புதுடில்லி, செப்.11- குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு நல்வாழ்த்துகள்.
அதே நேரத்தில், நாட்டின் முதல் குடியரசு துணைத்தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் அறிவுப்பூர்வமான வார்த்தை களை காங்கிரஸ் நினைவு கூர்கிறது.
1952 ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி, மாநிலங்களவையின் தொடக்க நாளில் பேசிய ராதாகிருஷ்ணன், ‘‘நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் அல்ல. அதாவது, இச்சபையில் ஒவ்வொரு கட்சியையும் சேர்ந்தவன் என்று பொருள். யாருக்கும் பாரபட்சம் காட்ட மாட்டேன். அரசின் கொள்கைகளை நியாயமாக விமர்சிக்க எதிர்க்கட்சிகளை அனுமதிக்காவிட்டால், ஜனநாயகம், கொடுங்கோன்மையாக தரம் தாழ்ந்துவிடும்’’ என்று கூறினார்.
தான் சொன்னதையே அவர் செயலில் காண்பித்தார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.