நாகர்கோவில், செப்.1- விநாயகன் சதுர்த்தியையொட்டி நாகர்கோவில் மற்றும் ராஜாக்கமங்கலம் ஆகிய பகுதிகளில் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த சிலைகள் நேற்று (31.8.2025) நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலுக்கு கொண்டுவரப்பட்டன. பின்னர் அங்கிருந்து வாகனங்களில் ஊர்வலமாக சங்குத்துறை கடலுக்கு கொண்டுசெல்லப்பட்டன. இந்த ஊர்வலம் இருளப்பபுரம் சந்திப்பு பகுதியில் சென்றபோது ஒரு வாகனத்தில் இருந்த வாலிபர்கள் திடீரென சாலையில் இறங்கி ஆடத்தொடங்கினர். அப்போது அங்கு ஊர்வலத்தை 3 வாலிபர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ஊர்வலத்தில் சென்ற வாலிபர்களுக்கும், வேடிக்கை பார்த்தவாலிபர்களுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள்,கீழே கிடந்த கற்களை எடுத்து அங்கிருந்த வீடுகள் மற்றும் வேடிக்கை பார்த்தவர்கள் மீது எறியத்தொடங்கியதால் பதற்றம் உருவானது. உடனே இந்து முன்னணி நிர்வாகிகள் விரைந்து வந்து வாலிபர்களை எச்சரித்து தடுத்து நிறுத்தினர்.
இதனை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கிடையே கல் வீச்சில் ஈடுபட்ட வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
வழக்கம்போல் சென்னையில் தடையை மீறி விநாயகன் ஊர்வலம்
இந்து முன்னணி நிர்வாகிகள் கைது
சென்னை, செப்.1- சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் சுமார் 30-க்கும்மேற்பட்ட விநாயகன் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இந்த சிலைகள் எல்லாம் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள குறிப்பிட்ட சில வழித்தடங்களில் கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படுவது இல்லை.
இதனால், இந்த சிலைகள் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருந்து பாரதி சாலை வழியாக சென்று கடற்கரை சாலை வழியாக பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், குறிப்பிட்ட அந்த வழித்தடங்களில் சிலையை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டும் இந்து முன்னணி சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை -பாரதி சாலை சந்திப்பில் குறிப்பிட்ட வழித்தடத்தில் காவல் துறையினர் இரும்பு தடுப்புகள் வைத்து தடை ஏற்படுத்தி இருந்தனர். அந்த வழியே நேற்றிரவு 10.30 மணியளவில் இந்து முன்னணி நிர்வாகிகள் சிறிய விநாயகர் சிலைகளை சுமந்தபடி தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.