இந்தியாவின் தலிபான் ஆர்.எஸ்.எஸ். காங்., மூத்த தலைவர் படப்பிடிப்பு

புதுடில்லி, ஆக.18  “நாட்டின் அமைதியை சீர்குலைக்க ஆர்.எஸ்.எஸ்., முயற்சிக்கிறது. அந்த அமைப்பை தலிபான்களுடனே ஒப்பிடுவேன். ஆர்.எஸ்.எஸ்., இந்தியாவின் தலிபான் போன் றது,” என, காங்கிரஸ் மூத்த தலைவர் பி.கே.அரிபிரசாத் கூறியுள்ளார்.

நாட்டின், 79ஆவது சுதந்திர நாளையொட்டி, கடந்த 15இல், டில்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர நாள் உரையில் முதல் முறையாக, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு குறித்து குறிப்பிட்டார்.

அவர் பேசுகையில், ‘உலகின் மிகப்பெரிய அரசுசாரா அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழாவை கொண்டாட உள்ளது. நம் நாட்டை கட்டியெழுப்புவதில் அந்த அமைப்பின் பங்கு அளப்பரியது. சேவை, அர்ப்பணிப்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் அடையாளமாக திகழும் ஆர்.எஸ்.எஸ்., நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கிறது’ என்றார்.

இது குறித்து, காங்., மூத்த தலைவரும், மாநிலங்களவை மேனாள் உறுப்பினரும் கர்நாடக மேல்சபை உறுப்பினருமான பி.கே.ஹரிபிரசாத் நேற்று (17.8.2025) கூறியதாவது:

நாட்டின் அமைதியை சீர்குலைக்க ஆர்.எஸ்.எஸ்., முயற்சிக்கிறது. அந்த அமைப்பை, தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த தலிபான் பயங்கரவாத அமைப்புடன் மட்டுமே நான் ஒப்பிடுவேன். ஆர்.எஸ்.எஸ்., இந்தியாவின் தலிபான் போன்றது. செங்கோட்டையில் இருந்தபடி அதை பிரதமர் மோடி பாராட்டியதை ஏற்க முடியாது. சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாராவது பங்கேற்றனரா?

அரசியலமைப்பு சட்டப்படி, நாட்டில் பணியாற்ற விரும்பும் எந்த வொரு அரசுசாரா நிறுவனமும் பதிவு செய்ய வேண்டும். ஆனால், ஆர்.எஸ்.எஸ்., இதுவரை பதிவு செய்யவில்லை; இது வெட்கக்கேடானது. அந்த அமைப்புக்கு எங்கிருந்து நிதி வருகிறது?

பா.ஜ.,-வும், ஆர்.எஸ்.எஸ்-., அமைப்பும் வரலாற்றை திரிப்பதில் வல்லவர்கள். அவர்கள் புதிய வரலாற்றை எழுத முயற்சிக்கின்றனர். பிரிவினைக்கான முதல் தீர்மானத்தை வங்காளத்தில் முன்மொழிந்தவர்கள் பஸ்லுல் ஹக் மட்டுமல்ல, சியாமா பிரசாத் முகர்ஜியும் தான். ஜின்னாவும், சாவர்க்கரும் இரு மதங்களுக்கும் தனி நாடு தேவை என்று கருதினர். அதற்காக அவர்கள் காங்கிரசை குறை கூறுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *