புதுடில்லி, டிச.12 –தமிழ்நாட்டுக்கு கடந்த 10 ஆண்டுகளில் 24 ஆயிரத்து 679 கோடி ரூபாய் அளவுக்கு பேரிடர் கால நிவாரண நிதி கோரப்பட்ட நிலையில், ஒன்றிய அரசோ வெறும் 4 ஆயிரத்து 136 கோடி ரூபாய் நிதியை மட்டுமே வழங்கியுள்ளது.
பேரிடர் கால நிவாரண நிதி
மழை, வெள்ளம், புயல், வறட்சி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒன்றிய குழுக்கள் அனுப்பப்பட்டு பாதிப்புகள் ஆய்வு செய்யப்படுவதுடன், அக்குழு அளிக்கும் பரிந்துரையின்பேரில் ஒன்றிய அரசு பேரிடர் கால நிவாரண நிதியை அறிவித்து வழங்கும். அதேநேரத்தில் மாநில அரசும் பாதிப்புகள் மற்றும் சேதத்தை கணக்கிட்டு உரியத்தொகையை வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தும். இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டை எண்ணற்ற புயல்கள் தாக்கியதால் ஏற்பட்ட மழை, வெள்ளம் உள்ளிட்டவற்றால் மனித உயிர்சேதம், பொருட்சேதம், கால்நடைகள் உயிர் சேதம், பயிர்கள் சேதம் உள்ளிட்ட கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. இந்நிலையில், பெரும் இழப்பு மற்றும் சேதங்கள் உள்ளிட்ட பாதிப்புகளுக்காக மாநில அரசு சார்பில் 24 ஆயிரத்து 679 கோடியே 77 லட்சம் ரூபாய் பேரிடர் கால நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
நிவர், வர்தா, ஒக்கி, மிச்சாங் உள்ளிட்ட புயல்களால் பெய்த பெருமழை மற்றும் வரலாறு காணாத வெள்ளத்தால் பலத்த சேதம் மற்றும் பாதிப்புகள் ஏற்பட்டதால், சீரமைப்பு பணிகளுக்கும், மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் பேரிடர் கால நிவாரண நிதியை விரைந்து ஒதுக்கீடு செய்து விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
ரூ.4 ஆயிரத்து 136 கோடி
ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க., அரசோ மிக சொற்ப நிதியை மட்டுமே அறிவித்து இதுவரை வழங்கியுள்ளது. அந்தவகையில், கடந்த 10 ஆண்டுகளில் 24 ஆயிரத்து 679 கோடியே 77 லட்சம் ரூபாய் பேரிடர் கால நிவாரண நிதி கோரப்பட்டநிலையில், ஒன்றிய அரசோ வெறும் 4 ஆயிரத்து 136 கோடி ரூபாய் நிதியை மட்டுமே வழங்கியுள்ளது.
இது கோரப்பட்ட நிதியில் வெறும் 17 சதவிகிதம் மட்டுமே ஆகும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு தனது சொந்த நிதியை பயன்படுத்தி மழை சேதங்களை சீர் செய்து வருவதுடன், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய நிவாரணமும் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
