ராமேஸ்வரம், நவ. 9– இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 29 மீனவர்களுக்குச் சிறைக் காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 10 ஆம் தேதி வரை இவர்களுக்குச் சிறைக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 28 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளில், பாக்ஜலசந்தி கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரு ஆழ்கடல் விசைப்படகுகளுடன் சென்ற 29 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
நீதிமன்ற வாய்தா நாளான நவம்பர் 7, 2024 அன்று, மீனவர்கள் ஊர் காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்களுக்கு நவம்பர் 10 வரை சிறைக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து, மீனவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
