மத்தியப் பிரதேசத்தில் தீபாவளி அன்று, 122-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ‘‘கார்பைடு கன்’’ என்ற பட்டாசு வெடிப்பினால் கடுமையான கண் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 14 குழந்தைகள் தங்கள் கண் பார்வையை நிரந்தரமாக இழந்துள்ளனர். மற்றவர்களுக்கும் பார்வை திரும்புவது கடினம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சந்தைகளில் வெறும் 50 முதல் 100 வரை ‘மினி பீரங்கிகள்’ என்று கூறி விற்கப்படும் இந்தகார்பைடு எனப்படும் ஆபத்தான வேதிப்பொருளில் இருந்து தயாரிக்கப்படும் துப்பாக்கி பட்டாசு போல வெடிக்கின்றன.
இது சிறியவகை வண்ணமயமான ஒளியோடு வெடிப்பதால் ஆபத்து இல்லை என்று கூறி பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு வாங்கித் தந்துள்ளனர். ஆனால் வெடித்த பிறகு அதிலிருந்து கிளம்பும் புகை ஆபத்தான கார்பைடு என்ற வேதிப்பொருள் வெளிப்படுத்தும் புகை ஆகும்.
இது தோலில் பட்ட உடன் தோல் எரிச்சலும் கண்ணில் பட்டது மேல்விழிப்படலம் முழுவதும் அரித்துவிடுகிறது இதனால் விழித்திரவம் வெளிவந்து விழிகள் இருந்த இடத்தில் இரண்டு பள்ளம் மட்டுமே காணப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர் வாக்குமூலம்
ஹமீடியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 17 வயது நேஹா, “நாங்கள் வீட்டிலேயே கார்பைடு கன் வாங்கினோம். அது வெடித்தபோது, என் ஒரு கண் முழுவதும் எரிந்துவிட்டது. என்னால் எதையும் பார்க்க முடியவில்லை,” என்று அழுதுகொண்டே கூறியுள்ளார். மற்றொருவர் எனது மகன் கேட்கிறானே என்று வாங்கி கொடுத்தேன் அது என் முகத்தில் வெடித்தது… நான் என் இரண்டு கண்ணை இழந்தேன்,” என்று தெரிவித்துள்ளார். போபால், இந்தூர், குவாலியர் போன்ற பெரு நகரங்களில் உள்ள மருத்துவமனைகளின் கண் சிகிச்சை வார்டுகள், இந்த வெடி விபத்துகளால் பாதிக்கப்பட்ட இளம் மருத்துவப் பயனாளிகளால் நிரம்பி வழிகின்றன.
மருத்துவர்கள் இது குறித்து கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஹமீடியா மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர். மனிஷ் ஷர்மா, “இந்தக் கருவி கண்களுக்கு நேரடி சேதத்தை ஏற்படுத்துகிறது. வெடிப்பதன் மூலம் உலோகத் துண்டுகள் மற்றும் கார்பைடு ஆவிகள் (vapors) வெளியேறி விழித்திரையைச் (retina) சுடுகின்றன. பல குழந்தைகளின் கண் கருவிழிகள் (pupils) சேதமடைந்து நிரந்தரப் பார்வையிழப்பை ஏற்படுத்தியுள்ளன,” என்று தெரிவித்துள்ளார். இவர்கள் மீண்டு வந்தாலும், பலர் முழுப் பார்வையையும் மீண்டும் பெற வாய்ப்பில்லை.
கார்பைடு பட்டாசை பிளாஸ்டிக் அல்லது தகரக் குழாய்களைப் பயன்படுத்தி உருவாக்குகிறார்கள். அதில் வெடிமருந்து, தீக்குச்சி குச்சிகளின் தலைகள் மற்றும் கால்சியம் கார்பைடு (Calcium Carbide) ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர்.
குழாயில் உள்ள சிறிய துளையின் வழியாகத் தீயைப் பற்ற வைக்கும்போது, உள்ளே இருக்கும் இரசாயனங்கள் அதிவேகமாக வினைபுரிகின்றன. கால்சியம் கார்பைடு தண்ணீருடன் (அல்லது காற்றில் உள்ள ஈரப்பதத்துடன்) சேரும்போது, அதிக எரியும் தன்மையுடைய அசெட்டிலீன் வாயுவை உருவாக்குகிறது. இந்த வாயு, வெடிமருந்துடன் சேர்ந்து தீப்பற்றும்போது, சக்தி வாய்ந்த வெடிப்பை ஏற்படுத்துகிறது.
இந்தக் கூர்மையான குழாயில் ஏற்படும் வெடிப்பால், உடைந்த பாகங்கள், கார்பைடு துகள்கள் மற்றும் வெப்பமான வாயு ஆகியவை நேரடியாக முகம் மற்றும் கண்களைத் தாக்கி, கடுமையான காயங்களை ஏற்படுத்துகின்றன.
இந்த அபாயகரமான பட்டாசு பிரபலமாவதற்கு முக்கியக் காரணம், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் யூடியூப் ஷார்ட்ஸ் தான் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
“Firecracker Gun Challenge” என்ற பெயரில் பரவி வரும் காணொலிகள், இளைஞர்களைப் போலச் சத்தமிட்டுச் சுட்டு ரசிக்கத் தூண்டுவதால், இந்தபட்டாசு பரவலுக்கு காரணமாக அமைந்துள்ளது.
