முத்தமிழறிஞர் கலைஞரின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் இன்று (7.8.2025)
‘மானமிகு சுயமரியாதைக்காரரான’ முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்
ஒரு பல்கலைக் கொள்கலனல்ல – பல பல்கலைக் கழகங்களின் ஒட்டுமொத்தக் கொள்கலனாகத் திகழ்ந்தவர்!
‘மானமிகு சுயமரியாதைக்காரரான’ முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஒரு பல்கலைக் கொள்கலனல்ல – பல பல்கலைக் கழகங்களின் ஒட்டுமொத்த கொள்கலனாகத் திகழ்ந்தவர் என்றும், ‘ஆரிய மாயை’களை வீழ்த்தி, மாபெரும் வெற்றி வாகை சூட உறுதியேற்போம் என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
நமது நினைவை விட்டு என்றும் நீங்காத, ஓங்கு புகழ் ‘மானமிகு சுயமரியாதைக்காரரான’ முத்தமிழறிஞர் கலைஞரின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் இன்று (7.8.2025).
பல பல்கலைக் கழகங்களின்
ஒட்டுமொத்தக் கொள்கலன்!
தந்தை பெரியாரின் ‘‘குருகுல மாணவராகி’’ அறிஞர் அண்ணாவின் அரசியல் கூடத்தில் அனுபவப் பாடங்களைக் கற்று, எத்தனை நெருப்பாறுகளானாலும் நீந்தி கரை சேர்ப்பதிலும், இயக்க நெருக்கடி, சோதனைக் களம் தொடங்கி, தேர்தல் களத்திலும் திறம்பட நடத்தி, சந்தித்த தோல்விகளால் துவண்டுவிடாது, ‘‘தமிழர்களே, தமிழர்களே, நீங்கள் என்னைக் கடலில் தூக்கி எறிந்தாலும், கட்டுமரமாகத்தான் மிதப்பேன். அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம், கவிழ்ந்துவிட மாட்டேன். தமிழர்களே, தமிழர்களே, என்னை நீங்கள் நெருப்பில் தூக்கிப் போட்டாலும், அதிலே நான் விறகாகத்தான் வீழ்வேன்; அடுப்பு எரித்து நீங்கள் சமைத்துச் சாப்பிடலாம். தமிழர்களே, தமிழர்களே, நீங்கள் என்னைப் பாறையில் மோதினாலும், சிதறல் தேங்காயாகத்தான் உடைேவன்; நீங்கள் என்னை எடுத்துத் தின்று மகிழலாம்’’ என்று, தந்தை பெரியாரின் துணிவும், அண்ணாவின் கனிவும், தன்னகத்தே கொண்டு, தனது ஈடு இணையற்ற உழைப்போடு ஒரு பல்கலைக் கொள்கலனல்ல – பல பல்கலைக் கழகங்களின் ஒட்டுமொத்த கொள்கலனாகத் திகழ்ந்தார்.
கலைஞருக்கு ஆயிரம் நன்றிகளைக் காணிக்கையாக்குகின்றோம்!
அவரது தலைவர்கள், வழிகாட்டிகள் வகுத்த பாதை தவறாமல், ‘‘தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மிக்கது’’ என்பதை கடந்த நான்கரை ஆண்டுகளாக ஆட்சி சிம்மாசனத்தின்மூலம், மக்களின் இதயச் சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்துள்ள, அடக்கமும், ஆழ்ந்த நிதானமும், கடும் உழைப்பும், செயல்திறனும் ஒருங்கே அமைந்த மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ முதலமைச்சரை, தனக்குப் பிறகு ‘‘வெற்றிடம் அல்ல திராவிடம் – பெரியார் மண்’’ என்று உலகுக்கு உணர்த்திடும் வகையில், ஒரு சீரிய பண்புள்ள – மக்களின் பாசத்தைப் பெற்றவரைத் தந்தார். அந்த அரசியல் அருட்கொடையைத் தந்த எமது கலைஞருக்கு ஆயிரம் நன்றிகளைக் காணிக்கையாக்குகின்றோம்.
‘‘அவர் தந்த திராவிட ஆட்சி – ‘ஆரிய மாயை’களை வீழ்த்தி, மாபெரும் வெற்றி வாகை சூட வைக்கும்’’ என்ற எமது உறுதியே, உங்களுக்கு – மக்கள் மறவாது வைக்கும் மலர்வளையம் இன்றும், என்றும்!
நமது கலைஞரின் காலப்பெட்டகமான ‘‘திராவிடம் வெல்லும் – வரலாறு அதனை என்றும் சொல்லும்!’’
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
7.8.2025