சென்னை, அக். 3- சென்னை மாநகராட்சி சார்பில், கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் இதுவரை 20.16 லட்சம் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன என மாநகராட்சி செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை, அண்ணாநகர், திரு.வி.க. நகர் உள்ளிட்ட 8 மண்டலங்களில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகள் பல ஆண்டுகளாக கொடுங்கையூர் வளாகத்தில் கொட்டப்பட்டு வந்தன. இதனால் வளாகத்தில் குப்பைகள் அதிகரித்து சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் நிலை உருவானது.
கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தின் மொத்தப் பரப்பளவு 342.91 ஏக்கர் ஆகும். இதில் 252 ஏக்கர் பரப்பளவில் திடக்கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன.
மொத்தமாக 66.52 லட்சம் டன் திடக்கழிவுகளை பயோமைனிங் முறையில் பிரித்தெடுத்து அகற்ற, ரூ.641 கோடியில் பணிகள் கடந்த 2024ஆம் ஆண்டு முதல் 6 தொகுப்புகளாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் இதுவரை 20.16 லட்சம் டன் திடக்கழிவுகள் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளன. திடக்கழிவு அகற்றம் மூலம் தொகுப்பு 1 மற்றும் 2 வாயிலாகச் சுமார் 3 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட அந்த இடத்தில், மாநகராட்சி சார்பில் ரூ.57 லட்சம் செலவில் சுற்று வேலி அமைத்து, குழாய் மூலம் நீர்ப்பாசன வசதியுடன் சுமார் 1,500 பசுமை மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீதமுள்ள குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.