சென்னை, செப்.25 திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மண்டலங்களில் நெல் கொள்முதல் பணி தொடர்ந்து சுமூகமாக நடைபெற்று வருவதாகவும், விவசாயிகள் கலக்கம் அடைய வேண்டாம் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: ஒவ்வொரு மாவட்டத்திலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கவும், நெல் கொள்முதல் நிலையங்களின் பணிகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கவும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழு நெல் கொள்முதல் பணிகள் குறித்து கண்காணித்து வருகிறது. அந்தவகையில், செப்.22-ஆம் தேதி வரையிலான காலங்களில் திருவள்ளூர் மண்டலத்தில் 62 கொள்முதல் நிலையங்கள் மூலம் 17,501,520 மெட்ரிக் டன் நெல்லும், காஞ்சிபுரம் மண்டலத்தில் 75 கொள்முதல் நிலையங்கள் மூலம் 24,605.480 மெட்ரிக் டன் நெல்லும், செங்கல்பட்டு மண்டலத்தில் 14,578.400 மெட்ரிக் டன் நெல்லும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மண்டலங்களில் நெல் சாகுபடி செய்து அறுவடை பணிகள் நடந்து வருவதாகவும், இங்கு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், அப்பகுதி விவசாயிகள் அவதிப்படுவதாகவும் நேற்று முன் தினம் நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது. இந்த 3 மண்டலங்களிலும், செப்.1-ம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, சேமிப்பு கிடங்கு, வட்ட செயல்முறை கிடங்கு, திறந்தவெளி சேமிப்பு நிலையங்களுக்கு இயக்கம் செய்யப்பட்டு வருகிறது. எனவே, விவசாயிகள், யாரும் கலக்கம் அடைய வேண்டாம். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மண்டலங்களில் நெல் கொள்முதல் பணி தொடர்ந்து சுமூகமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.