நாட்டின் ஆட்சி திருவாங்கூர் மன்னரிடம் இருந்தாலும் கோயில்கள் முழுவதும் நம்பூதிரி பார்ப்பனர்கள் கைவசமே இருந்ததால், ஒவ்வொரு கோயில் பகுதிகளிலும் ‘‘தானடித்த மூப்பாக” அவர்களின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது. கோயில்களைச் சுற்றி பார்ப்பனர்கள் வீடுகள் இருந்தன . அதை ‘‘கிராமம்” (அக்ராகரம்) என்று அழைப்பார்கள். அந்தப் பகுதிகளை நம்பூதிரிகள் கோயிலின் அறக் கட்டளைகளாகச் செய்து விட்டனர். அந்த அறக்கட்டளை உறுப்பினர்களாக முழுமைமாக அவர்களே இருந்தனர்.
இந்த அமைப்பினால் கோயில்கள் அனைத்தும் அவர்களின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தன. கோயில்களும் அதன் சுற்றுப் பகுதிகளும், அதன் மற்றய சொத்துக்களும் நம்பூதிரிகள் கட்டுப் படுத்தி, ஏறத்தாழ ஒருசிறுகுறு நில மன்னர்கள் போலவே வாழ்க்கை நடத்தினர். இந்த நிலை திருவாங்கூர் நாட்டின் அனைத்துக் கோயில்களிலும் நடை முறையில் இருந்தது.(வைக்கம் மகாதேவர் கோயிலும், அங்கு நடந்த போராட்டமும் ஒரு எடுத்துக்காட்டு.) அவர்கள் கட்டுப்பாட்டில் கோயில்கள் இருந்ததால் அவர்கள் வைத்ததே சட்டமாகிப் போனது. பிரம்மா, விஷ்ணு போன்ற கடவுள்கள் இந்தக் கோயில்களின் தெய்வங்கள். இந்த தெய்வங்களைத் தொழும் உரிமை, நம்பூதிரிகளுக்கும், நாயர்களுக்கும் மட்டுமே இருந்தது. நாயர்களும் கோயில் பிரகாரங்களில் மட்டுமே நுழைய முடியும். கோயிலின் மற்ற வேலைகளை (எடுபிடி வேலைகளை) செய்ய நாயர்கள் (சூத்திரர்கள்) பயன்படுத்தப்பட்டனர்.
நம்பூதிரிகளின் இந்த தெய்வங்களை கீழ்ஜாதியினர் தொழக் கூடாது என்று சட்டம் இருந்தது. வீரபத்திரன், (சுடலை) மாடன், வீரன், இருளன், முத்தாரம்மன், பேச்சி, காளி போன்ற தெய்வங்களை மட்டுமே அவர்கள் வணங்க வேண்டும் (பார்ப்பனர் கடவுள்கள், சூத்திரக் கடவுள்கள் என்று அதிலும் வேறுபாடு!) பார்ப்பனக் கடவுள்களுக்கு படைக்கப்படும் விலை உயர்ந்த பொருள்களான நெய், பால் போன்ற பொருள்களை சூத்திரக் கடவுள்களுக்குப் படைக்கூடாது. அவர்கள் கடவுள்களுக்கு, கள், சாராயம், பீடி, சுருட்டு, கருவாடு, கோழி, ஆடு, மாடு போன்றவைகள் தான் வழிபடும் பொருள்களாக வழங்க முடியும். கோயில்களில் நுழைவு மறுக்கப்பட்ட கீழ் ஜாதியினர் கோயில்களுக்கு வெளியே நின்று கொண்டு தங்கள் காணிக்கைகளைத் தூக்கி வீச வேண்டும். அந்தக் காணிக்கைகளை உள்ளிருந்து ‘பொறுக்கி’க் கொள்வார்கள் அந்த காசுகளுக்கு ‘தீட்டு’ கிடையாது. கோயிலுக்குள் இருந்தபடியே கோயில் பிரசாதத்தை பார்ப்பனர்கள் தூக்கி வெளியே வீசுவார்கள் அதை வெளியே உள்ளவர்கள் இலையில் கட்டப் பட்டு எறியும் பிரசாதத்தை பிடித்துக் கொள்ள வேண்டும்.
கோயில்களின் உள்ளே செல்லும் உரிமை படைத்த
நம்பூதிரி, நாயர்கள் தவிர மற்றவர்களுக்கு ஜாதிய வரிசைப்படி கட்டுப்பாடுகள் இருந்தன. கோயில்களில் நாயர்களுக்கும் (சூத்திரர்கள் என்பதால்) கடைசி வரிசையில் நிற்கும் உரிமைதான் இருந்தது. ஈ.ழவா போன்ற மற்ற கீழ் ஜாதியினர் கோயில்களின் மதிற் சுவர்களிலிருந்து 12 அடியும் தாழ்த்தப்பட்டோர் 64 அடிகள் தள்ளி நின்றே (கோயிலில் இருந்தல்ல, கோயில் மதிற் சுவரிலிருந்தே) கடவுளைத் தொழ முடியும்.
(ஆதாரம்: ‘திருவாங்கூர் அடிமைகள்’:
முனைவர் சா. குமரேசன்)
திருவாங்கூர் நாட்டில் அரசருக்கோ, அரச குருக்களான நம்பூதிரி பார்ப்பனர்களுக்கோ உடல் நலக்குறைவு ஏற்பட்டால், அது “தோஷம்” என்று கூறி,” தோஷ நிவர்த்தி” என்றுகூறி நரபலி கொடுக்கும் பழக்கம் இருந்தது. குளங்கள் அதிக மழையினால் உடைப்பெடுத்தால் “தெய்வக் குற்றம்’’ என்று பார்ப்பனர்கள் அரசரிடம் கூறி, அதற்குப் பிராயசித்தமாக ‘‘தெய்வத்திற்கு வேண்டியவர்கள்” என்று கூறி தாழ்த்தப்பட்டவர்களை, உயிரோடு உடைப்பு ஏற்பட்ட இடத்தில் அடைப்புகளாக வைத்து மூடி இருக்கின்றனர்.
(ஆதாரம் : அ.கா.பக்கம் 91,92).
ஒருமுறை திருவாங்கூர் மன்னருக்கு தொடர்ச்சியாக தொல்லைகள் ஏற்பட்ட போது ‘‘தெய்வக் குற்றம்” என்று கூறி, “தோஷ பரிகாரம்” செய்ய வேண்டும் என்று மன்னரை நம்ப வைத்து, ஈழவ சமுதாயக் குழுந்தைகள் 15 பேரை அழைத்து வந்து, திருவனந்தபுரத்தின் நான்கு மூளைகளிலும், அவர்களை நிறுத்தி மந்திரங்களை உச்சரித்து உயிரோடு அவர்களை புதைத்து விட்டனர். (ஆதாரம்: அ.கா. பக்கம் 91 – 92)
இதைப் போன்ற எண்ணற்ற கொடுமைகள் கடவுள்கள் பேரால் கீழ்ஜாதிக்காரர்கள் மேல் திணிக்கப்பட்டன. கடவுள் பயத்தில் அவர்களும் அமைதியாக இந்தக் கொடுமைகளை லற்றுக் கொண்டனர்.
(ஆதாரம்: சாமுவேல் சக்ரியா,”தென் திருவிதாங்கோடு சரித்திர சுருக்கம்”பாகம் 1 பக்கம் 48;’Sri Narayanaguru
Naro-thalhixte Prevechagan, Calicut page 8,1971)’
கீழ் ஜாதியினர் எந்த வகையிலும் ‘‘பொருளாதாரச் சுதந்திரம்” அடைந்து விடக் கூடாது என்பதில் நம்பூதிரி – நாயர் கூட்டணி உறுதியாக இருந்தது. அதனால் அவர்கள் மேல் ஏராளமான வரிகள் விதிக்கப்பட்டன. அந்த வரி விதிப்பின் மூளையாக செயல்பட்டவர்கள் நம்பூதிரி பார்ப்பனர்கள். வரி வசூலில் ஈடுபட்டவர்கள் நாயர்கள். அரசர்களும் இந்தக் கொடுமைகளைக் கண்டு கொள்ளவே இல்லை. இப்படி கடுமையான வரிகள் விதிப்பதன் மூலம் அவர்கள் வாழ்வியல் வசதிகளைப் பெறமுடியாமல் அடக்கி வைக்கப்பட்டனர். வரிகள் வசூல் செய்யும் நாயர்கள் கீழ் ஜாதியினரை மிகவும் கொடுமைப் படுத்தினர், வரி வசூலிக்கும் நாயர்கள் ‘‘காரியக்காரர்கள்” என்ற பெயரில் அழைக்கப் பட்டனர். அவர் போடுவதுதான்
வரி, அவரை எதிர்த்து ஒடுக்கப் பட்டவர்கள் எந்த கேள்வியும் கேட்க முடியாது. அப்படிக் கேட்டால் கேட்டவர் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவார். வரிகளை உரிய நேரத்தில் கட்டாவிட்டால், அபராதம் ‘‘பிராயசித்தம்” என்ற பெயரில் விதிக்கப்படும் அதையும் சேர்த்து கீழ் ஜாதியினர் கட்ட வேண்டும். அரசு ஆணைப்படி வசூலிக்கும் வரியில் 20 சதவிதம் காரியக்காரர் எடுத்துக்கொண்டு மீதியை அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டும் ஆனால் காரியக்காரரோ அரசை எதிர்த்து ஏமாற்றி பெரும் ஊழலை செய்வார். கீழ்ஜாதி மக்கள் கையில் பணம் சேரக்கூடாது என்பதில் நம்பூதிரி -நாயர் கூட்டணி உறுதியாக இருந்தது. நீல உடமை என்பது கோயில்கள் மூலம் நம்பூதிரிகளுக்கு ஏராளமாக இருந்தது. திருவாங்கூர் நாட்டில் பெரும் நிலக்கிழார்களாக அவர்கள் இருந்தனர். காரியக்காரர்களான நாயர்களோ வரி வசூல் மூலம் பெரும் செல்வந்தகளாக மாறினர். அந்த நாட்டில் கோயில்கள் பெயரால் ஏழை கீழ் ஜாதியினர் ஏழையாகவே வைக்கப்பட்டனர்.(Ref: Coloxal Mundro to chief secretary of Govt, Fort St. George, Madras-7.3.1818, Tamilnadu Archives Vol:124, P- 875)
கீழ் ஜாதியினர் மேல் பலவகை வரிகள் விதிக்கப் பட்டன. பரம்பரை சொத்தில் 40 சதவிகிதம் “புருஷாந்திரம்” என்ற பெயரில் விதிக்கப்பட்டது. குடும்பத்தலைவன் மரணமடைந்தாலும் வாரிசுகள் அல்லது உறவினர்களோ அந்த வரியைக் கட்டியே ஆக வேண்டும். 11 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண்கள் “தலை வரி” என்ற வரியை கட்ட வேண்டாம். நாடார்கள் பனை மரங்கள் ஏற பயன்படுத்தும் ஏணிக்கு வரி கட்ட வேண்டும். பனையேறப் பயன்படுத்தும் கால்களில் அணியும் ‘தளைக்கு “தளைக் கானம்” என்ற வரி விதிக்கப்பட்டது. குடிசை வீடுகளுக்கு ‘‘குப்பக் கச்சா’’ என்ற பெயரில் வரிவசூல் செய்யப்பட்டது. வீடு, குடிசை வீடுகளுக்கு கூரை மாற்றும் போது, ‘‘மனை மேய்ப்பான் கொள்து மிறை” என்று ஒரு வரி. திருமணமான பெண்கள் “தாலியிறை” என்ற பெயரில் வரி கட்ட வேண்டும். ஆண் வாலிபர்கள் மீசைக்கு வரி கட்ட வேண்டும்.
(Ref: Trivandrum Archeological Serve Vol1, P64)
இப்படி ஒடுக்கப்பட்டோர் மீது விதிக்கப்பட்ட வரிகளை சரியான நேரத்தில் கட்ட வேண்டும். தவறினால் கடும் அபராதம் விதிக்கப்படும். வரியைக் கட்டாத கீழ் ஜாதியினர் முதுகில் பெரிய கல்லை சுமந்து கொண்டு பல மணி நேரம் வெய் யிலில் நிற்க வைக்கப்படுவார்கள். பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியைக் காதில் நுழைத்துத் தொங்க விடப்பட்டனர். சிறையில் அடைத்து, சித்திரவதைக்கு வரி கொடுக்க முடியாதவர்கள் ஆளாக்கப்பட்டனர்.
(Ref: C.M.Augur.” Church history of Travancore 1990 Page 586)
திருவாங்கூர் நாட்டில்”விருத்தி” ஊழியம் என்றொரு மற்றொரு கொடுமை இருந்தது கீழ் ஜாதிக்காரர்கள் இந்த ஊழியம் செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அவர்கள் “விருத்திக்காரர்கள்’’ என்றழைக்கப்பட்டனர். விருத்தி ஊழியர்கள் உப்பங்கழிகளிலிருந்து, உப்பு மூட்டை தூக்கி வருதல், காட்டில் மரங்கள் வெட்டுதல், அவற்றைப் பாதுகாத்தல், யானையைப் பிடிக்கக் குழிவெட்டுதல், காடுகளைப் பாதுகாத்தல், வேலி அமைத்தல், வண்டியில் சுமை ஏற்றுதல், இறக்குதல்,
அரசரின் குதிரைகளுக்கு புல் வெட்டிப் போடுதல், அரசுக் கட்டிடங்களைப் பராமரித்தல் போன்ற கடுமையான
வேலைகளை விருத்திக்காரர்கள் செய்ய வேண்டும். இவர்களுக்கு இது போன்ற ஊழியங்கள் செய்ய எந்தவிதமான ஊதியமும் வழங்கப் படவில்லை. முக்கியமாக கீழ் ஜாதிக்காரர்களான சாணார்கள் விருத்தி ஊழியம் செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். விருத்திக்காரர்கள் ஊதியமின்றி வேலை செய்வதோடு அன்றி, மேல் ஜாதிக்காரர்களுக்கு கருப்புக் கட்டி, எண்ணெய், பால், பூமாலை போன்ற பொருட்களையும், ஓ” ஊட்டுப் புரை (ஓட்டு) வீடுகளுக்கு தேவையான விறகுகள், காய்கறிகள், யானைகள் உண்ணத் தென்னை ஓலைகள் ஆகியவற்றை இலவசமாகக் கொடுக்க வேண்டும். (பண்டிகை) நாட்களில் அரசக் குடும்பத் தினருக்கும், நாயர்களுக்கும் கோழிகள், முட்டைகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை இலவசமாகக் கொடுக்க வேண்டும். இந்தப் பொருட்களை, கால் நடையாகவே, தலைச் சுமையாகவே திருவனந்தபுரம் கொண்டு சேர்க்க வேண்டும். ஒருபுறம் வரிச் சுமை, மறுபுறம் வேலைக் கொடுமை என கீழ்ஜாதியினர் கொடுமைப் படுத்தப்பட்டனர்.
செல்லப் பெயரோ, நல்லப் பெயரோ வைத்துக் கொள்ளவும் அனுமதியில்லை ‘சோறு’ என்று சொல்லாமல், ‘‘கஞ்சி” என்றுதான் சொல்ல வேண்டும். வீடு என்று சொல்லாமல் இருப்பிடத்தை “குடிசை” என்றுதான் சொல்ல வேண்டும். இது மட்டுமின்றி, காற்றடிக்கும் திசைக்கு எதிர்புறமாகத்தான் அவர்கள் குடிசைகள் இருக்க வேண்டும். அவர்கள் மேல் பட்டக்காற்று, மேல் ஜாதிக்காரர்கள் மேல் பட்டால் அவர்களுக்குத் தீட்டாம். இது போன்ற ஜாதியக் கொடுமைகளுக்கு ஆளாகி கீழ்ஜாதியினர் படாதபாடுபட்டனர் .(Ref: Liberation of the oppressed A continuous struggle”-Case study Since 1882 AD”
(தொடருவேன்…)