– ஆரூர் புதியவன்
கருவூர் –
உயிர்களைச்
சுமக்கும் ஊர்..
அது இடுகாடானது
ஏன் ..?
இதயங்களை
சுட்டெரித்தது ஏன்..?
அறியாமையின்
திரள்..
அகம்பாவ இருள்..
இரண்டும்
இணைந்த புள்ளியில்
எரிந்தது கொள்ளி..!
கருகிச் சாம்பலாகின
மானமும் அறிவும்..!
அரியாசனங்களுக்காக
அறியாத சனங்களைப்
பலியிடும் பயங்கரவாதம்
இந்த
அறிவியல் யுகத்திலும்
அதிவிரைவாய் அதிகரிப்பது
எவ்வளவு அவலம்..?
திரையிலாடும்
ஒரு நரியின்
பதவிப் பசியாற்ற
பசுக்களும் கன்றுகளும் தம்மை
பலியிட்டுக் கொள்வது
எத்தனைக் கொடுமை..?
40 உயிர்கள்
போகின்றன…
குழந்தைகள்
பெண்கள்
சாதிக்க வேண்டிய இளையோர்கள்
என ஒரு
பதவிப்பித்தர்களின்
வீதி நாடகத்தில் திருப்பலிகளாக
தெருப்பலிகள்..
மாலைகளோடு
மாலை வரை நின்றவர்களுக்கு
மலர் வளையங்கள் வைக்கப்பட்டன..!
ஏழுமணி நேரம்
தாமதமாய் வந்த
அகம்பாவன்
40 உயிர்களைப்
பிணவூர் அனுப்பிவிட்டு
40 மணித்துளியில்
பனையூர் திரும்பல்..
நான்கு மணி
நேரத்துக்குப் பின்
நரபலி நாயகனின் பதிவு
‘இதயம் உடைந்து உள்ளதாக’
அந்த உடைந்த
இதயத்துக்குள்
ஒய்யாரமாய் தெரிகிறது
‘எனக்காக எத்தனை பேர்
சாகிறார்கள் பார்’ என்ற ஆணவம்..!
‘விலைவாசி உயர்வை எதிர்க்கிறேன்’ என்று
மனித உயிர்களை மலிவாக்கும் மடமை
அப்பாவி மக்களே..!
அறியாமை சாம்ராஜ்யத்தின் அரசர்களே..!
உங்கள்
மூடத்தனமான
நடிக வழிபாடு தான் மூர்க்கர்களுக்கு
மூலதனமாக உள்ளது..
அறம் சார்ந்த தலைவர்கள்
உறங்கும் சமூகம்
விழிக்க உழைத்தார்கள்
திடீர்த் தலைவர்களாகிவிட்ட
திரைக்கூத்தாடிகள்
தன் கவர்ச்சியில்
கிறங்கும் சமூகத்தை
அழிக்க அழைக்கிறார்கள்..!
அச்சமற்று
துள்ளிப் பாய்கின்றன அணில்கள்
அவர்களை மயக்குவது நச்சுக்கனி
என்று அறியாமல்..
கரூர் அவலத்தை
அரசியல் கண்ணாடி
அணிந்து பார்ப்பதை விட
அறத்தின் கண் கொண்டு
ஆழ்ந்து நோக்குதல்
அவசியம் ..
கந்தையான மக்கள்
மந்தையாக்கப்பட்டு
ஃபாசிசச்
சந்தையில் விற்கப்படுவதை
சிந்தை செய்யாத
விந்தை..! இன்று
இந்த மூடத்தை
உடைக்கும்
பாடத்தைத் தந்தார்
பெரியார் என்னும்
தந்தை அன்று..!
ஒரு நடிகனின் பதவி மோகத்திற்காக
தங்கள்
ஆருயிரைப் பணயம் வைக்கும்
அப்பாவிகளே.!
அறிந்து கொள்ளுங்கள்..
இயக்குநர் சொன்னபடி இயங்குவதே
நடிகனின் வேலை..
இப்போது
இயக்குநர் யார்.?
என்று
வெகுமக்கள் அறியாது இருப்பதுதான்
இந்த ஆட்டங்களுக்கு
எல்லாம் அடிப்படை காரணம்..!
சடலங்களில் நடந்து
பதவிகளில் அமரும்
பயங்கரக் கும்பல் ஒன்று
தமிழ்நாட்டில்
தன் சொந்தப் படத்திற்கு
ஷூட்டிங் நடத்துகிறது.
பலியாடுகளாக இந்தப்
பாவப்பட்ட மக்கள்..!