சென்னை, செப்.11- திருக் குறளை சீனப்பெண்மணி ஒருவர் தமிழில் பாராட்டியுள்ளார். இந்த காணொலி வைரலாகியுள்ளது.
திருக்குறள் உரை நூல்
திருக்குறளின் முப்பாலுக்கும் கவிஞர் வைரமுத்து உரை எழுதி, அந்தநூலுக்கு ‘வள்ளுவர் மறை-வைரமுத்து உரை’ என்று பெயர் சூட்டி கடந்த ஜூலை மாதம் வெளியிட்டார். உலகம் முழுவதும் இந்த நூல் தமிழர்கள் விரும்பும் நூலாக மாறியது. திருக்குறளுக்கு கவிதை நடையில் அவர் எழுதிய உரையும் கவனம் ஈர்த்தது.
இந்த நூலை படித்து விட்டு கிகி ஹாங் என்ற சீனாவை சேர்ந்த பெண் ஒருவர், அகமகிழ்ந்து போனார். சீனாவின் யுனான் மின்சூ பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றும் அவர், சீன மொழியை தாய்மொழியாக கொண்டவராவார். ஆனாலும், தமிழை முறைப்படி படித்து பட்டம் பெற்றிருக்கிறார். தனக்கு ‘நிறைமதி’ என்ற அழகிய தமிழ்ப்பெயரையும் சூட்டிக் கொண் டிருக்கிறார்.
சீரிய முயற்சி
நிறைமதி என்ற அந்த பெண், கவிஞர் வைர முத்துவை பாராட்டி காணொலி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் பேசியிருப்பதாவது:-
கவிப்பேரரசு வைரமுத்து தமது ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ என்னும் புதிய நூலை எனக்கு அன்பளிப்பாக கொடுத்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்தநூல் கடல், மலைகளை கடந்து என் கைகளுக்கு வந்தது. இது நட்பின் அழைப்பையும், தமிழ் கலாச்சாரத் தின் சுவையையும் ஏந்தியுள்ளது.
திருக்குறள், தமிழர்களின் ‘அமுத’ நூலாகும். உலகளவில் ‘ஞான’த்தின் செல்வமும் ஆகும். அந்த பாரம்பரியத்தை தொடர்ந்து கவிப்பேரரசு வைரமுத்து இயற்றிய ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ என்ற இந்த நூல் ஒரு கலாச்சாரத்தின் தலைவராக தமிழ்ச் சமூகத்துக்கு வழிகாட்டும் சீரிய முயற்சியாகும். இந்நூல் திருக்குறளின் ஆழ்ந்த கருத்துகளை தெளிவாகவும், இன்றைய சூழலுக்கு ஏற்பவும் எளிய நடையிலும் விளக்குகிறது. தங்கள் கையொப்பமிட்ட இந்த நூலை எனக்கு அளித்தமைக்கு மிக்க நன்றி.
நன்னெறியில் நிற்க வேண்டும்
இந்த சிறப்பான நூலை எம் மாணவர்கள் அனைவருக்கும் பரிந்துரைத்து, திருக்குறளின் நிலையான பேரறிவை பகிர்ந்து வளர்ப்பேன். தங்களின் இந்தநூல் தமிழர்களின் மொழி மற்றும் கலாச் சாரத்தை காத்து வளர்க்கும் ஓர் ஒளி விளக்காக விளங்கும். ‘கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்பது எனக்கு பிடித்த திருக்குறள் ஆகும்.
அதாவது, கற்பவற்றை ஒருவன் குற்றமறக் கற்கவேண்டும். கற்கவேண்டிய உயர்பொருளைக் கற்றபின் அக்கல்வி காட்டும் நன்னெறியிலே நிற்கவேண்டும் என்பதை இந்த நூல் இப்படி விளக்குகிறது. இப்படியாக இந்த நூலை படித்துவிட்டு இது காட்டிய நன்னெறியிலே நிற்க வேண்டும்.
இவ்வாறு நிறைமதி அந்த காணொலியில் பேசியுள்ளார். இந்த காணொலி பெரும் வைர லாகியுள்ளது.