போபால், நவ.27- மத்தியப் பிரதேசத்தின் பட்டியல் ஜாதி மற்றும் பட்டியல் பழங்குடி ஊழியர்கள் சங்கத்தின் மாகாணத் தலைவரும் மூத்த அய்ஏஎஸ் அதிகாரியுமான சந்தோஷ் வர்மா கடந்த 23.11.2025 அன்று போபாலில் உள்ள அம்பேத்கர் மைதானத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அங்கு அவர் பேசியதாவது,”ஒரு பார்ப்பனர் தனது மகளை என் மகனுக்குக் கொடுக்கும் வரை அல்லது அவருடன் உறவை வளர்த்துக் கொள்ளும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த காணொலி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியதால், வர்மாவின் பேச்சை பார்ப்பன அமைப்புகள் கடுமையாகக் கண்டித்துள்ளன. சந்தோஷ் வர்மாவின் கூற்று ஆபாசமானது, ஜாதிய ரீதியானது மற்றும் பார்ப்பனப் பெண்களை அவமதிக்கிறது என அவ்வமைப்புகள் தெரிவித்துள்ளன.
விரைவில் அவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையெனில், பார்ப்பன சங்கம் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தும் என அகில இந்திய பார்ப்பன சங்கத்தின் மாநிலத் தலைவர் புஷ்பேந்திர மிஸ்ரா எச்சரித்துள்ளார்.
அகமண முறைகளினாலேயே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்திருக்கும் ஜாதிக்கு எதிராக ஜாதி மறுப்புத் திருமணங்களைப் பற்றியும், பார்ப்பன ஆதிக்கம் பற்றியும் பேசியதே அவர்களுக்கு ஆபாசமாகத் தெரிகிறதாம்!
தூத்துக்குடி மாவட்டத்தில் 143.50 மி.மீ. மழை பதிவு
தூத்துக்குடி, நவ.27- தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் (25.11.2025) காலை 6.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 143.50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் மழையளவு குறைந்துள்ளது. 25.11.2025 அன்று காலை 6.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 143.50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 38 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
குலசேகரன்பட்டினம் 27 மி.மீ., திருச்செந்தூா் 21மி.மீ., ஸ்ரீவைகுண்டம் 14.70 மி.மீ., சாத்தான்குளம் 13.80 மி.மீ., சூரங்குடி 13 மி.மீ., வேடநத்தம் 6 மி.மீ., வைப்பாா் 4 மி.மீ., எட்டயபுரம் 3 மி.மீ., கீழஅரசரடி 2 மி.மீ., தூத்துக்குடி 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தம் 143.50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சராசரியாக 7.55 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மின்வாரிய ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

சென்னை, நவ.27- மின் பகிர்மான கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 58 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
இதுகுறித்து மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு:
தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை 58 சதவீதமாக உயர்த்தியது.
இந்த ஆணையை பின்பற்றி தமிழ்நாடு மின்பகிர்மான கழக ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் 2025 ஜூலை 1 முதல் அகவிலைப்படியை 58 சதவீதமாக உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளது.
அகவிலைப்படி நிலுவைத் தொகையை பணமில்லா பரிவர்த்தனை முறை மின்னணு தீர்வு சேவை மூலம் நவம்பர் மாத ஓய்வூதியத்துடன் வழங்கப்படும்.
