பிரதமர் மோடி திடீரென்று ஜப்பான் மற்றும் சீனா பயணம் சென்றுள்ளார். அமெரிக்காவுடனான மோதல் காரணமாக கடந்த மாதம் பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உதவிய சீனாவோடு இவ்வளவு விரைவில் கைகுலுக்கி நட்பு பாராட்டுவது ஆச்சரியம்தான்!
ஜப்பான் சென்று இறங்கிய மோடியை, அங்குள்ள ஜப்பானியர்களின் 6 பேர் கொண்ட குழு விமான நிலையத்தில் வரவேற்று, காயத்ரி மந்திரம் ஓதினர். மோடி அங்கு நின்று அதை முழுமையாகக் கேட்டு ரசித்தார்.
அதே போல் அங்குள்ள இந்திய வம்சாவழியினரும் ‘மோடியாவளி’ (மோடி புகழ்) பாடினர். இதை எல்லாம் மோடி சுமார் அரைமணி நேரம் அங்கு இருந்து ரசித்தார்.
இதை ஹிந்தி சேனல்கள் நேரடியாக ஒளிபரப்ப, மோடி தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, Today’s welcome in Tokyo was memorable. Here are the highlights என்று ஏஅய் மொழிபெயர்ப்பு உதவியோடு எழுதி பதிவிட்டிருந்தார்.
‘காயத்ரி மந்திரம்’ சரியா, தவறா? அது பகுத்தறிவுக்குப் பொருந்துகிறதா, இ்லலையா? என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்!
அவர்கள் சொல்லும் வழிக்கே வருவோம்! காயத்ரி மந்திரத்தை எந்த நேரத்தில் ஓதவேண்டும் என்று சாங்கியம் இருக்கிறது. எப்படி அமர்ந்து உச்சரிக்கவேண்டும் என்று உபநிஷத்துகள் கூறுகின்றன.
அந்த வகையில் பார்த்தால், விமான நிலையத்தில் பிரதமரை நிற்க வைத்து சில பேர் நின்று காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வரவேற்றதாகவும், அரை மணிநேரம் அதை மோடி ரசித்ததாகவும், இது மறக்க முடியாத நிகழ்வு என்றும் பெருமிதமாக சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளாரே – இந்த இடத்தில்தான் இடிக்கிறது.
திரிகால சாந்தி என்பார்கள். அதன்படி பிரம்ம முகூர்த்தம் (அதிகாலை 4 மணிமுதல் 6 மணிவரை) சந்திரோதயம் மற்றும் சூரியோதயம் நேரம் – அதாவது சூரியோதயத்திற்கு முன்னும் பின்னும் ஓதப்படவேண்டும். மதியவேளை சூரியன் மத்தியில் இருக்கும்போது, சூரியன் அஸ்தமனம் – இந்த திரிகால சாந்தியில் காயத்ரி மந்திரம் உச்சரிக்கப்படவேண்டும்.
இது இந்திய நேரத்திற்கும், ஜப்பான் நேரத்திற்கும் இடைவெளி நேர வித்தியாசம் உண்டு. இந்திய நேரத்தைவிட 3 மணி ஒரு நிமிடங்கள் முந்தையதாகும்.
அவர் சென்றடைந்த நேரமோ காலை 7 மணி, 31 நிமிடம். (இந்திய நேரப்படி– IST ஜப்பான் நேரப்படி காலை 10.34 மணி) காயத்ரி மந்திரம் உச்சரிக்கப்படவேண்டிய நேரமும் பிழையாக இருக்கிறது.
அதிகாலையில் கிழக்கு நோக்கி, மாலையில் வடக்கு நோக்கி அமர்ந்து காயத்ரி மந்திரத்தை மெல்லிய தெளிவான உச்சரிப்புடன் சொல்வது முக்கியம்.
இவை எதுவுமே கடைப்பிடிக்கவில்லை; உச்சரிக்கப்பட்ட மந்திரத்தின் பொருளும், மோடிஜிக்குத் தெரியாது. ஆனால், ரசித்தாராம்!
நாம் கொடுத்தால் தண்ணீர்; அவாள் கொடுத்தால் தீர்த்தம். அதைப்போல்தான் இதுவும்.
‘‘சட்டத்தை மீறினாலும் மீறுவோம் – சாஸ்திரத்தை ஒருக்காலும் மீறமாட்டோம்’’ என்று சொல்கிறவர்களின் யோக்கியதை இப்பொழுது புரிகிறதா?
– மயிலாடன்