புதுடில்லி,ஆக.16 பெங்களூரு மத்திய தொகுதியில் வாக்குகள் திருடப்பட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக, ஆதாரங்களை பிரமாணப் பத்திரமாக சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் ராகுல் காந்திக்கு தாக்கீது அனுப்பியது.
இதேபோல், மேனாள் ஒன்றிய அமைச்சரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான அனுராக் தாக்கூர், காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும், அண்மையில் நடந்த 2024 மக்களவைத் தேர்தலிலும் வாக்குப்பதிவில் சந்தேகம் இருப்பதாகக் குற்றம் சாட்டினார். குறிப்பாக, ராகுல், பிரியங்கா, அகிலேஷ், அவரது மனைவி டிம்பிள் உள்ளிட்டோர் போட்டியிட்ட தொகுதிகளில் வாக்குச்சீட்டுகளில் சந்தேகம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். ஆனால், ராகுல் காந்திக்கு தாக்கீது அனுப்பிய தேர்தல் ஆணையம், அனுராக் தாக்கூருக்கு இன்னும் தாக்கீது அனுப்பவில்லை என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத்துறை தலைவர் பவன் கேரா கூறியதாவது: “போலி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் நடத்தப்பட்ட மக்களவைத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். போலி வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தான் மக்களவை தேர்தல் நடந்ததாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அனுராக் தாக்கூரும் நிரூபித்துள்ளார். பெங்களூரு மத்திய சட்டமன்றத் தொகுதியின் மகாதேவபுரா என்ற ஒரு தொகுதிக்கான தரவுகளைச் சேகரிக்க நாங்கள் ஆறு மாதங்கள் எடுத்துக்கொண்டோம். ஆனால், அனுராக் தாக்கூர் ஆறு நாட்களுக்குள் ஆறு மக்களவை தொகுதிகளின் மின்னணு வாக்காளர் பட்டியலை பெற்றுள்ளார். இதற்குத் தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.