திராவிட இயக்கம், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், இன்றைய தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான நமது மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் மற்றும் தாய்க் கழகத்தின் மீதும் நம் மீதும் அளவிலா கொள்கைப் பற்றுடன் சிவகங்கையில் வாழ்ந்த திராவிடர் இயக்கத் தீரரும், சிவகங்கை நகர் மன்றத்தின் சிறப்புமிகு தலைவராக பணியாற்றியவருமான மானமிகு சொ.லெ.சாத்தையா என்ற பெருமகனார் (வயது 90) நேற்று மறைந்தார் என்பது மிகுந்த துயரத்திற்குரிய செய்தியாகும்.
முன்பு ஒரு காலத்தில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் சிவகங்கைக்குக் கொள்கைப் பரப்பரைக்கு வந்த நாளில் வழியெங்கும் பழைய செருப்புகளைக் கொண்டு செருப்புத் தோரணம் கட்டிய அதே ஊரில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நகர் மன்றத் தலைவராகி, தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கும், அவரது தொண்டனான எனக்கும் நகர்மன்ற வரவேற்புத் தந்ததன் மூலம் திராவிட இயக்கக் கொள்கை வெற்றியைப் பறைசாற்றி மகிழ்ந்தவர்.
அவரது கொள்கைப் பற்று, மற்ற அனைவரிடமும் அன்புடனும் பண்புடனும் பழகுதல் ஆகியவை எடுத்துக்காட்டானவையாகும். மறைந்த பெரு மகனாருக்கு நமது வீரவணக்கமும் இரங்கலும்! அவர்களது குடும்பத்தினருக்கு, குறிப்பாக அவரது அன்பு மகன் அன்பழகன் அவர்களுக்கு நமது ஆறுதல்!
(கி.வீரமணி)
தலைவர்,
திராவிடர் கழகம்
13.10.2025
சென்னை