அம்னஸ்டி இன்டர் நேஷனல் இந்தியாவின் தலைவர் அம்பலப்படுத்துகிறார்
அம்னஸ்டி இன்டர்நேஷனல் இந்தியாவின் தலைவர் ஆகார் படேல், 2025ஆம் ஆண்டுக்கான அம்னஸ்டியின் வரவிருக்கும் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவில் மனித உரிமை நிலைமை மிகுந்த கவலையளிப்பதாக விவரிக்கிறார். அரசின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் ஜனநாயக சுதந்திரங்களைச் சுருக்கும் ஒரே நோக்குடன் இயங்குவதாக அவர் கூறுகிறார்.
உத்தரகாண்டில் “ஒரே சிவில் சட்டம்” மூலம் தனிநபர் உறவுகளை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது முதல், ராஜஸ்தானிலும், மகாராட்டிராவிலும் மதச்சார்பற்ற திருமணங்களுக்கு எதிரான சட்டங்கள் வரை — பல்வேறு மாநிலங்களில் தனிநபர் சுதந்திரத்தைக் குறைக்கும் நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நகைச்சுவையாளர்கள், பாடகர்கள், பத்திரி கையாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிறுபான்மையினர் மீது, குறிப்பாக முஸ்லிம்கள் மீது துன்புறுத்தல்கள் அதி கரித்துள்ளன — பகல்காம் தாக்குதலுக்குப் பின் வெறிச்செயல்கள், வீடுகள் இடிப்பு, அசாமில் மக்கள் வெளியேற்றம், மேலும் ரோஹிங்யாக்கள் கடலில் தள்ளப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்கள் இதற்குச் சாட்சியாகின்றன. எதிர்ப்பாளர்கள் பலர் கடுமையான UAPA சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்சார் நடவடிக்கைகளும் வலுத்துள்ளன — ஆயிரக்கணக்கான சமூக ஊடகக் கணக்குகள் முடக்கப்பட்டன, காஷ்மீரில் 25 புத்தகங்கள் தடைசெய்யப்பட்டன, பாலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.
உலகளாவிய கவலை
அதிகரித்து வருகிறது
அதிகரித்து வருகிறது
அய்.நா. மனித உரிமைகள் உயர் ஆணை யர், இந்தியா கட்டுப்பாட்டுச் சட்டங்களை தவறாகப் பயன்படுத்தி, குடியியல் சமு தாயத்தின் குரலை அடக்கி உள்ளதாகவும், குறிப்பாக காஷ்மீரிலும், மணிப்பூரிலும் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார். ஆனால், இந்திய அரசு இவ்விமர்சனங்களை “அடிப்படையற்றவை” என மறுத்துள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் ஜனநாயக சுதந்திரங்கள், பொறுப்புணர்வு மற்றும் சட்டத்தின் ஆட்சியை ஆபத்துக்கு உள்ளாக்கு வதாகவும், இந் நிலைமைமீது உலகம் தீவிரமாக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாகவும் ஆகார் படேல் கூறுகிறார்.
இதுகுறித்து அவர் ‘‘சுதந்திரம், பொறுப்பு ணர்வு, சட்டத்தின் ஆட்சி ஆகியவை குறைந்து, இந்தியாவின் நிலையை அய்.நா. உள்பட பன்னாட்டுச் சமூகம் தீவிரமாக கவனிக்கத் தொடங்கி உள்ளது’’ என்று ‘டெக்கான் கிரானிக்கிள்’ ஏட்டுக்குப் பேட்டி யளித்துள்ளார்.
சுருக்கமாகச் சொல்வதானால், அரசின் ஆணவ ஆட்சியும், விமர்சனங்களை ஏற்காத தன்மையும், இந்தியாவின் ஜனநாயக மரியாதையையும் பன்னாட்டு நல்ல பெயரையும் பெருமளவில் சேதப்படுத்தி வருகின்றன.
-கோ.கருணாநிதி
வெளியுறவு செயலாளர்,
திராவிடர் கழகம்