போக்சோ வழக்கில் புகார் அளிக்க காலவரம்பு கிடையாது உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

மதுரை, செப்.23-  போக்சோ வழக்கில் புகார் அளிக்க கால வரம்பு நிர்ணயம் செய்யவில்லை. பல சந்தர்ப்பங்களில் குற்றவாளி குடும்ப உறுப்பினராகவோ அல்லது உறவினருக்கு தெரிந்த  நபராகவோ இருப்ப தால் புகார் அளிக்க தயங்குகின்றனர் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாலியல்தொல்லை

தென்காசியைச் சேர்ந்தவர் நீலகண்டன்.ஒரு பெண் மற்றும் அவரது 17 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இவர் மீது காவல்துறையினர் 2 வழக்குகள் பதிவு செய்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீலகண்டன் மனு தாக்கல் செய்தார். அதில், “உரிமையியல் பிரச்சினையில் என் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இரு வழக்குகளையும் ரத்து செய்யவேண்டும்” என்று தெரிவித்திருந்தார். இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். மனுதாரர் தரப்பில், “2023இல் நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்துக்கு 2025இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தாமதமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கான விளக்கம் ஏற்கும்படியாக இல்லை. புகார் அளித்த சிறுமிக்கு 19 வயதாகிறது. இதனால், போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டது.

காலவரம்பு

பின்னர் நீதிபதி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது: போக்சோ வழக்கில் புகார் அளிப்பதற்கு காலவரம்பு நிர்ணயிக்கவில்லை. பல சந்தர்ப்பங்களில் குற்றவாளி குடும்ப உறுப்பினர், உறவினர் அல்லது தெரிந்த நபராக இருப்பதால், பெரும்பாலும் குழந்தைகளால் புகார் அளிக்க முடியவில்லை. பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர் வாழ்க்கை முழுவதும் பாலியல் தொல்லையின் அதிர்ச்சியை சுமக்க நேரிடுகிறது. புகார் அளிக்க துணிகின்றனர்: அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்காக பாதிக்கப்பட்ட சிறுமிகள் பலர் மேஜரானதும், தாங்கள் குழந்தைகளாக இருந்தபோது சந்தித்த பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளிக்கத் துணிகின்றனர். வயதுக்கு வந்த பெண், தான் மைனராக இருந்தபோது தனக்கு எதிராக நடந்த பாலியல் வன்முறைகளுக்காக போக்சோ சட்டத்தில் புகார் அளிப்பதை தடை செய்ய போக்சோ சட்டத்தில் எந்த விதியும் இல்லை. இந்த வழக்கில் மனுதாரருக்கு எதிரான பாலியல் குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ளன. எனவே, வழக்கை ரத்து செய்ய விரும்பவில்லை.

மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதே நேரத்தில் புகாரை காவல்துறையினர் சரியாக விசாரிக்கவில்லை. இதனால், இரு வழக்குகளும் தென்காசி சிபிசிஅய்டி விசாரணைக்கு மாற்றப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *