* வீர வணக்கம்! வீர வணக்கம்! சுயமரியாதைச் சுடரொளிகளுக்கு வீர வணக்கம்!! * ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்திடக் காலக் கெடு அவசியம் தேவை!
* கிரீமிலேயர் ஒழிக்கப்பட வேண்டும்! தனியார்த் துறையிலும் இடஒதுக்கீடு தேவை! * ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டும்!
* பெண்களுக்குத் தற்காப்புப் பயிற்சி தேவை! * மூடநம்பிக்கை ஒழிப்புக்குத் தனி சட்டம் தேவை!
* ஜாதி ஆணவக் கொலையைத் தடுக்க சட்டம் கொண்டு வருக! * ‘திராவிட மாடல்’ ஆட்சியின் செயல்பாட்டுக்குப் பாராட்டுகள்!
2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அணி வெற்றி பெற வேண்டும்
அதற்காக முழு மூச்சுடன் உழைப்போம் – களப் பணியாற்றுவோம்
ஆர்.எஸ்.எஸ். அபாயத்தை முறியடிப்போம்
ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்திட காலக்கெடு, தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு, ஆளுநர் பதவி அகற்றம், பெண்களுக்குத் தற்காப்புப் பயிற்சி, 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் பெரு வெற்றி பெற உழைப்போம், ஆர்.எஸ்.எஸ். அபாயத்தை முறியடிப்போம் என்பன உட்பட 28 தீர்மானங்கள் திராவிடர் கழகத்தின் சார்பில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில், இன்று (4.10.2025) மறைமலை நகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம் 1 (அ):
முன்மொழிபவர்: க. சிந்தனைச்செல்வன்
(தலைமை செயற்குழு உறுப்பினர்)
வீரவணக்கத் தீர்மானம்
தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்று, வாழ்நாள் எல்லாம் அக்கொள்கை வழி நின்று, எத்தனையோ இடர்ப்பாடுகளுக்கும் தடைகளுக்கும் இடையே இயக்கப் பணியாற்றி, தியாகத் தீயில் குளித்தெழுந்த “சுயமரியாதைச் சுடரொளிகளுக்கு” இம்மாநாடு தனது தலைதாழ்ந்த வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
(எல்லோரும் எழுந்து நின்று “வீரவணக்கம்! வீரவணக்கம்!! சுயமரியாதைச் சுடரொளிகளுக்கு வீரவணக்கம்!!!” என்று கைகளை உயர்த்தி முழக்கமிட்டனர்)
த.வெ.க. தலைவரும், சினிமா நடிகருமான விஜய் 27.9.2025 மாலை கலந்துகொண்ட கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் மக்கள் நெரிசல் காரணமாக கைக்குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் கோரமாக மரணமடைந்தது பெரும் அதிர்ச்சிக்குரியது.
மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் இம்மாநாடு ஆழ்ந்த இரங் கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 1 (ஆ):
முன்மொழிபவர்: சந்திரசேகர் (கோவை மாவட்ட கழக தலைவர்)
தமிழ்நாடு அரசின் விரைவான நிவாரணப் பணிகள்
இதுபோன்ற துயரங்கள் இனி எந்த நிலையிலும் நிகழாமல் இருக்க வேண்டும் என்றும், இந்த மனிதநேயமற்ற மாபெரும் குற்றத்திற்குக் காரணமாக இருந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே பொதுவானவர்களின் கருத்தும் எதிர்பார்ப்புமாகும்.
இந்தத் துயர நிகழ்வு நடந்த செய்தி வெளிவந்த அந்தத் தருணத்திலேயே, ஒரு மணித்துளி கூடத் தாமதம் செய்யாது, தேவையான அனைத்துப் பணிகளையும் முடுக்கிவிட்டது மட்டுமல்லாமல், இரவோடு இரவாகக் கரூர் விரைந்து மருத்துவப் பணிகள் உள்பட தேவையான பணிகளை விரைவுடுத்தியும், குடும்பத்திற்கு நிதி உதவி அறிவித்தும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறியும், உடனடி யாக தனிநபர் விசாரணை ஆணையம் அமைத்தும், செய்தியாளர்கள் மத்தியில், இதனை அரசியலாக்க
வேண்டாம் என்று நனி நாகரிகத்துடன் கேட்டுக் கொண்ட தமிழ்நாடு முதல் அமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய மனிதநேயமிக்க அதிவேக செயல்பாடுகளையும் ஆட்சி நடத்தும் நேர்த்தி மிகுந்த நிருவாகத் திறனையும் இம்மாநாடு பாராட்டுகிறது.
இந்தப் பிரச்சினையில் இதற்கு மேல் யாரும் ஆக்கப்பூர்வமாக செய்திட முடியாது என்று சொல்லும் அளவுக்கு தமிழ்நாடு முதலமைச்சரும், அரசு எந்திரங்களும் செயல்பட்டது என்பதை மனச்சான்று உள்ளவர்கள் ஒப்புக்கொள்வார்கள் என்பதில் அய்யமில்லை!
இந்தப் பிரச்சினையை, இந்தத் தருணத்தில் அரசியலாக்கி ஆதாயம் தேட முயற்சிக்காமல், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்வதில் ஈடுபடுமாறு அனைத்து அரசியல் கட்சிகளையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 2:
மாநில சுயாட்சிக்கு வலு சேர்த்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை சட்டப் போராட்டத்தின் மூலம் பெற்றுத் தந்த முதலமைச்சருக்குப் பாராட்டு
“சட்டமியற்றும் அதிகாரம் சட்ட மன்றத்திற்கே – மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே! நிச்சயமாக ஆளுநருக்கு இல்லை” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தனது சட்டப் போராட்டத்தின் மூலம் பெற்று, ஆளுநர் தான்தோன்றித்தனமாக ஒப்புதல் அளிக்க மறுத்த பத்து மசோதாக்களைச் சட்டமாக்கிச் சகாப்தம் படைத்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டியது மட்டுமின்றி, இந்தத் தீர்ப்பின் மூலம், இந்தியக் கூட்டாட்சி வரலாற்றில் அனைத்து மாநிலங்களுக்குமான உரிமைகளைப் பெற்றுத் தந்துள்ள திராவிடமாடல் அரசின் நாயகர் தமிழ்நாட்டின் முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டையும் வாழ்த்தையும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 3:
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த காலக்கெடு விதிக்கப்பட வேண்டும்
‘ஒன்றிய அரசு அதன் அதிகாரத்தின் கீழ்வரும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்திட வேண்டும்’ என திராவிடர் கழகம் தொடர்ந்து பல மாநாடுகளிலும், தீர்மானம் நிறைவேற்றி வந்தது. பா.ஜ.க. தவிர்த்து, அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தி வந்தன.
தங்கள் கட்சிக் கொள்கை அளவில் மட்டுமல்லாது; அரசின் கொள்கை முடிவாகவும் ‘ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த முடியாது’ என்று நீதிமன்றத்திலும் தெரிவித்திருந்த பா.ஜ.க. அரசு, வரவிருக்கும் பீகார் தேர்தலைக் கருத்தில் கொண்டு, திடீரென, ‘மக்கள்தொகைக் கணக்கெடுப்போடு, ஜாதிவாரிக் கணக்கெடுப்பும் நடத்திட அமைச்சரவை முடிவு செய்துள்ள’தாகத் தெரிவித்து பல மாதங்கள் ஓடிவிட்டன.
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எப்போது தொடங்கும், எப்போது வெளியிடப்படும், படிவத்தில் என்னென்ன தரவுகள் கேட்கப்படும் என்னும் விவரங்களையும் ஒன்றிய அரசு நிர்ணயித்து வெளிப்படைத் தன்மையுடன் தெரிவிக்க வேண்டும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை முறையாக நடத்த வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவுப் படத்தினை, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் திறந்து வைத்தார்.
தீர்மானம் 4:
ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியைப் பறிக்கும் ஒன்றிய அரசின் நாசகாரச் செயல்
திராவிடர் கழகம் தொடர்ந்து சொல்லி வரும் குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையில் ‘தேசியக் கல்விக் கொள்கை – 2020’ என்பது நவீன குலக் கல்வித் திட்டமே என்பதை ஒன்றியஅரசு மீண்டும் நிரூபித்துள்ளது. தேசியக் கல்விக் கொள்கை – 2020இன்படி, பொதுத் தேர்வில் 30 சதவிததிற்கும் குறைவான மதிப்பெண் எடுத்தால் 3, 5, 8ஆம் வகுப்பில் தோல்வி என்ற நடைமுறை பள்ளிகளில் தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இருந்து வந்த ‘8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி’ என்ற முறை மாற்றப்பட்டு, தற்போது இந்தப் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழர் தலைவர் முன்னிலையில் ‘‘சுயமரியாதை இயக்கத்தின் சமூகப் புரட்சி’’ வரலாற்றுக் கண்காட்சியை அமைச்சர் தா.மோ. அன்பரசன் திறந்து வைத்தார். கண்காட்சியை தலைவர்கள் பார்வையிட்டனர்.
அதோடு மட்டுமல்லாது, தங்களின் குழந்தை குறைவான மதிப்பெண் எடுத்தால் தோல்வி ஆக்கச் சம்மதிப்பதாகப் பெற்றோர்களிடமே ஒப்புதல் கடிதம் பெற்று வருவது கொடுமையிலும் கொடுமையாகும். இந்த நடைமுறை மாணவ, மாணவிகளின் இடைநிற்றலுக்கு வழிவகுப்பதோடு, குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதிக்கச் செய்யும் என்பதில் அய்யமில்லை. எல்லோரும் படிக்கக் கூடாது என்பது ஆரியக் கல்விக் கொள்கை; அனைவரும் படிக்க வேண்டும் என்பது திராவிட மாடல் கொள்கை. ஆரியக் கொள்கைகளைச் செயல்படுத்தத் துடிக்கும் ஒன்றிய அரசின் இந்தத் திட்டத்தைப் பெற்றோர் மட்டுமன்றி அனைவரும் எதிர்த்துப் போராட முன்வர வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 5 (அ):
‘கிரிமிலேயர்’ முறை ஒழிக்கப்பட வேண்டும்!
அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான ‘கிரிமிலேயர்’ எனும் சமூக அநீதி முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். தற்போதைய மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, அரசியலமைப்புச் சட்டத்தின் 105ஆம் திருத்தத்தை மேற்கொண்ட நிலையில், பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., எஸ்.டி., என எந்தப் பிரிவினரையும் ‘கிரிமிலேயர்’ என்ற பாகுபாடு காட்டிப் பிரிக்க முடியாது என்ற சட்ட வல்லுநர்களின் கருத்தை, ஒன்றிய அரசு ஏற்று, உரிய ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும். இதுகுறித்துத் தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிய அரசின் கவனத்திற்கும் ஏனைய மாநிலங்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 5 (ஆ):
யு.பி.எஸ்.சி.யில் தேர்வான பிற்படுத்தப்பட்டோர் அனைவரையும் பணியில் அமர்த்துக!
யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்ற இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) பலருக்கும் (ஏறத்தாழ நூறு பேர்), ‘கிரிமிலேயர்’ என்ற காரணம் காட்டி, பதவி நியமனம் செய்யப்படாமல் ஒன்றிய அரசின் பணியாளர் நலத் துறை காலதாமதம் செய்வது சமூக அநீதியாகும். உடனடியாக அவர்களுக்குப் பதவி நியமன ஆணை தந்திட வலியுறுத்துவதுடன், இது குறித்து நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து ஒன்றியப் பணியாளர் துறை இணை அமைச்சரை வலியுறுத்தவும் வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் 60 அடி உயரக் கம்பத்தில் கழகக் கொடியினை தமிழர் தலைவர் ஏற்றி வைத்தார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன் மற்றும் தோழர்கள். மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக. பொன்முடி, மாநில மாணவர் கழக செயலாளர் இரா. செந்தூரபாண்டியன், மாநில இளைஞரணி துணை செயலாளர்கள் மா. செல்லதுரை, அ.ஜெ. உமாநாத், அருண்குமார், மாநில மாணவர் கழகத் துணை செயலாளர்கள் மு. இளமாறன், அறிவுச்சுடர், செ.பெ.தொண்டறம், மாவட்ட மாணவர் கழக செயலாளர் அறிவுச் செல்வம், மாவட்ட இளைஞரணி செயலாளர் அனந்தகுமார் கணேசன் ஆகியோர் தாங்கள் ஏந்தி வந்த சுயமரியாதைச் சுடரினைத் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
தீர்மானம் 6:
இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் கூடாது!
EWS என்ற உயர்ஜாதி அரிய வகை ஏழைகளுக்குப் பத்து சதவிகித இடஒதுக்கீடு என்பதே பெரிய மோசடி; அத்தோடு நில்லாது, அவர்களுக்குக் கல்விக் கட்டணச் சலுகை, விண்ணப்பப் படிவச் சலுகை என ஒன்றிய பா.ஜ.க. அரசு வழங்குவதும், ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இதே போன்ற வாய்ப்புகளை வழங்காமல் இருப்பதும், ஒன்றிய பா.ஜ.க. கூட்டணி அரசு, சமூக நீதிக்கு எதிரான அரசே என்று தனக்குத்தானே பிரகடனப்படுத்தும் செயலாகும். இதனை அனைத்து அமைப்புகளும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்பதோடு, இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் என்பது முற்றிலும் நீக்கப்பட வேண்டும் என்று முதல் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டபோதே பொருளாதார அளவுகோல் என்பது நிராகரிக்கப்பட்ட ஒன்று என்பதையும் இம்மாநாடு நினைவூட்டுகிறது.
தீர்மானம் 7:
தனியார்த் துறைகளில்
இடஒதுக்கீடு தேவை
பொதுத் துறை நிறுவனங்கள் அருகி, தனியார்த் துறை நிறுவனங்கள் நாளும் பெருகி வருவதால், தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு அவசியம் தேவை. அதுதான் உண்மையான சமூக நீதியாகும். ஆகையால், தனியார்த் துறைகளிலும் கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீட்டுக்கு வழிவகுக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று ஒன்றிய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது
தீர்மானம் 8:
அரசுப் பணி உயர்விலும் இடஒதுக்கீடு
அரசுப் பணிகளில் தொடக்க நிலையில் மட்டுமல்லாமல், உயர் அதிகாரப் பணிகளுக்குச் செல்லக்கூடிய வகையில் அனைத்து மட்டத்திலும் பதவி உயர்விலும் பிற்படுத்தப்பட்டோருக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு உரிமை தரப்பட வேண்டும். பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு, அரசமைப்புச் சட்டத்தில் இருந்தாலும், அதனை நடைமுறைப்படுத்துவதில் நீதிமன்றத் தீர்ப்புகளினால் ஒரு தேக்கநிலை நீடிக்கிறது. பிற்படுத்தப்பட்டோருக்கு பணி உயர்வுக்கான சட்ட விதிகளே இதுவரை உருவாக்கப்படவில்லை.
எல்லாக் கட்ட அரசுப் பணி உயர்விலும் பட்டியலின மக்களுக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும், சிறுபான்மையினருக்கும் இடஒதுக்கீடு வழங்கும் வகையில், நீதிமன்ற நடவடிக்கைகளினால் தேக்கநிலை ஏற்படாதவாறு அரசியலமைப்புச் சட்ட விதிகளில் திருத்தத்தினைச் செய்து, அரசாணைகளைப் பிறப்பிக்க ஒன்றிய அரசையும், மாநில அரசுகளையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 9:
‘மாணவர்களிடம் ஜாதி, பாலினப் பாரபட்சம் வேரூன்ற ஆசிரியர்கள் அனுமதிக்கக் கூடாது’ என்ற தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பினை இம்மாநாடு பாராட்டி வரவேற்கிறது.
தீர்மானம் 10:
நீதிக்கட்சி ஆட்சியின் சாதனைகள், தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் வரலாறு, சமூகநீதி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 51ஏ(எச்) வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மை குறித்து பள்ளிகளில் பாடங்கள் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று இம்மாநாடு ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.
தீர்மானம் 11:
வெளிநாடுகளில் உயர்கல்வி மேற்கொள்ள ஏதுவாக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கும் கல்வி ஊக்கத் தொகையைத் (ஸ்காலர்சிப்) தமிழ்நாடு அரசு அளித்திடுமாறு இம்மாநாடு கோருகிறது.
அண்மையில் சிறுபான்மையினருக்கும், விரிவாக்கப் பட்டுள்ள இத்திட்டத்திற்குச் சிறிதுகாலம் வயது வரம்பைத் தளர்த்திடுமாறும் இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 12:
தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் தேசிய கல்விக் கொள்கை கூடாது!
ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், தமிழ்நாடு மாநிலப் பல்கலைக்கழகங்கள் தேசியக் கல்விக் கொள்கையின் (NEP-2020) பல கூறுகளைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளன என்பதாகச் செய்திகள் வந்துள்ளன. தேசியக் கல்விக் கொள்கையின் சில அம்சங்களுக்கு ஆளும் திராவிட மாடல் அரசின் கடுமையான எதிர்ப்பு இருந்தபோதிலும், யு.ஜி.சி உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டி, சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவை தங்கள் மனிதவள மேம்பாட்டு (HRD) மய்யங்களை ‘மாளவியா மிஷன் ஆசிரியர் பயிற்சி மய்யங்’களாக மறு பெயரிட்டுள்ளன எனவும் செய்திகள் வந்துள்ளன. இந்த ஆபத்தான நிலையைத் தடுக்க தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 13:
கூட்டாட்சி முறையிலான வரி வருவாய் பகிர்வு, மாநில அரசுகளின் வரி வசூல் அதிகார வரம்பு மீட்பு
நல்லாட்சி, மக்கள் நல ஆட்சி வழங்குவதற்கு பொது நிதி ஆதாரம் முக்கியத் தேவையாகும். நாடு விடுதலை பெற்றபொழுது, மாநிலங்கள் பிரிவினை கேட்கும் நிலை வந்துவிடக் கூடாது என்ற நோக்கில் மாநில அரசுகளைவிட ஒன்றிய அரசே அதிகப்படியான வரி வருமானத்தைப் பெறும் வகையில் பொதுநிதி மேலாண்மை நிலவியது. ‘குதிரை குப்புறத் தள்ளியது மட்டுமல்லாமல் குழியும் பறித்தது’ என்ற வழக்கு மொழிக்கு இணங்க தற்போது ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசு, மாநில அரசுகளின் அதிகார வரம்பில் இருந்து பெரும்பான்மை வரிகளை ஒன்றாக்கி, நேரடியாக மக்களிடமிருந்து வசூல் செய்து கொண்டிருக்கிறது. இதனால் ஏற்கெனவே நிதிப் பற்றாக்குறையில் உள்ள மாநில அரசுகள், நிதி ஆதாரத்தை ஒன்றிய அரசிடமிருந்து எதிர்பார்த்து இருக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. நியாயமற்ற வரி வருவாய்ப் பகிர்வானது கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு முரணானது. உரிய நிதியின்றி நல்லாட்சி வழங்குவது இயலாத ஒன்றாகும். வசூலிக்கப்படும் வரி வருவாய் உரிய வகையில் ஒன்றிய அரசு, மாநில அரசுகள் இடையே நியாயமாகப் பிரிக்கப்பட வேண்டும். கூடுதலாக வசூலிக்கப்படும் வரிகள் நியாயமான அளவில் மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசை இம் மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 14:
மாநில அரசுகளின்
அதிகார உரிமைகள் மீட்பு
இந்திய நாட்டை ஆள்வது அரசமைப்புச் சட்டம். இந்தச் சட்டம் மாநிலங்களுக்கு அளித்த அதிகார வரம்புகள் கடந்த ஆண்டுகளில் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, நீர்த்துப் போகும் வகையில் ஒன்றியத்தை ஆண்ட – ஆளும் அரசுகள் செய்து கொண்டே வந்துள்ளன.
மக்களுடன் நேரடியாக அன்றாடம் தொடர்பில் உள்ள, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைப் பலப்படுத்திட, மாநில உரிமைகளை அதிகரிக்கச் செய்ய, உரிய சட்டத் திருத்தங்களை ஒன்றிய அரசு கொண்டு வரவேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 15:
மூடநம்பிக்கை ஒழிப்புக்குத்
தனிச் சட்டம் தேவை
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 51A(h), அறிவியல் மனப்பாங்கினை வளர்ப்பது, எதையும் கேள்விக்குட்படுத்தும் முனைப்பைக் கூராக்குவது, சீர்திருத்தம், மனித நேயத்தைப் பெருக்குவது ஆகியவற்றை குடிமக்களின் அடிப்படைக் கடமையாகக் கூறுகிறது. அரசமைப்புச் சட்டத்தில் இந்தப் பிரிவு உருவாக்கப்படுவதற்கு முன்பிருந்தே சமூகத்தில் புரையோடிப் போயிருந்த மூடநம்பிக்கைப் பழக்க வழக்கங்களை எதிர்த்து மக்களிடம் அறிவியல் அடிப்படையிலான பிரச்சாரத்தைச் சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. இன்னொரு புறம் மத வியாபாரிகள் அறிவியல் சாதனங்களைப் பயன்படுத்தி, மூடநம்பிக்கைகளைப் பரப்பி வருகின்றனர்.
மக்களை மடமைப்படுத்தி, முடக்கிப் போடும் மூடநம்பிக்கைகளை ஒழித்திட தமிழ்நாடு மாநில அரசு தனிச் சட்டத்தினை இயற்ற வேண்டும்.
மந்திரம், பில்லிசூனியம், நரபலி போன்ற கொடுமைகள் துளிர்விடச் செய்யாமல் பகுத்தறிவு, அறிவியல் சிந்தனைகளை விதைக்கும் வகையிலும், வளர்க்கும் வகையிலும் பாடத் திட்டங்களை கல்விக் கூடங்களில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று மாநில, ஒன்றிய அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 16:
மாநில ஆளுநர் பதவிகள் அகற்றப்பட வேண்டும்
பிரிட்டீஷாரால் நிருவாக வசதிக்காக அக்காலத்தில் உருவாக்கப்பட்ட ஆளுநர் பதவி – ஜனநாயக ஆட்சிக்கு விரோதமானது என்பதால், ஆளுநர் பதவியை நீக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வருமாறு ஒன்றிய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. மாநில அரசுகளும் இந்த வகையில் ஒன்றிய அரசை வலியுறுத்தும் வகையில் சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமாய் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 17:
ஆர்.எஸ்.எஸ்.சும் – ஒன்றிய பிஜேபி அரசும்!
மூன்றுமுறை ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்ட வன்முறை இயக்கமான – ஹிந்துராஷ்டிரம் என்ற மதவாதக் கொள்கையுடைய –
ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டை ஒட்டி ஒன்றிய பிஜேபி அரசு அதிகாரப்பூர்வமாக அஞ்சல் தலை வெளியிட்டும், ரூபாய் நாணயம் வெளியிட்டும், மதச்சார்பற்ற அரசுக்கான பிரதமர் புகழாரம் சூட்டுவது மிகவும் கண்டிக்கத்தக்கது – இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பதை இம் மாநாடு அறுதியிட்டுத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 18:
தொல்லியல் துறை ஆய்வுகளும்,
பிஜேபி ஆட்சியின் திரிபு வேலைகளும்!
தொல்லியல் துறை அறிஞர்களாலும், நிபுணர்களாலும் ஆய்வின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட திராவிட நாகரிகத்திற்குப் பதிலாக ஆரிய நாகரிகமே என்று மாற்ற வேண்டும் என்று அதிகாரத்தை அத்துமீறிப் பயன்படுத்தி, நிர்ப்பந்திக்கும் ஒன்றிய பிஜேபி அரசின் வரலாற்றுத் திரிபு நடவடிக்கைக்கு இம் மாநாடு தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்தப் போக்கை ஒன்றிய பிஜேபி அரசு நிறுத்தாவிட்டால் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் என்று இம் மாநாடு எச்சரிக்கிறது!
தீர்மானம் 19:
ஆணவக் கொலை தடுப்புச் சட்டமும் –
பெண்களுக்குத் தற்காப்புப் பயிற்சியும்!
ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுத்து நிறுத்தச் சட்டம் அவசியம் தேவை. பாலியல் வன்கொடுமை, வழிப்பறி இவைகளிலிருந்து தற்காத்துக் கொள்ள, கல்வி நிலையங்களில் மாணவிகளுக்குத் தற்காப்புப் பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 20:
குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுக!
தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட நம் மக்கள் வீடுகளில் கூட குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டாமல் சமஸ்கிருதம் கலந்த பெயர்களைச் சூட்டுவது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும் என்றும், தமிழிலேயே பெயர் சூட்டுவது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் தமிழின மக்களை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 21:
மது, போதைப் பழக்கங்களிலிருந்து இளைஞர்களை மீட்போம்!
மது அருந்துவது, போதைப் பொருட்களைப் பயன்படுத்துதல் என்ற பொல்லாப் பழக்கங்கள், மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வருவது கவலை அளிக்கக்கூடிய பெருந் தீமையானதாகும்.
இது தனிப்பட்டவர்களின் தீமை என்பதைவிட சமுதாயத்தைப் பீடித்த பெரும் தொற்று நோயாகும்.
கல்விக் கூடங்களில் மாணவர்களை ஒழுக்கரீதியாக உருவாக்குதோடு, மாணவர்கள் மதுவை ஒழிப்போம் – போதையை ஒழிப்போம் என்ற பதாகைகளை ஏந்தி வீதிகளில் அணிவகுக்கச் செய்து இந்த வகையில் முழக்கமிடச் செய்ய வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துவதோடு, வீட்டில் மூத்தவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளானால் அதன் தாக்கம் வீட்டில் உள்ள இளைஞர்களிடமும் அந்தத் தீய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இம்மாநாடு எச்சரிக்கின்றது.–
கழக மாணவரணியும் இளைஞரணியும் இந்தப் பிரச்சாரத்தை மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 22:
நாடாளுமன்றத்திலும், சட்ட மன்றங்களிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை விரைந்து செயல்படுத்துக!
1996ஆம் ஆண்டு தேவகவுடா பிரதமராக இருந்த காலந்தொட்டு, சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு பற்றிப் பேசப்பட்டு வருகிறது. 1998, 1999, 2003 ஆகிய ஆண்டுகளிலும் மசோதா மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு முறையும் எதிர்ப்பால் நிறைவேற்றப்படவில்லை.
2010ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது (9.3.2010). ஆனால், மக்களவையில் நிறைவேறாமல் போனதால் சட்டமாகவில்லை.
இறுதியில் 2023 சிறப்பு அமர்வில் 106ஆவது அரசமைப்புத் திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும், கடந்த மக்களவைத் தேர்தலில்கூட (2024) செயல்படுத்தப்படவில்லை.
அதற்குப் பின் பல மாநிலங்களிலும் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றும் இச்சட்டம் செயல்படுத்தப்படவில்லை.
இனியும் இதில் காலதாமதமின்றி செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று இம்மாநாடு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
தீர்மானம் 23:
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை முழுமையான தீர்வை நோக்கி!
தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோர் மறைவிற்குப் பிறகு, நம்முடைய தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் ஒப்பற்ற தலைமையின் கீழ் கட்டுப்பாட்டோடு பணியாற்றி வந்திருக்கிறோம் என்று அறிவிப்பதில் பெருமை கொள்கிறோம்.
தமிழ்நாட்டில் 69 விழுக்காடு கிடைப்பதற்கும், நிலைப்பதற்கும், அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடங்கள் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைப்பதற்கும் மூல பலமாக இருந்து உழைத்தவர் நம்முடைய தலைவர் ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்கள். தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி – இன்றைய திராவிட மாடல் ஆட்சியில் அதில் ஓரளவு முக்கிய வெற்றியையும் பெற்றுள்ளோம்.
இது முழுமைப்படுத்தப்படும் வகையில் சட்டப் போராட்டமும் மக்கள் போராட்டமும் நடத்த வேண்டும் என்றும், இதில் திராவிடர் கழகம் முன்னணிப் படையாகச் செயல்படுவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 24:
‘பெரியார் உலகம்’ நிர்மாணமே நமது அடுத்த இலக்கு!
திருச்சி சிறுகனூரில் 27 ஏக்கர் பரப்பளவில் “பெரியார் உலகம்” என்ற மாபெரும் வரலாற்று நினைவுச் சின்னத்தை உருவாக்கும் பணியில் நம் தலைவர் ஆசிரியர் அவர்கள் அதே சிந்தனையில், இருப்பதோடு, உடல்நலப் பாதிப்பையும் பொருட்படுத்தாது உழைத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த மாபெரும் பணியைச் செய்து முடிப்பதில் முக்கியக் கவனம் செலுத்தி, கழகத் தோழர்கள் ஒல்லும் வகையில் எல்லாம் நிதி திரட்டும் பெரும் பணியில் முழு மூச்சுடன் ஈடுபடுமாறு இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் எண்: 25
கழக அமைப்புப் பணிகள்
கொள்கை ரீதியான எதிரிகளின் கைகளில் ஆட்சி அதிகாரம் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் திராவிடர் கழகத்தின் கொள்கைப் பிரச்சாரப் பணி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. தந்தை பெரியாரின் கொள்கை வட மாநிலங்களிலும் பரவிக் கொண்டு இருப்பதையும் பார்க்க முடிகிறது.
வடமாநிலங்களில் பல பல்கலைக் கழகங்களில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா வெகு சிறப்புடன் எழுச்சியுடன் நடைபெற்றிருக்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் திராவிடர் கழகத்தின் அமைப்புப் பணிகளை மேலும் வலிமைப்படுத்த வேண்டும்.
குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மத்தியில் தீவிரமாக இயக்கக் கொள்கைப் பணிகள் சென்றடைய வேண்டும்.
திராவிட மாணவர் கழகம், இளைஞர் அணி, மகளிர் அணி, திராவிட மகளிர் பாசறை, தொழிலாளர் அணி, விவசாயத் தொழிலாளர் அணி, வழக்குரைஞர்கள் அணி, திராவிடர் கழகத் தகவல் தொழில்நுட்பக் குழு, பெரியார் சமூகக் காப்பு அணி உள்ளிட்ட அமைப்புகளை மேலும் செழுமைப்படுத்தி, ‘மிகப் பெரிய சமூகப் புரட்சிப் பணியின் சிப்பாய்கள் நாம்’ என்ற உணர்வோடு, துடிப்போடு பணியாற்றிட உறுதி கொள்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தலைமைக் கழகம் முதல் கிளைக் கழகம் வரை சங்கிலித் தொடர் ஒருங்கிணைப்பு கட்டுக்கோப்பாக அமையும் வண்ணம் மாநிலப் பொறுப்பாளர்கள், ஒருங்கிணைப் பாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் காப்பாளர்கள், மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள், கிளைக் கழகச் செயல்பாடுகளைக் கண்காணித்து, தீவிரமாகக் கழகப் பணிகள் நடைபெற கடமை ஆற்றுமாறு இம்மாநாடு தோழர்களைக் கேட்டுக் கொள்கிறது.
பெரியார் படிப்பகங்களை மக்களுக்குப் பயன்படும் வண்ணம் நிர்வகிப்பது மிகவும் அவசியம். அன்றாடம் பகுத்தறிவுத் தகவல் பலகைகளில் கருத்துப் பிரச்சாரம், சுவர் எழுத்துப் பணி இளைஞர்களையும், பொதுமக்களையும் ஈர்க்கச் செய்வதாகும். குறைந்தபட்சம் பெரியார் பேசுகிறார் நிகழ்ச்சி பகுத்தறிவாளர் கழகத்துடன் இணைந்து நடத்தப்பட வேண்டும்
கருஞ்சட்டைத் தோழர்கள் என்றால், பகுதி நேரப் பணியாளர்கள் அல்லர்! தூங்கும்போது நாம் காணும் கனவில்கூட கழகப் பணிகள்தான் முந்துறுதல் வேண்டும்.
95 ஆண்டுவரை உடல் உபாதையோடு மக்கள் மத்தியிலும் களத்திலும் நின்ற உலகத் தலைவர் தந்தை பெரியாரை நினைப்போம்.
உடலில் அறுவைச் சிகிச்சைக் கத்தி படாத இடம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு, 93ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நமது தமிழர் தலைவரை நினைத்துப் பார்ப்போம்.
நமது பணியை நமக்கு நாமே எடைபோட்டு, பிரச்சாரம், போராட்டம் என்ற அணுகுமுறையோடு கழகத்தையும் வலுப்படுத்தி, செயலையும் தீவிரப்படுத்தி, நாம் இருக்கும் பகுதியில் நாம்தான் பொதுத் தொண்டறத்தில் முதல் மனிதர் என்கிற அளவில் மக்கள் நினைவில் உடனடியாக நம்மை நினைவு கூர்ந்திடும் வகையில் தொண்டறப் பணிகளில் ஈடுபட உறுதி ஏற்பது, செயல்படுவது, புது வேகத்துடன் மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் பாடுபடுவது என்று சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 26:
ஜாதி ஒழிப்புக்கே முதலிடம்!
திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கை ஜாதி ஒழிப்பாகும். மக்கள் மத்தியில் ஜாதி உணர்வை முற்றிலும் துடைத்து எறியும் வகையில் அடைமழைப் பிரச்சாரத்தை மேற்கொள்வது என்றும், ஆங்காங்கே வட்டார மாநாடுகளை இதற்காகத் தொடர்ந்து நடத்துவது என்றும், ஜாதிப் பிரச்சினை தலைதூக்கும் பகுதிகளுக்கு உடனடியாகச் சென்று தீர்வு காணும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 27:
உறுதியேற்புத் தீர்மானம்
தந்தை பெரியாருக்குப் பிறகு அவர்தம் கொள்கைகள் உலகெங்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளன; பெரியார் பன்னாட்டு மய்யம் உருவாக்கப்பட்டு, ஜெர்மனி, அமெரிக்கா, கனடா அடுத்து ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தந்தை பெரியார் கொள்கை பரப்பும் மாநாடுகள் என்று ‘பெரியாரை உலக மயம் ஆக்குவோம். உலகைப் பெரியார் மயம் ஆக்குவோம்’ என்ற திசையில் நமது தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் பயணித்துக் கொண்டு இருக்கிறோம்.
தந்தை பெரியார் போட்டுத் தந்த பலமான அடித்தளமும், அவர் மறைவிற்குப் பிறகு தலைமையேற்று வழிநடத்திய தலைவர்களும், கட்டுப்பாட்டோடு எவ்வித எதிர்பார்ப்புமின்றி அயராது பாடுபடும் கருஞ்சட்டைத் தோழர்களும், குடும்பங்களுமே இதற்கு முக்கியக் காரணமாகும்.
மானம் பாராது தொண்டறப் பணியாற்றும் கழகத்தினருக்கும், குடும்பங்களுக்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு அன்னை மணியம்மையார் தலைமையில் திருச்சிராப்பள்ளியில் கூடி, (6.1.1974) அவர் முன்மொழிய, கழகத்தினர் வழிமொழிந்து எடுத்துக் கொண்ட சூளுரையை செயல்படுத்துவோம் என்று சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் மீண்டும் நினைவு கொள்வோம்!
“தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை அவர் போட்டுத் தந்த பாதையில் எந்தவித சபலங்களுக்கும் ஆளாகாமல் வென்று முடிப்போம்! வென்று முடிப்போம்!!” என்ற உறுதிமொழியைச் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் மீண்டும் புதுப்பித்துக் கொள்வோம்! என்று இம்மாநாடு புது ரத்தவோட்டத்தோடு தீர்மானிக்கிறது.
தீர்மானம் 28:
2026 சட்டமன்றத் தேர்தலில்
நமது உயிர்க் கடமை!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் 2021 மே 7 அன்று பதவியேற்றார்.
கரோனா தொற்றுநோய், ஊரடங்கு மற்றும் நிதிப் பற்றாக்குறை உள்பட பல பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியில், அவரது ‘திராவிட மாடல்’ ஆட்சி சமூக நலன், பள்ளிக்கல்வி – தொழில்நுட்பக் கல்வி – உயர் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், பெண்களுக்கான மறுமலர்ச்சித் திட்டங்களின் மூலம் தமிழ்நாட்டு வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் சாதித்துள்ளது.
« 2025 ஏப்ரல் வரை 4 ஆண்டுகளில், தமிழ்நாடு இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியில் 9% பங்களிப்புச் செய்துள்ளது.
« பெண்களுக்கான “மகளிர் விடியல் பேருந்து” (கட்டணமில்லா பேருந்து)
« 1.5 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” – மகளிரின் வாழ்வுக்குப் பெரும் உத்தரவாதம் ஆகியிருக்கிறது.
« உள்ளாட்சி மன்றங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 33%-லிருந்து, 50% ஆக உயர்த்தப்பட்டது.
« மக்களைத் தேடி மருத்துவம்
« சாலை விபத்துகளில் சிக்கியோருக்கு உடனடியாக உயிர் காக்கும் சிகிச்சை வழங்கும் “நம்மைக் காக்கும் 48”
« ஜாதி, தீண்டாமை ஒழிப்பின் முக்கிய கட்டமான – “அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் பணி நியமனம்.”
« ஒடுக்கப்பட்ட மக்களை தனிமைப்படுத்தும் ‘காலனி’ என்ற சொல் ஒழிப்பு.
« இந்து சமய அறநிலையத் துறையில் அனைத்து ஜாதியினர் – பெண்களுக்குப் பதவி வாய்ப்புகள்!
« மதிய உணவுத் திட்டத்தோடு புதிதாக பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவுத் திட்டம்.
« மாணவர்கள் – இளைஞர்களின் வாழ்க்கையை முன்னேற்றும் “நான் முதல்வன்” திட்டம்
« கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் “புதுமைப் பெண் திட்டம்”
« அவ்வாறே மாணவர்களுக்கான “தமிழ்ப் புதல்வன்” திட்டம்.
« உலகெங்குமிருந்து தமிழ்நாட்டுக்கு முதலீட்டா ளர்கள் ஈர்ப்பு – புதிய தொழிற்சாலைகள் – பல லட்ச வேலைவாய்ப்புகள்
« சிறு, குறு தொழில் முனைவுகள் – தொழில்நுட்பப் பூங்காக்கள் பெருக்கம்.
« புதிய கட்டமைப்பு, போக்குவரத்து வசதிகள் உருவாக்கம்.
« தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கம்.
« மாநில உரிமை மீட்புக்காக உச்சநீதிமன்றத்தில் நீதி கேட்டு வழக்குத் தொடுத்து தீர்ப்பு பெற்றமை.
« தந்தை பெரியார் பிறந்தநாள் – “சமூகநீதி நாள்”; தந்தை பெரியார் படைப்புகள் 21 மொழிகளில் மொழிபெயர்ப்பு; அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் – “சமத்துவ நாள்”; அம்பேத்கர் நூல்களின் தமிழ் செம்பதிப்பு.
என சமூகநீதிக்கான சரித்திர நாயகர் “திராவிட மாடல்” அரசின் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் தொடர் சாதனைகள் இமாலயச் சாதனைகளாகி வரலாற்றின் பக்கங்களை நாளும் நிரப்பியவண்ணம் இருக்கின்றன.
திராவிட இயக்கக் கொள்கையில் சிறிதும் சமரசம் செய்து கொள்ளாமல், ஒன்றிய பா.ஜ.க. அரசோடு கொள்கைப் போராட்டத்தை நடத்தி, பொருளாதார இடர்ப்பாடுகளுக்கும் ஈடு கொடுத்து, எல்லாத் துறைகளிலும் இந்தியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை நிர்மாணித்து உலகத்தாரின் பாராட்டைப் பெற்று, நிகரில்லா ஆட்சியை நடத்தி – ‘சாதனைக்கு ஒரு சரித்திரப் புகழ் ஆட்சி’ புரியும் திராவிட மாடல் அரசின் சாதனைகளை இந்தியாவையும் கடந்து, உலக நாடுகளையும் வியந்து போற்றிப் பாராட்ட வைக்கிறது.
இன்றைய ஒப்புவமையற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சி பல நூறாண்டு தலைமுறைத் தடைகளைப் புரட்டிப் போட்டு, புதியதோர் வரலாற்றை நாளும் சாதித்து வரும் தனித்தன்மை கொண்ட ஆட்சியாகும்.
இதனால் நமது திராவிடர் இயக்கக் கொள்கை எதிரிகளும், அவர்களுக்கு விலைபோகும் நம் இனத்து அம்புகளும், அரசியல் எடுபிடிகளும், வரும் 2026ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க சந்தர்ப்பவாத ஏற்பாடுகளைப் பல முனைகளிலும் செய்கின்றன. அவற்றை அம்பலப்படுத்தி நாட்டோருக்கு எடுத்துரைக்கும் முக்கியக் கடமை நம் தாய்க்கழகத்துக்கே மிக அதிகம் உள்ளது.
2026இல் தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் ‘சாதனை! சாதனை!!’ என்ற கண்ணோட்டத்தில் மீண்டும் தி.மு.க. தலைமையிலான ஆட்சி நிலைத்திட இரவு பகல் பாராமல் பிரச்சாரம், களப்பணிகளில் முழுமூச்சாக ஈடுபட்டு, இதுவரை காணாத பெரு வெற்றியை ஈட்டித்தர திராவிடர் கழகம் பாடுபடுவது ஒன்றே ‘தற்கால முழு முக்கியக் கடமை’ என்று இம்மாநாடு பிரகடனப்படுத்துகிறது. ஓய்வற்ற உழைப்பைத் தந்து அயராது பாடுபடுவது என்று இம்மாநாடு சூளுரைக்கிறது.
திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், இது ஒரு தேர்தல் கூட்டணிக் கட்சி அல்ல – திராவிட இயக்கத்தின் தாய்க் கழகமாகும்!
நம் மக்கள் மீட்சிக்காகவும், மானமுள்ள சம வாழ்வுரிமை நிலைக்கவும், தி.மு.க. தலைமையிலான ஆட்சி மீண்டும் முழு பலத்துடன் வெற்றி பெற்றிட வேண்டும்.
நமது பண்பாடு, மொழி, சமூக, அரசியல் உரிமைகளுக்காகப் போராடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி, தன் சாதனைகளைத் தொடர வேண்டும் என்று திராவிடர் கழகம் விரும்புவது – கருதுவது – அதற்காகப் பிரச்சாரம் செய்வது, எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காது உழைப்பது என்பது நாட்டின் பொது நலனையும், உரிமையையும் பொருத்த முக்கிய உயிர்க் கடமை என்று கருதுகிறது.
தாய்க்கழகமாகிய திராவிடர் கழகம் முழு ஆதரவு தந்து, வெற்றிக்கு உதவும் படையாக களத்தில் நிற்கும். இது பல தலைமுறைக்கான கவலையுடன் கடமையாற்றிட வேண்டிய காலகட்டம் என்பதை உணர்ந்து கருஞ்சட்டைப் படை செயலாற்றும். அடுத்த ஆறு மாதங்களும் 24 மணி நேரமும் நமது ஒரே பணி திண்ணை, தெரு, மேடை என்று கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் தமிழ்நாட்டிற்கு விழிப்புணர்வு ஊட்டும் பணியைச், சுணக்கமின்றி சுறுசுறுப்பாகச் செய்து, தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆணையை நிறைவேற்றிட தி.மு.க. தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்று தாமாகவே முன்வந்து கடமையாற்றுவது என்று சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டில் கழகத் தோழர்கள் அனைவரும் உறுதி ஏற்கிறோம்.
“திராவிடம் வாழ்ந்தால் எவரே வீழ்வர்?” “திராவிடம் வீழ்ந்தால் எவரே வாழ்வர்?” என்பதை மக்களுக்கு உணர்த்தி, ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற திராவிட மாடல் ஆட்சி வெல்லட்டும்! திராவிடம் முடிசூடட்டும்!” என்ற முழக்கம் எங்கெங்கும் கேட்கட்டும்! வெற்றி விழாவில் வெள்ளமெனக் கூடுவோம்!
“நன்றி மறவாத் தமிழினப் பெருமக்களே, உங்கள் பேராதரவும், வாக்குகளும் தி.மு.க.வுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமே என்பதில் சற்றும் பிறழாமல் உறுதி காட்டுவீர்! பாடுபட்டுப் பெற்ற நம் தலைமுறை உரிமைகளைக் காப்பீர்!” என்ற மிக முக்கியமான வேண்டுகோளை இம்மாநாடு முன்வைக்கிறது.
——