பாட்னா, ஜூலை 18 பீகார் மாநிலத்தின் பக்ஸர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தன் மிஸ்ரா. இவர் மீது பல கொலை வழக்குகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இவர் சமீபத்தில் பக்ஸர் சிறையிலிருந்து பகல்பூர் சிறைக்கு மாற்றப்பட்டார். இவர் சிகிச்சைக்காக பரோலில் வெளிவந்து பாட்னா நகரில் உள்ள பரஸ்
மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையறிந்த இவரது எதிரிகள், மருத்துவமனையிலேயே இவரை சுட்டுக் கொல்லத் திட்டமிட்டனர்.
இந்நிலையில் பரஸ் மருத்துவமனையில் நேற்று (17.7.2025) காலை 5 பேர் நுழைந்தனர். சந்தன் மிஸ்ரா சிகிச்சை பெறும் அறைக்குள் புகுந்த அவர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் சந்தன்மிஸ்ராவை நோக்கி சரமாரியாகச் சுட்டனர். இதில் குண்டு பாய்ந்த சந்தன் மிஸ்ரா, அதே இடத்தில் இறந்தார். கொலையாளிகள் மருத்துவமனைக்குள் நுழைந்த காட்சிப் பதிவு வைரலாக பரவியது.
இந்தக் கும்பல், சந்தன் மிஸ்ராவுக்கு எதிராகச் செயல்படும் சந்தன் செரு தலமையிலான ரவுடிகள் என காவல்துறையினர் அடையாளம் கண்டு, ஒருவரை கைது செய்தனர். மற்றவர்களை பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி அளித்த பேட்டியில், ‘பீகாரில் யாருக்கும், எங்கும் பாதுகாப்பு இல்லை. அரசு ஆதரவுடன் செயல்படும் குற்றவாளிகள், மருத்துவமனையின் அய்சியு வார்டுக்குள் புகுந்து சிகிச்சை பெற்ற நபரை சுட்டுக் கொன்றுள்ளனர். 2005 ஆம் ஆண்டுக்கு முன்பு இது போன்ற சம்பவங்கள் பீகாரில் நடைபெறவில்லை” என்றார்.
பீகார் துணை முதலமைச்சர் விஜய் சின்ஹா அளித்த பேட்டியில், ‘‘இச்சம்பவம் வாய்ப்புக் கேடானது.. இது குறித்து விசாரணை நடத்தப்படும். குற்றவாளிகள் தப்ப முடியாது. அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என முதலமைச்சர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்” என்றார்.