறிக்கைகளுக்குப் பிறகுதான் பிரச்சினையின் அளவை நாங்கள் உணர்ந்துள்ளோம். தேர்தல் செயல்பாட்டில் ஒவ்வொரு இந்தியரின் நம்பிக்கையும் ஜனநாயகத்துக்கு இன்றியமையாதது.
இந்த முக்கியமான நேரத்தில், வாக்களிப்பின் சக்தி இன்னும் விலைமதிப்பற்றது என்பதை உறுதி செய்வதுடன், எந்த சந்தேகமும் அதைச் சுற்றி நீடிக்கவும் அனுமதிக்கப்படக் கூடாது.
எனவே எங்களின் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் முழுமையாகவும் விரைவாகவும் பதிலளிக்கும் எனவும், விவிபாட் எந்தி ரங்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட சந்தேகங்களை விரைவாக முன்கூட்டியே அகற்றுவதன் மூலம் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் என்றும் நம்புகிறோம். இவ்வாறு பவன் கெரா தெரிவித்தார்.