திருவண்ணாமலை அருகே 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திருவண்ணாமலை, ஜன. 5- திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த ச.பாலமுருகன், சி.பழனிசாமி, ம.பாரதிராஜா, ஓவியர் சிவக்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் திருவண்ணாமலை அருகே உள்ள பாவுப்பட்டு கிராமத்தில் அவ்வூரைச் சேர்ந்த லட்சுமியம்மாள் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் அங்குள்ள மலையடிவாரத்தில் ஆய்வு செய்தனர்.

சோழர்கால கல்வெட்டு

அதில் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குலோத்துங்கச் சோழன் காலத்து கல்வெட்டு கண்டெடுக்கப் பட்டது.

இந்த கல்வெட்டு 2 அடி அகலம், 6 அடி நீளம் கொண்ட பலகைக்கல்லில் வெட்டப் பட்டுள்ளது. இக்கல்வெட்டு 3ஆம் குலோத்துங்க சோழனின் 22ஆம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டது. இதில் பெண்ணை வடகரை செங்குன்ற நாட்டில் காட்டாம்பூண்டி மலையடிவாரத்தில் புலவர்அடியான் ஒற்றிக்கொண்டான் திருவானை முகவன் என்பவர் அவ்விடத்தில் உள்ள நீர் ஊற்றை கண்டுபிடித்து அதற்கு சித்திரமேழி பேரூற்று என்று பெயரும் இட்டு அதை பெரிய நாட்டுக்கு தர்மமாக கொடுத்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடும் காட்டாம் பூண்டி என்ற ஊர் இந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்ட ஊருக்கு அருகில் அமைந்துள்ளது. பாவுப்பட்டு கிராமம் அக்காலத்தில் காட்டாம்பூண்டியின் ஒரு பகுதியாக இருந்துள்ளது.

அங்கு புலவர்அடியான் ஒற்றிக்கொண்டான் திருவானை முகவன் என்பவர் அம்மலைப்பகுதியில் உள்ள இயற்கையான ஊற்றைக் கண்டுபிடித்து அதற்கு சித்திரமேழி பேரூற்று என்று பெயர் கொடுத்துள்ளார்.

சித்திரமேழி என்பது அக்காலத்தில் திருவண்ணாமலை பகுதியில் செல்வாக்காக இருந்த வேளாண் சபையாகும். அச்சபையை பெரிய நாட்டார் சபை என்றும் கூறுவார்கள். இப்பகுதி சித்திர மேழி பெரியநாட்டார் சபை ஆட்சிக்குட்பட்ட பகுதியாக விளங்குவதால் இந்த தர்மத்தை அவர்கள் பெயரில் அளித்துள்ளார். திருவானை முகவன் என்ற பெயருக்கு உரியதாக வெறையூர் அருகே திருவானை முகம் வலசை என்ற ஊர் இன்றும் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஓர் ஊற்றுக்கு பெயரிட்டு அதற்கு கல்வெட்டு வைக்கப்பெற்றது இந்த இடத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வெட்டு அமைந்துள்ள பகுதியில் ஓர் இயற்கையான சுனை இன்றும் உள்ளது. தற்போது ஊத்துக்குட்டை என்று அழைக்கப் படுகிறது. இந்த சிறப்பு வாய்ந்த கல்வெட்டை தொல்லியல் துறை ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என வரலாற்று ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *