புதுடில்லி, ஜூலை26 வரும் 28ஆம் தேதி முதல் நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த மக்களவை தலைவர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டது.
அனைத்துக் கட்சி கூட்டம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. எதிர்க்கட்சிகளின் அமளியால் 5-ஆவது நாளாக நேற்றும் (25.7.2025) இரு அவைகளும் முடங்கின.
இதை தொடர்ந்து, மக்களவை தலைவர் ஓம் பிர்லா தலைமையில் அனைத் துக் கட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் கவுரவ் கோகோய் உட்பட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
‘எதிர்க்கட்சிகள் கோரிய படி ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து மக்களவையில் 28-ஆம் தேதி விவாதம் தொடங்க உள்ளது. எனவே, அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு தர வேண்டும்’ என்று ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார்.
இதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, 28-ஆம் தேதி முதல் அவை சுமூகமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்றிய அரசு உறுதி
அனைத்துக் கட்சி கூட் டத்துக்கு பிறகு நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியபோது, “ஆபரேஷன் சிந்தூர்’’ உட்பட அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க தயாராக இருப்பதாக ஒன்றிய அரசு உறுதி அளித்துள்ளது. அதன்பிறகும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு அமளியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் ஒரே ஒரு மசோதா மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது” என்றார்.
மக்களவையில் ‘ஆப ரேஷன் சிந்தூர்’ தொடர்பான விவாதத்தை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 28-ஆம் தேதி தொடங்கி வைப்பார். ஒன்றிய அமைச் சர்கள் அமித்ஷா, ஜெய்சங்கர், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிஷிகாந்த் துபே, அனுராக் தாக்குர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்று பேசுவார்கள். பல்வேறு கட்சிகளின் பிரதி நிதிகளுக்கும் வாய்ப்பு தரப்படும். பிரதமர் மோடி பதில் அளித்து பேசுவார். மொத்தம் 16 மணி நேரம் விவாதம் நடைபெறும்.
மாநிலங்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதம் 24-ஆம் தேதி தொடங்கும். அங்கு 9 மணி நேரம் விவாதம் நடைபெறும் என்று ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.