புதுடில்லி,அக்.21 ஏக்லவ்யா மாதிரி விடுதிப் பள்ளிகள் (Eklavya Model Residential Schools) என்பவை பழங்குடியின மாணவர்களுக்காக ஒன்றிய அரசு நடத்தும் உண்டு உறைவிடப் பள்ளிகளாகும். இந்த பள்ளிகளில் மாணவர்களுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் கல்வி, உணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஏக்லவ்யா பள்ளிகள், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்நிலையில், ஒன்றிய பழங்குடி விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் “பழங்குடியின மாணவர்களுக்கான தேசிய கல்விச் சங்கம் (NESTS)” அனைத்து ஏக்லவ்யா மாதிரி விடுதி பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில்,”ஏக்லவ்யா பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் ஹிந்தி மொழியில் ஆர்வத்தை வளர்க்க வேண்டும். அதற்காக ஒவ்வொரு ஏக்லவ்யா பள்ளியிலும் ஒரு தனி “ஹிந்தி மொழி அறை (Hindi language room)” அமைக்க வேண்டும். அந்த அறைகளில் புகழ் பெற்ற ஹிந்தி எழுத்தாளர்களின் படங்கள், இலக்கிய விளக்கப்படங்கள், ரேடியோ, டேப் ரெக்கார்டர், தொலைக்காட்சி போன்றவை இருக்க வேண்டும். ஹிந்தியில் கவிதை, விவாதம், கட்டுரை எழுதுதல் போன்ற போட்டிகளும் நடத்த வேண்டும்.
இந்த மொழியைக் கற்பிக்கும் பொறுப்பு மொழி ஆசிரியரிடம் மட்டுமல்ல, பள்ளிக்குள் உள்ள பிற ஆசிரியர்களுக்கும் உள்ளது. அதாவது கணிதம், அறிவியல் மற் றும் சமூக அறிவியல் ஆசிரியர்களும் ஹிந்தி ஆசிரியர்களின் பங்கை ஏற்க வேண்டியிருக்கும்” என கூறப்பட்டுள்ளது. பல்வேறு பாடங்களின் ஆசிரியர்களும் இந்தி கற்பிக்கும் கடமையைப் பெற வேண்டிய சூழல் உருவாகும் என்பதால் இந்திய கல்வித் துறையிலேயே இதுபோன்ற சுற்றறிக்கை முதல்முறையாக விடுக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.
கண்டனம்
ஏக்லவ்யா பள்ளிகள், பழங்குடி மாணவர்களுக்கு அவர்களின் சொந்த சமூகத்திலேயே தரமான கல்வியை வழங்குவதோடு மட்டுமல்லாமல் , அவர்களின் கலாச்சார மற்றும் மொழிப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காகத் தொடங்கப்பட்டவை ஆகும். ஆனால் பழங்குடியின மாணவர்களுக்கான தேசிய கல்வி சங்கத்தின் உத்தரவு, ஹிந்தி மொழியைத் திணிப்பதாகவும், பழங்குடி மொழிகள் மற்றும் அடையாளங்களை அச்சுறுத்துவதாகவும் கருதப்படுகிறது. குறிப்பாக மாணவர்களின் தாய்மொழியில் கல்வி கற்பது அறிவாற்றல் வளர்ச்சிக்கு முக்கியமானது. மாணவர்கள் புரிந்துகொள்ளாத ஹிந்தியைக் கட்டாயப்படுத்துவது, அவர்களின் படைப்புத் திறன் மற்றும் கல்வி வெற்றியைப் பாதிக்கும் என மொழியியல் நிபுணர்கள் கண்டனத்துடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
