பத்தனம்திட்டா அக்.6- சபரிமலை அய்யப்பன் கோயில் தங்கம் காணாமல் போன விவகாரத்தில், விஜய் மல்லையா நன்கொடையாக வழங்கியது தங்கத் தகடுகள் அல்ல; செம்பு கலக்கப்பட்டவை என்று தகவல் வெளியாகி உள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயில் கருவறையின் வெளிப்புறம் மற்றும் பீடத்துடன் கூடிய 2 துவாரபாலகர் சிலைகளுக்கு கடந்த 1999ஆம் ஆண்டு தங்கத் தகடுகள் பொருத்தப்பட்டன. இதற்கு மேனாள் தொழிலதிபர் விஜய் மல்லையா நன்கொடையாக வழங்கிய 30 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டது. இந்த நிலையில், 2 துவாரபாலகர் சிலைகள் மற்றும் அதன் பீடத்தின் மீது உள்ள தகடுகளுக்கு தங்க முலாம் பூசும் பணி பெங்களூரு தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போற்றியிடம் தரப்பட்டது. பணி முடிந்த பிறகு, சென்னையில் உள்ள பிரபல நடிகர் ஜெயராம் வீட்டுக்கு அந்த தகடுகளை கொண்டு சென்று பூஜை போட்டுள்ளனர். அப்போது ஜெயராம் தட்சிணையாக பணம் கொடுத்துள்ளார். பின்னர் தங்க முலாம் பூசிய தகட்டை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர். இதற்கிடையே, 42.8 கிலோவாக இருந்த தகடுகளில் 4 கிலோ தங்கம் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து உன்னிகிருஷ்ணன் போற்றி கூறும்போது, “துவாரபாலகர் சிலைகள் பராமரிப்புக்காக கொடுக்கப்பட்டபோது என்னிடம் கொடுத்த ஆவணத்தில் செம்பால் ஆன தகடுகள் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவேளை தங்க முலாம் தேய்ந்து போய் இருக்கலாம். அதனால் திருவாங்கூர் தேவசம் போர்டு தங்க முலாம் பூச முடிவு செய்திருக்கலாம்’’ என்றார்.
நடிகர் ஜெயராம் கூறும்போது, ‘‘சென்னையில் உள்ள தொழிற்சாலையில் ‘எலெக்ட்ரோ பிளேட்டிங்’ பணிக்காக தங்கத் தகடுகள் கொடுக்கப்பட்டுள்ளதாக உன்னிகிருஷ்ணன் என்னிடம் கூறினார். உடனே நண்பர்களுடன் சென்று பார்வையிட்டேன். கோயிலுக்கு அனுப்பி வைப்பதற்கு முன்பு எனது வீட்டில் சிறிது நேரம் வைத்து பூஜை செய்ய முடியுமா என்று கேட்டேன். அவரும் ஒப்புக்கொண்டதால், சபரிமலை கோயில் தங்கத் தகடுகளை என் வீட்டுக்கு கொண்டு வந்து பூஜை செய்தனர். உடனடியாக கோயிலுக்கும் அனுப்பி வைத்தனர். இதற்காக, உன்னிகிருஷ்ணனுக்கு நான் பணம் எதுவும் தரவில்லை’’ என்றார்