தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சி பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் காணொலி வழியாக நடத்தப்பட்டது.
டிசம்பர் 14 இரவு 8:30 முதல் 10:30 வரை தமிழ்நாட்டு நேரத்தை ஒதுக்கி ஆசிரியர் அய்யா அமெரிக்கக் குழந்தைகளுடன் மகிழ்ந்தார் !
மருத்துவர் சரோ அம்மையார் பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில் குழந்தைகட்கு உற்சாகமாக சிறுவர் சாரங்கபாணியின் வாழ்க்கைப் பயணத்தை வழங்கினார். ஆசிரியர் திராவிடமணி எப்படி வீரமணியை செதுக்கி ஊக்கமளித்தார், பின்னர் அவர் தன்னுடைய விரிந்த படிப்பால், ஆழ்ந்த எழுத்துகளால், ஆதாரமான பேச்சுக்களால், உண்மைக் கல்வியாளராக, பதிப்பாளராக க் கொடிகட்டிப் பறக்கின்றார் என்று எடுத்துரைத்தார்.
பெரியார் பன்னாட்டமைப்பின் செயலாளர் தமிழ்மணி அவர்களை “க்கூத் மாஸ்டர்” என்று அறிமுகப் படுத்தினார்.
‘க்கூத்’ என்பது கேட்கும் கேள்விகளுக்கு விரைவாகச் சரியாகப் பதில் அளிக்கும் விளையாட்டு. ஆசிரியர் பற்றி 22 கேள்விகள் கேட்கப் பட்டன. குழந்தைகள் உற்சாகமாகப் பதில் அளித்து யார் முதலில் என்று உடனுக்குடன் தெரிந்து கொண்டனர். கேள்விகள் மிகவும் சிறப்பாக இருந்தன. இது தமிழ்நாட்டிலும் நடக்கவுள்ளது.
106 வயது பெங்களூரு பெரியார் பெருந்தொண்டர் 86 நாடகங்களை எழுதி நடித்துள்ள வேலு அவர்களை அவர் 8 வயதிலே சொன்ன நாடக வசனங்களைச் சொல்லச் சொல்லிப் பதிவு செய்ததை சோம. இளங்கோவன் போட்டுக் காட்டினார். என்ன குரல் வளம், என்ன உணர்ச்சி ! ஆசிரியர் அய்யா நீண்டு வாழ்க ! என வாழ்த்தினார்.
அடுத்துப் பத்துக் குழந்தைகள் ஆசிரியர் அய்யா அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லிப் பெரியார் பொன்மொழி ஒன்றைச் சொல்லி கேள்வி கேட்டனர்.
ஆசிரியர் அய்யா வியந்து, மகிழ்ந்து பாராட்டி விளக்கமாகத் தமிழிலும் , ஆங்கிலத்திலுமாகப் பதில் சொன்னார்கள்.
நீங்கள் எப்படி இணைந்தீர்கள், ஒரு நாளை எப்படி செலவு செய்கிறீர்கள், இவ்வளவு பயணம் செய்கின்றீர்களே எப்படி, கீதையின் மறு பக்கம் துணிவாக எப்படி எழுதீனீர்கள், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பன போன்ற கேள்விகளை அடுக்கினார்கள்.
ஒவ்வொன்றிர்க்கும் ஆசிரியர் அவர்கள் பொறுமையாக, விளக்கமாக உற்சாகமாகப் புன்னகையுடன் பதில் அளித்து மகிழ்ந்தார். குழந்தைகளுடன் நாங்களும் பல புதிய செய்திகளைத் தெரிந்து கொண்டோம் . இவை ஒரு பதிப்பாகவே வர வேண்டும். தந்தை பெரியார் அவர்கள் மறையும் 38 நாட்களுக்கு முன்னர் கொடுத்த வேண்டுகோளைப் படித்துக் காட்டி அந்த வேண்டுகோளை நிறைவேற்றவே இரண்டு பெட்டிகள் நிறையக் கீதை பற்றிய புத்தகங்களை அமெரிக்கா எடுத்து வந்து மகள் அருள்செல்வி இல்லத்தில் தனி அறையில் சிறைவைக்கப் பட்டு எழுதிய ஆராய்ச்சி நூல் என்று சொன்னபோது உணர்ச்சி வசப்பட்டோம்! அதையும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் இராமகோபாலன் கீதை புத்தகம் கொடுத்த போது அவருக்குக் கீதையின் மறுபக்கம் கொடுத்து அது முரசொலி பத்திரிக்கையில் வெளியிட்டதைப் படித்துக் காட்டினார்.
தந்தை பெரியார் எப்படி சுய சிந்தனையாளர், நேர்மையானவர், சிக்கனவாதி, துணிவும் தெளிவும் மிக்கவர் என்பதையெல்லாம் விளக்கிச் சொல்லிப் பாடம் எடுத்தார்.
ஆசிரியர் அவர்கள் அமெரிக்கப் பயணங்கள், மானமிகு மாண்புமிகு சந்திரஜித் அவர்களுடன் பெரியார் பன்நாட்டு மய்யம் தொடக்கம் போன்ற படங்கள் காட்டப் பட்டன. ஆசிரியர் அய்யா அவற்றிற்கு மகிழ்ந்து விளக்கங்கள் அளித்தார்.
அமெரிக்காவின் மூத்தப் பற்றாளர் ஆண்டுதோறும் 5 பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவர்களுக்குத் தலா 20,000 ரூபாய் நன்கொடை அளிக்கும் அய்யா மோகனம், இலக்கியச் செம்மல் நாஞ்சில் பீற்றர், புரட்சிக் கவிஞர் பேரவை துரைக்கண்ணன், கண்ணபிரான் ரவிசங்கர், மனநல மருத்துவர் கனிமொழி இளங்கோவன் போன்றோர் ஆசிரியர் அய்யாவிற்கு வாழ்த்துகள் சொன்னார்கள்.
சோம. இளங்கோவன் நேரமில்லாததால் மற்றவர்களை அழைக்க முடியவில்லை என்றும், வந்திருந்த அய்யா தேவ், மலர்செல்வன், மனநல மருத்துவர் திருநாவுக்கரசு, மணவாளன், சோம. வேலாயுதம், தமிழவேள் , சொர்ணம் சங்கரபாண்டி மற்றவர்கட்கும், நன்கொடையாளர்கட்கும், முக்கியமாகப் பங்கேற்றக் குழந்தைகள் , பெற்றோர்க்கும், உழைப்பாளிகள் இளமாறன், அருள்செல்வி, அறிவுப்பொன்னி, வினுப்பிரியா, சரோ. இளங்கோவன் அனைவர்கட்கும், தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கட்கும் நன்றி தெரிவித்து ‘வாழ்க பெரியார், வாழ்க ஆசிரியர், வளர்க பகுத்தறிவு’ என்று நிறைவு செய்தார்.
தகவல்: டாக்டர் சோம. இளங்கோவன் (USA)
