ஒன்றிய பாஜக அரசு கொண்டுவர துடிக்கும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்ட மசோதாவிற்கு பின்னடைவு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, நவ.30 மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவரத் துடிக்கும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, தற்போது அதை ஆய்வு செய்யும் நாடாளுமன்றக் குழுவே குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. இதனால் மேலும் பலருடைய கருத்துகளைக் கேட்கக் கால அவகாசம் கோர வேண்டிய நிலைக்கு அக்குழுத் தள்ளப்பட்டுள்ளது.

மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துகிறோம் என்ற போர்வையில், மாநில சுயாட்சியை நீர்த்துப்போகச் செய்யும் வகையிலான அரசியல் சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் திணிக்க முயன்றது. பாஜக மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் பி.பி. சவுத்ரி தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு, இதற்காக அமைக்கப்பட்ட போதிலும், நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்புகளால் உரிய நேரத்தில் முடிவெடுக்க முடியாமல் திணறுகிறது.

அவசர கதியில்…

இக்குழுவின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள குளிர்காலக் கூட்டத்தொடரின் போது முடிவடைய உள்ள நிலையில், அவசரகதியில் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாத சூழல் உருவாகியுள்ளது. தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் இந்தத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், வேறு வழியின்றி குழுவின் பதவிக்காலத்தை நீட்டிக்க நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட உள்ளது. இதுகுறித்து பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்றக் குழுவின் தலைவர் பி.பி. சவுத்ரி கூறுகையில், ஆய்வை நிறைவு செய்ய கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், இந்த மசோதா அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை என்று அவர் கூறுவது, எதிர்க்கட்சிகள் மற்றும் சட்ட நிபுணர்களின் வாதங்களுக்கு முரணாக உள்ளது.

கூட்டாட்சித் தத்துவத்திற்கு வேட்டு

இதனிடையே, கூட்டாட்சி தத்துவத்திற்கு வேட்டு வைக்கும் ஒன்றிய பாஜக அரசின் இந்த முயற்சிக்கு, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சட்ட ஆணையம் ஆதரவு தெரிவித்துள்ளது. ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தும் இந்தச் சட்டத்தை, ‘நாட்டின் நலன் சார்ந்தது’ என்றும், ‘நாடாளுமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது’ என்றும் கூறி, பாஜக அரசின் விருப்பத்தையே ஒன்றிய சட்ட ஆணையம் தனது அறிக்கையாக அளித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. தேர்தல் செலவினங்களைக் குறைப்பதாகக் காரணம் காட்டி, மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்கும் செயலை ‘ஜனநாயகத்தை வலுப்படுத்துவது’ என்று ஒன்றிய சட்ட ஆணையம் கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஒன்றிய சட்ட ஆணையம் மற்றும் தலைமை தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதிகள் வரும் டிசம்பர் 4ம் தேதி நாடாளுமன்றக் குழுவின் முன் ஆஜராக உள்ளனர்.

வரம்பற்ற அதிகாரம்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் பதவிக்காலத்தை குறுக்கும் வகையிலும், சட்டமன்றத் தேர்தலை ஒத்திவைக்கத் தேர்தல் ஆணையத்திற்கு வரம்பற்ற அதிகாரம் அளிக்கும் வகையிலும் உள்ள ஆபத்தான விதிகளுக்குச் சட்ட ஆணையம் ஆதரவு தெரிவித்துள்ளது ஜனநாயக ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு இத்தகைய வரம்பற்ற அதிகாரம் அளிக்கப்படுவதை மேனாள் தலைமை நீதிபதிகள் பலரே கேள்வி எழுப்பியுள்ளனர். இருப்பினும், ஜனநாயகத்தைக் காப்பதில் நீதித்துறையைப் போலவே தேர்தல் ஆணையமும் பங்காற்றுவதாகக் கூறி, சட்ட ஆணையம் அளித்துள்ள விளக்கம், பாஜக அரசின் எதேச்சதிகாரப் போக்கை நியாயப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

நாளை   (டிச. 1) நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை மற்றும் கடும் எதிர்ப்பு காரணமாக, இந்தத் கூட்டத்தொடரில் பாஜக அரசால் இந்த சர்ச்சைக்குரிய மசோதாவை நிறைவேற்ற முடியாது என்று அரசியல் பார்வையாளர்கள் அடித்துச் சொல்கின்றனர்.

                   அனைத்துக் கட்சி கூட்டம்  

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை டிசம்பர் 1ஆம் தேதி  தொடங்கவுள்ள நிலையில், இன்று (நவம்பர் 30) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சுமுகமான சூழலை ஏற்படுத்தவும், கூட்டத்தொடரை எவ்வித அமளியும் இன்றி நடத்தவும் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பைக் கோரும் வகையில் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக இது போன்ற கூட்டங்கள் நடத்தப்படுவது மரபாகும்.

இக்கூட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய மசோதாக்கள், எதிர்க் கட்சிகள் எழுப்பத் திட்டமிட்டுள்ள பிரச் சினைகள் மற்றும் அவை அலுவல் நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *