திருப்பதியில் ஒன்றிய அரசின்கீழ் சமஸ்கிருதப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு முதலாம் ஆண்டு படித்து வரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவியை, பார்ப்பனப் பேராசிரியர் பாலியல் வன்கொடுமை செய்து, அதனைத் தனது கைப்பேசியில் காட்சிப் பதிவும் எடுத்துள்ளார். மேலும் அப்பேராசிரியரின் நண்பரான மற்றொரு பேராசிரியரும் மாணவியை மிரட்டி பாலியல்வன்கொடுமை செய்துள்ளார்.
தான் பாலியல்வன்கொடுமைக்கு ஆளானது மற்றும் ஆபாசப் படம் எடுத்து மிரட்டியது தொடர்பாக சான்றுகளோடு திருப்பதி காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்தார். ஆனால் அந்தப் புகாருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காவல்துறையினரும் அந்தப் புகாரை விசாரிக்கவில்லை. மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளருக்குப் புகார் அனுப்பினார் அந்தப் புகார் மீதும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவிலை
இந் நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் குருமூர்த்தி மற்றும் தெலங்கானா மாநில வாரங்கல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கடியம் காவ்யா ஆகியோர் இந்த விவகாரம் குறித்துப் பேச வேண்டுமென நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். இதற்கு நாடாளுமன்ற அவைத்தலைவர் ஓம் பிர்லா அனுமதி கொடுத்ததைத் தொடர்ந்து, இருவரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவிக்கு திருப்பதி சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் உயஜாதிப் பேராசிரியர்கள் செய்த பாலியல் தொல்லைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதையடுத்து மாலை, திருப்பதி காவல்துறைக் கண்காணிப்பாளர். சுப்புராயுலு உத்தரவின் பேரில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தது.
இது தொடர்பாக திருப்பதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் குருமூர்த்தி கூறும் போது “பாதிக்கப் பட்டப் பெண் உடனடியாக பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் கொடுத்தார், ஆனால் நிர்வாகமோ அவரது புகாரை ஏற்காமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசியது.
இதனால் காவல்துறைக்குச் செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டது, ஆனால் அங்கும் அவருக்கு நீதி கிடைக்கவில்லை. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவியோடு படிக்கும் சக மாணவிகள் பாதிக்கப்பட்ட மாணவி குறித்த தகவலை எனது கவனத்திற்குக் கொண்டு வந்தனர். பல்கலைக்கழக நிர்வாகம் பேராசிரியர்களைக் காப்பாற்ற முயல்கிறது என்று தெளிவாக தெரிந்த பிறகு, உள்ளூரில் இது தொடர்பாக பேசி பயனில்லை என்று தெரிந்துகொண்டேன். நேரடியாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதானிடம் புகார் கொடுத்தேன்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியை பெற்றோர் அவரின் சொந்த ஊருக்கு அழைத்துச்சென்றுவிட்டனர். மேலும் படிப்பைத் தொடரவேண்டாம் என்று கூறிவிட்டனர். அவரது குடும்பத்தில் முதன் முதலாக கல்லூரியைப் பார்க்கும் ஒரு தாழ்த்தப்பட்ட சமூக மாணவியின் கல்வி வாழ்க்கை சில காமுகர்களால் முடிவுக்கு வந்துவிட்டதே என்ற வேதனையில் நான் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக முறையிட்டேன்.
அதன் பிறகே எனது புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்போது வழக்குத்தான் பதிவு செய்துள்ளார்கள். இந்த நிலையில் மாணவிக்கு மிரட்டல் சென்றுள்ளதாக எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளேன். .
நாடாளுமன்றத்தில் மாணவிக்கு பாதுகாப்பு அளிக்கவும், அவருக்கு நீதிபெற்றுத்தரவும் அவரது கல்வி பாதிக்கப்படாமல் முழுமை பெறவும் அவைத்தலைவரிடம் இதனை முக்கியப் பிரச்சினையாக எடுக்குமாறு கோரிக்கை விடுத்தேன். அவரும் ஆவண செய்வதாக உறுதியளித்தார்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பின்னணியில் இருந்து வரும் மாணவிகளின் வாழ்க்கையில் கல்வி எவ்வளவு முக்கியமானது, அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து உயரவைக்கவேண்டிய நிர்வாகமோ சில உயர்ஜாதிப் பேராசிரியர்களுக்காக மாணவி கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. குறிப்பாக கல்வி நிலையங்களில் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவிகள் மீது உயர் ஜாதி ஆசிரியர்கள்/மாணவர்களால் அதிகம் பாலியல் சீண்டல் மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் .
மாநில அளவில்: உத்தரப் பிரதேசம் (14,311 வழக்குகள், 2022), மத்தியப் பிரதேசம் (10,746), ராஜஸ்தான் (8,023) அதிகமாக வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது பெரும்பாலான பாலியல் வன்கொடுமைக் வழக்குகள் கடுமையான அழுத்தங்களுக்குப் பிறகே பதிவு செய்யப்படுகிறது. அப்படி பதிவு செய்த வழக்குகளில் போதிய சாட்சிகள் இல்லை, மற்றும் பாரபட்சம் காரணமாக 88.3 விழுக்காடு பாதிப்பிற்குள்ளான மாணவிகளுக்கு நீதிகிடைக்காமல் போய்விடுகிறது. பெரும்பாலான மாணவிகள் மிரட்டல் காரணமான புகாரைத் திரும்பப் பெறுகின்றனர்.
கல்வி நிறுவனங்களில் நடக்கும் பாலியல் பாகுபாடு மற்றும் சீண்டல்கள் மாணவிகளின் கல்வியைப் பாதிக்கிறது. தாழ்த்தப்பட்ட சமூக மாணவிகள் பள்ளியிலிருந்து பாதியில் நிற்பதற்கு பாலியல் சீண்டல்கள் மற்றும் மிரட்டல்களால் ‘பாதுகாப்பின்மை’ ஒரு முக்கிய காரணமாக உள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் உயர்கல்வி செல்லும் மாணவிகள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
தேசிய குடும்ப நலம் தொடர்பான புள்ளிவிபரங்களின் படி (2015-2016) 62 விழுக்காடு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 18 வயதுக்குக் கீழ் என்று கூறப்பட்டுள்ளது
தேசிய குற்றவியல் ஆவணங்களின் படி 2019-ஆம் ஆண்டு 2,536 பாலியல் வன்கொடுமை வழக்குகள் 2020 -ஆம் ஆண்டு 4,000 பாலியல் வன்கொடுமை வழக்குகள், 2022-ஆம் ஆண்டு 15,368 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்தியாவிலே பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் அதிக குற்றங்கள் பதிவு செய்யப்படுகின்றன என்றும் குற்றவியல் ஆவணங்களின் புள்ளிவிவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பின்னணியில் வருபவர்களை பாலியல் ரீதியிலான கொடுமைகளைச் செய்தால் பாதிக்கப்பட்டவர்கள் உயர்ஜாதியினரின் மிரட்டலுக்கு அஞ்சி தங்களுக்கு நடந்த கொடுமைகளை வெளியில் சொல்வதில்லை. அப்படியே புகார் கொடுத்தாலும் புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. திருப்பதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் பார்வைக்குச் சென்றதால் ஒரிசா மாநில தாழ்த்தப்பட்ட மாணவியின் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.
தாழ்த்தப்பட்டவர்கள் அதிலும் பெண்கள் படிப்பதைப் பார்ப்பனர்களால் எப்படி ஜீரணித்துக் கொள்ள முடியும்? அதுவும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண் சமஸ்கிருதம் படித்தால் நெஞ்சு பொறுக்குமா? பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும்போது மட்டும் பார்ப்பனர்கள் நம்பும் தீண்டாமை சிறகடித்துப் பறந்து ஓடி விடுமா?
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர், “நீ படித்தது போதும், வீட்டுக்கு வா என்று அழைத்துச் சென்று விட்டார்கள். இதைத்தான், ஆம், இதைத்தான் பார்ப்பனர்கள் எதிர்பார்த்தனர் – அது நடந்தே விட்டது.
