தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள் பேச்சு
சென்னை, ஜூலை 16– “மாணவர்கள் ஒழுக்கத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்” என்று சிறீராம் இலக்கியக் கழகம் சென்னையில் நடத்திய திருக்குறள் விழாவில், வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் முனைவர் ந. அருள் பேசினார்.
மாநிலம் முழுவதும் திருக்குறள் பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக நடத்தி வருகிறது. இதன் ஒரு கட்டமாக அண்மையில் சென்னை, அண்ணா நகரில் உள்ள சி.எஸ்.அய். ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போட்டிகளை நடத்தியது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பேசிய தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குனர் முனைவர் ந.அருள், “அறிவு அற்றம் காக்கும் கருவி என்று கூறிய வள்ளுவர், கற்க கசடற என்று வலியுறுத்தி, ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்று சொல்லி, எல்லாவற்றுக்கும் மேலானது ஒழுக்கம் தான் என தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஒரு சிந்தனையை அவரால் சிந்திக்க முடிந்திருக்கிறது என்றால், அது மிகவும் ஆச்சரியத்திற்குரியதாகும். மேலும் அது இன்றைக்கும் பொருந்துவதாக இருப்பது இன்னும் சிறப்பானது.
திருக்குறளில் கடவுளைப் பற்றியோ, தலைவனைப் பற்றியோ, அரசனைப் பற்றியோ எந்தக் குறிப்பும் கிடையாது. அதனால்தான் அதைப் பொதுமறை என்கிறோம்.
5400 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்று கீழடி ஆராய்ச்சிகள் சொன்னாலும் கூட, இன்றைக்கும் இளமை ததும்பும் மொழியாகத் தமிழ் திகழ்கிறது. எனவே மாணவர்கள் அதை நன்கு கற்க வேண்டும் என்றார்.
முன்னதாக, இந்நிகழ்ச்சியில் சி.எஸ்.அய். ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் ஹானா டேனியல் வாழ்த்துரை வழங்கினார். சிறீராம் சிட்ஸ் நிறுவனத்தின் சென்னை பிராந்தியத்தின் துணைப் பொது மேலாளர் ஜெ.பாலாஜி வரவேற்புரை ஆற்றினார்.