புதுடில்லி, ஜன.12 திருமணம் செய்யாமல் 40 ஆண்டுகளாக இணைந்து வாழும் துணைவி மற்றும் அவரது வாரிசுகளின் பெயர்களை குடும்ப ஓய்வூதியப் பட்டியலில் சேர்க்கக் கோரிய ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் மனுவை பரிசீலிக்குமாறு ஒன்றிய அரசுக்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடும்ப ஓய்வூதியம்
ஒன்றிய அரசுத் துறையில் பணியாற்றி 2012-ல் ஓய்வு பெற்ற ஒருவர், தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெறாமல் பிரிந்து, 1983 முதல் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த விவகாரத்தில், முறையற்ற உறவு மற்றும் பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் தவறான தகவல் அளித்ததாகக் கூறி, அவரது ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை பலன்களில் 50 சதவீதத்தை அரசு நிறுத்தி வைத்தது. இதனை 2018-இல் ஒன்றிய நிர்வாக தீர்ப்பாயமும் உறுதி செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் மது ஜெயின் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்: மனுதாரர் தனது துணைவியுடனான உறவை எக்காலத்திலும் மறைக்கவில்லை; வெளிப்படைத்தன்மையுடனேயே நடந்து கொண்டுள்ளார்.
வட்டியுடன் நிலுவைத்தொகை: நிறுத்தி வைக்கப்பட்ட 50 சதவீத ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடைத் தொகையை, 6 சதவீத வட்டியுடன் மனுதாரருக்கு வழங்க வேண்டும்.
தீய நோக்கம் இல்லை: பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் அவர் தவறான தகவல்களைத் தந்து ஆதாயம் பெற முயன்றார் என்ற குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை.
உரிமைகள் வழங்கல்: துணைவி மற்றும் குழந்தைகளின் பெயர்களை ஓய்வூதியப் பட்டுவாடா உத்தரவிலும் (PPO), ஒன்றிய அரசு சுகாதாரத் திட்டத்தின் சி.ஜி.எச்.எஸ். (CGHS) வசதிகளிலும் சேர்க்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரரின் தனிப்பட்ட நேர்மையைக் குறை கூற முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் வாழ்நாள் முழுதும் ஓய்வூதியத்தைப் பறிப்பது ஏற்புடையதல்ல என்று தீர்ப்பளித்தனர்.
