பெங்களூரு, நவ.13- டில்லி கார் வெடிப்பு சம்பவம், ஒன்றிய அரசின் தோல்வி. இதுபற்றி நாடாளு மன்றத்தில் பிரச்சினை எழுப்புவோம் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
இறுதி அறிக்கை
காங்கிரஸ் தலைவரும், மாநிலங் களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே. பெங்க ளூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறிய தாவது:-
டில்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் மிக மோசமானதாகும். உளவுத்துறையும், பாதுகாப்புக்கு பொறுப்பேற்றுள்ள முக்கிய அமைப்புகளும் டில்லியில்தான் இயங்கி வருகின்றன. அத்தனை அமைப்புகள் இருந்தும் டில்லியில் இப்படி நடந்திருப்பது, ஒன்றிய அரசின் தோல்வியை காட்டுகிறது. தற்போது, தேசிய புலனாய்வு முகமை யிடம் விசாரணை ஒப்படைக்கப் பட்டுள்ளது. அதன் இறுதி அறிக்கை வருவதற்காக காத்திருக்கிறோம்.
தண்டனை
கார் வெடிப்பு குறித்து பாரபட்ச மற்ற விசாரணை நடத்த காங்கிரஸ் கோரியுள்ளது. இதன் பின்னணியில் இருப்பவர்களுக்கு ‘முன்மாதிரியான தண்டனை’ அளிக்கவேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்கு இதுபோல் செய்ய துணிச்சல் இருக்காது. டிசம்பர் 1-ஆம் தேதி நாடாளு மன்றம் கூடுகிறது. அங்கு இப்பிரச் சினையை எழுப்புவோம்.இவ்வாறு அவர் கூறினார்.
பீகார் தேர்தல் கருத்துக்கணிப்பு பற்றிய கேள்விக்கு, “அரியானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தான் வெற்றிபெறும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் தேர்தல் முடிவுகள் நேர் எதிராக வந்தன. எனவே, 14-ஆம் தேதி வரை காத்திருப்போம்” என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
அமித்ஷா பதவி விலக வேண்டும்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் திருவனந்தபுரத் தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மும்பை குண்டுவெடிப்பு நடந்தபோது, அப்போதைய உள்துறை அமைச்சர் பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகள் கேட்டன. அவரும் தார்மீக பொறுப்பேற்று பதவி விலகி னார். அதுபோல், டில்லி கார் வெடிப்பு சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும். இது ஒரு கடுமையான பாதுகாப்பு தோல்வி.
அமித்ஷா, தனது நிர்வாகத்தில் நாட்டில் கலவரமோ, குண்டு வெடிப்போ நடக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் பொய் சொல்லி வந்தார். தற்போது, அவரது கண் எதிரில், அவரது அலுவலகத்துக்கு மிக அருகில் கார் வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. ஒன்றிய அரசு தெளிவான விசாரணை நடத்தி, பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
