கம்பம் பார்க் திடலில், “இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி” எனும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அப்போது ஆவலுடன் அவருடைய கருத்துகளை கேட்டுக்கொண்டிருந்த மக்களின் மறதியால் பா.ஜ.க. ஆட்சியால் ஏற்பட்டிருக்கும் அவலங்களை சுட்டிக்காட்டிப் பேசினார். அதாவது, “2014 இல் மோடி ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கைகளைச் சொல்லி ஆட்சிக்கு வரவில்லை. பொய் சொல்லித்தான் வந்தார். என்ன பொய் சொன்னார்? மக்களுக்கு மறதி அதிகம். இரண்டு நாளைக்கு முன்பு என்ன சாப்பிட்டோம் என்று கேட்டாலே தலையைச் சொறிவார்கள். நாங்கள் அப்படியா? எங்களுக்கோ நினைவு அதிகம். ‘‘404 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு மக்களைச் சந்திக்க வருகிறோம்’’ என்று சொல்கிறார் நமது முதுகெலும்புள்ள முதலமைச்சர்.
அப்படி மோடி என்ன வாக்குறுதி கொடுத்தார்? ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவோம் என்று வாக்குறுதி கொடுத்தார். எத்தனை ஆண்டுகள் ஆயிற்று? 11 ஆண்டுகள். கொடுத்தாரா? ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் பொத் பொத்தென்று விழும் என்றார். விழுந்ததா? இதற்காக ஏழை எளிய மக்கள் எத்தனை பேர் தாங்கள் வைத்திருந்த சிறுவாட்டுக் காசையும் வைத்து வங்கிக் கணக்கைத் தொடங்கினர். இன்று வரையில் அந்தக்கணக்கில் காசு வந்ததா? நமது முதலமைச்சர் மாதா மாதம் 1000 ரூபாய் அனுப்புகிறார்! நம்மை விமர்சிப்பதற்கு இவர்களுக்கு யோக்கியதை இருக்கிறதா?” என்று கேள்விக்கணைகளால் துளைத்து எடுத்துவிட்டார் தமிழர் தலைவர்.
