*மணவிழாக்களை உங்களுடைய குடும்பத்தவரை வைத்து நடத்துங்கள்; புரோகிதத் திருமணத்தை விட்டுவிடுங்கள்!
* வைதீக மணவிழாவில் சொல்லப்படும் சமஸ்கிருத மந்திர இழிவை நினைவில் கொள்ளுங்கள்!
அதற்குப் பிறகும், புரோகித முறையில் மணவிழாவை நடத்தவேண்டுமா என்று நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்!
புதுவை, ஜூலை 14 – மணவிழாக்களை உங்களுடைய குடும்பத்தவரை வைத்து நடத்துங்கள்; புரோகிதத் திருமணத்தை விட்டுவிடுங்கள். ஏன் இதைச் சொல்கிறோம் என்றால், புரோகித மணவிழாவில் சொல்லப்படும் சமஸ்கிருத மந்திர இழிவை நினைவில் கொள்ளுங்கள். அதற்குப் பிறகும், புரோகித முறையில் மணவிழாவை நடத்தவேண்டுமா? என்று நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
மணமக்கள்: பா.தமிழ்ச்செல்வன் – ச.சியாமளாதேவி
கடந்த 8.6.2025 அன்று புதுவையில் நடைபெற்ற பா.தமிழ்ச்செல்வன் – ச.சியாமளாதேவி ஆகியோரின் மணவிழாவிற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.
கடந்த 12.7.2025 அன்று ‘விடுதலையில் வெளிவந்த அவரது வாழ்த்துரையின் தொடர்ச்சி வருமாறு:
மகாராட்டிராவில் இருக்கின்ற பார்ப்பனர்கள், இதனை எதிர்த்து மணவிழாவினை நடத்தி வைத்தவர்மீதும், மணமக்கள், மணமக்கள் பெற்றோர்மீதும் வழக்குத் தொடுத்தனர், எங்கள் உரிமையை எப்படி நீங்கள் பயன்படுத்தலாம் என்று.
அந்த வழக்கின் முடிவில், அவர்களுக்கு இழப்பீடு கொடுக்கவேண்டும் என்று தீர்ப்புக் கொடுத்தார்கள்.
அதை எதிர்த்து ‘‘சத்ய சோதக் சமாஜ்’’ அமைப்பு ஒரு பெரிய போராட்டத்தை நடத்தியது. இதன்படி உண்மையை மக்களுக்குப் புரிய வைத்தார்கள்.
சட்டப்பேரவைக்கு அம்பேத்கர் அவர்கள் தேர்ந்தெ டுக்கப்பட்டு வந்தார்.
50 ஆண்டுகளுக்கு மேலாக….
50 ஆண்டுகளுக்கு மேலாக விவாதம் நடைபெற்றுக் கொண்டு வந்தது. பிறகு மேல்முறையீடு செய்தனர். அதற்காக தனிச் சட்டம் கொண்டு வந்தார்கள். புரோகி தர்தான் மணவிழாவை நடத்தவேண்டும் என்கின்ற அவசியம் இல்லை என்று தீர்ப்பு வந்தது.
அப்படி தீர்ப்பு வந்தவுடன், அபராதம் கட்டவேண்டிய அவசியமோ, இழப்பீடு கொடுக்கவேண்டியதோ இல்லை.
இந்தத் தீர்ப்பு எதைக் காட்டுகிறது?
இதைத்தான் நல்லய்யன் இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.
யார்மீதும் எங்களுக்கு வெறுப்பு கிடையாது!
ஏன் சுயமரியாதைத் திருமணத்தை நாங்கள் செய்கி றோம்? அதற்கு என்ன காரணம்? யார்மீதும் வெறுப்பு கிடையாது.
அவர் எழுதும்போது ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டி யிருக்கிறார்.
‘‘சுயமரியாதைத் திருமணம் ஏன்?’’ என்கின்ற தலைப்பில் சொல்கிறார்,
‘‘தன்மான இயக்கத் திருமணம் ஏன்?
வைதீகத் திருமணத்தில் சொல்லப்படும் சமஸ்கிருத மந்திரம். அதன் பொருள் தெரிந்தவர்கள் யாரும், வைதீக, புரோகிதர்களை வைத்து திருமணம் செய்ய முன்வரமாட்டார்கள்.
இங்கே வந்திருக்கின்றவர்கள் எல்லோரும் விவரம் தெரிந்தவர்கள். ஆனால், தாய்மார்கள், சகோதரிகள் சிலர் என்ன சொல்வார்கள் என்றால், ‘‘அதெப்படிங்க, அய்யர் இல்லாமல் கல்யாணம் செய்வது? சடங்குகள் இல்லாமல் கல்யாணம் செய்வது?’’ என்று.
அதற்குரிய விளக்கத்தை இந்தப் புத்தகத்தில் பதிவிட்டு இருக்கிறார்கள்.
சுயமரியாதை இயக்கத்தினுடைய அடிநோக்கு!
இதை அப்படியே நீங்கள் ஏற்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. இதை நம்பவேண்டும் என்கின்ற அவசியம் இல்லை.
இங்கே வந்திருக்கின்றவர்கள், இந்தக் கருத்துக்கு அப்பாற்பட்டு இருக்கின்ற பெரியோர்கள், தாய்மார்கள், நண்பர்கள் அனைவருக்கும் எங்களுடைய அன்பான வேண்டுகோள் என்னவென்றால், நாங்கள் சொல்வதை நம்ப வேண்டாம், ஏற்கவேண்டாம்; நாங்கள் சொல்வதை நீங்கள் ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. எங்கள் அறிவுக்குப்பட்டதை எடுத்துச் சொல்கிறோம். இதுதான் தந்தை பெரியாரு டைய அணுகுமுறை. அதுதான் சுயமரியாதை இயக்கத்தி னுடைய அடிநோக்கு.
மணவிழாவில் சொல்லப்படும்
சமஸ்கிருத மந்திரம்!
மணவிழாக்களில் சொல்லப்படும் சமஸ்கிருத மந்திரம் இதுதான் –
‘‘ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர:
த்ரூதீயோ அக்னிஷ்டேபதி:
துரீயஸ்தே மனுஷ்யஜா:’’.
இந்த சமஸ்கிருத மந்திரத்தின் பொருள் நமக்கு விளங்காது.
புதுப் பணக்காரர் என்ன சொல்வார் என்றால், ‘‘சாமி, இன்னொரு தடவை மந்திரத்தை ஸ்ட்ராங்காச் சொல்லுங்கள்’’ என்பார்.
வைதீக முறையில் திருமணத்தை நடத்தக்கூடாது என்று நாங்கள் ஏன் சொல்கிறோம்? அவரவர் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் யார் வேண்டுமானாலும் நடத்தலாம்.
சமஸ்கிருத மந்திரத்தின் பொருள்
வைதீகத் திருமணத்தில் சொல்லப்படும் சமஸ்கிருத மந்திரத்தின் பொருள்,
‘‘சோமன் முதலில் இந்த மணப்பெண்ணை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவரை அடைந்தான். மூன்றாவது கணவன், அக்னி. இவருடைய நான்காவது கணவர்தான், இந்த மனித ஜாதியில் பிறந்தவர்.’’
இது தெரியாமல், ‘‘இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்கா மந்திரத்தைச் சொல்லுங்க சாமி’’ என்று சொல்லுகிறார்கள்.
அந்த மந்திரத்தின் விளக்கத்தை நாங்களோ, அவரோ எழுதவில்லை. எதைச் சொன்னாலும், நாங்கள் ஆதாரத்தோடுதான் சொல்லுவோம்.
விவாஹ மந்த்ராத்த போதினி
விவாஹ மந்த்ராத்த போதினி (கல்யாண மந்த்ரங்கள்) என்கிற புத்தகத்தைத் தொகுத்தவர் வித்யாவிசாரத ந்யாயரத்ந, ந்யாயபூஷண, கீழாத்தூர் சிறீநிவாஸாச்சாரியார் சிரோமணி & ஹிந்திவிசாரத் தொகுத்த புத்தகத்தில் தெளிவாக இருக்கிறது.
ஒவ்வொரு கன்னிகையும், வரிசையாக ஸோமன், கந்தர்வன், அக்னி என்னும் தேவர்களை முதலில் கணவனாக அடைந்த பிறகு, நான்காவதாக, மனித ஜாதியில் பிறந்தவரை கணவனாக அடைகிறாள் என்ற அர்த்தமுள்ள மந்திரத்தைக் கணவன் கூறுகிறான் என்று தேவர்களுடைய கன்னிகைக்கு ஏற்பட்ட சம்பந்தம்.
சமஸ்கிருதத்தில் சொல்வதினால், நம்முடைய தாய்மார்களுக்கு அந்த மந்திரத்தினுடைய பொருள் விளங்கவில்லை.
உங்களுக்கு ஒரு சுவையான தகவலைச் சொல்கி றேன்.
கல்யாண மந்திரத்திற்குப் பதில்,
கருமாதி மந்திரம்!
நாவலர் சோமசுந்தர பாரதியார், பெரிய தமிழறிஞர் அவர். சமஸ்கிருதமும் தெரிந்தவர். அவரை ஒரு வைதீகத் திருமணத்திற்கு அழைத்திருந்தார்கள். அந்தத் திருமணத்தை இளைஞராக உள்ள ஒரு புரோ கிதர் நடத்தி வைக்கிறார். அப்படி திருமணத்தை நடத்தும்போது, சமஸ்கிருத மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.
அந்த மந்திரத்தைக் கேட்ட நாவலர் சோமசுந்தர பாரதியாருக்குக் கோபம் ஏற்பட்டது. கொஞ்சம் நேரம் பொறுத்துப் பார்த்தார், அவரால் முடியவில்லை. உடனே, ‘‘ஏய், நிறுத்து!’’ என்று அந்தப் புரோகிதரைப் பார்த்துச் சொல்லிக் கொண்டே எழுந்தார்.
அங்கே இருந்தவர்கள் எல்லாம், என்ன இவர், நாகரிகமில்லாமல் இப்படி நடந்துகொள்கிறாரே? என்று நினைத்தனர்.
சோமசுந்தர பாரதியார் அவர்கள் எழுந்து சென்று, அந்தப் புரோகிதரின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்தார்.
சோமசுந்தர பாரதியார்மேல் கோபப்பட்டனர்!
அதற்காக அங்கே உள்ளவர்கள் எல்லாம் ஆத்தி ரப்பட்டு, எதற்கு அடித்தீர்கள்? என்று கேட்டார்கள்.
உடனே நாவலர் சோமசுந்தர பாரதியார், ‘‘என் மேல் உங்கள் எல்லோருக்கும் கோபம் இருக்கலாம்; நான் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடந்துகொண்டேன் என்று நீங்கள் எல்லோரும் நினைக்கலாம். ஆனால், நான் ஏன், இந்தப் புரோகிதனை அடித்தேன் என்றால், ‘‘இவ்வளவு நேரம் அந்தப் பையன் சொன்ன மந்திரம் எல்லாம் கருமாதி மந்திரம். கல்யாண வீட்டில், கருமாதி மந்திரம் சொல்கிறானே என்பதால்தான் நான் கோபப்பட்டு அடித்தேன். உங்களுக்கெல்லாம் சமஸ்கிருதம் தெரியாது என்பதால், உங்களுக்குத் தெரியவில்லை’’ என்றார்.
மன்னிப்புக் கேட்ட
இளம் புரோகிதன்!
உடனே அங்கே இருந்த புரோகிதன், ‘‘அய்யா, என்னை விட்டுவிடுங்கள்; நான் ஒரு உண்மையைச் சொல்கிறேன், என்னுடைய அப்பா எனக்கு இரண்டு மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்தார். அந்த இரண்டு மந்திரத்தையும், மாற்றி மாற்றிச் சொல் என்று என்னிடம் சொல்லியிருக்கிறார். அதன்படியே, நான் இரண்டு மந்திரத்தையும், மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன். அதனுடைய அர்த்தம் எனக்குத் தெரியாது; என்னை மன்னித்துவிடுங்கள்’’ என்று சொன்னார்.
ஆகவே, சமஸ்கிருத மொழி தெரியாது. அத னால்தான், சடங்கு, சம்பிரதாயம் என்ற பெயரில் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
சுயமரியாதைத் திருமணம் என்பது தன்மானத் திருமண முறை!
ஆனால், இங்கே நடைபெறுகின்ற சுயமரியாதைத் திருமணம் என்பது தன்மானத் திருமண முறையாகும்.
இரண்டு பேரும் தொழிலதிபர்கள். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒரு சமூகம். படிக்கத் தகுதியில்லாதவர்கள் என்று சொல்லப்பட்ட சமூகம். மணமக்களைப் பார்த்தீர்களேயானால், மணமகன் தமிழ்ச்செல்வன் ஒரு திறமையான தொழிலதிபர். பி.டெக், எம்.பி.ஏ., படித்தவர்.
அதேபோல, மணமகள் சியாமளாதேவி, பிஎஸ்.சி, எம்.சி.ஏ., படித்திருக்கிறார். எல்லாம் கணினி யுகம்.
செயற்கை நுண்ணறிவு காலத்தில், வைதீகத்தைக் கட்டிக் கொண்டு ஏன் மாரடிக்கவேண்டும்?
‘‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு‘‘ – எனவே, மானத்தையும், அறிவையும் சொல்லிக் கொடுக்கின்ற மணவிழா இது!
ஆகவேதான், இந்த மணமுறை மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது.
மணமக்கள் இரண்டு பேரும் மகிழ்ச்சியாக அமர்ந்தி ருக்கின்றார்கள். இதுவே, வைதீக திருமணம் என்றால, இவ்வளவு மகிழ்ச்சியாக அமர்ந்திருக்க முடியுமா?
ஒரு தொடர் கதையையே
எழுதி முடித்துவிடுவார்கள்!
மாங்குச்சியைப் போட்டுக் கொளுத்தி, அந்தப் புகையால் மணமகள் கண்களைக் கசக்க, அதைப் பார்த்த ஒரு பாட்டி, ஏன் மணமகள் அழுகிறாள்? என்று கேட்க, இன்னொருவர், ஏதோ பிரச்சினைபோல இருக்கே என்று அவர் சொல்ல, ஒரு தொடர் கதையையே எழுதி முடித்துவிடுவார்கள்.
அது மட்டுமல்ல, ஒரு தட்டில் அரிசியைப் போட்டு, மஞ்சளைக் கலந்து, மணவிழாவிற்கு வந்திருப்பவர்களை எடுக்கச் செய்து, கடைசியில் உள்ளவர் அதைத் தூக்கி மணமக்களை நோக்கி வீசுவார்கள். அது என்ன ஏவுகணையா? இலக்கு நோக்கிப் போவதற்கு.
‘‘உலையில் போடுகின்ற அரிசியை
ஏன் தலையில் போடுகிறீர்கள்?’’
மண விழா முடிந்து பார்த்தால், மண்டபம் முழுவதும் அந்த அரிசி சிதறிக் கிடக்கும்.
பெரியார்தான் கேட்பார், ‘‘உலையில் போடு கின்ற அரிசியை ஏன் தலையில் போடுகிறீர்கள்?’’ என்று.
இதுதான் பகுத்தறிவு!
வீட்டில் அடுப்பு எரிந்துகொண்டிருக்கும்போது, வீட்டில் உள்ள குழந்தை, நெய்யை எடுத்து எரிகின்ற அடுப்பில் ஊற்றினால், பெற்றோர் பொறுத்துக் கொள்வார்களா?
‘‘ஏய், நெய் என்ன விலை விற்கிறது, அதைக் கொண்டு போய் நெருப்பில் ஊற்றுகிறாயே, உனக்கு மூளை இருக்கிறதா?’’ என்று தாய்மார்கள் கோபப்படுவார்கள்.
‘‘பருப்பில் ஊற்றி சாப்பிட வேண்டிய நெய்யை, நெருப்பில் ஊற்றுகிறாயே!’’
ஆனால், வைதீகத் திருமணத்தில், நெய்யை நெருப்பில் ஊற்றிக் கொண்டே இருப்பார்கள்.
அதைத்தான் அய்யா கேட்டார், ‘‘பருப்பில் ஊற்றி சாப்பிட வேண்டிய நெய்யை, நெருப்பில் ஊற்றுகிறாயே, நியாயமா?’’ என்று.
இதுதான் சுயமரியாதைத் திருமணம். இதுதான் பகுத்தறிவுத் திருமணம்.
மணமக்களுக்கு அறிவுரை சொல்லவேண்டிய அவசியமில்லை. ஆகவே, அவர்களுக்கு அறிவுரை சொல்வதில்லை. எல்லா மணமக்களும் விவரம் தெரிந்தவர்கள்.
ஆகவே, மணமக்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள், என்னவென்றால்,
உங்களுடைய அறிவுத் திறனால், உங்களுடைய ஆளுமைத் திறனால், உங்களுடைய கடுமையான உழைப்பினால், நீங்கள் வாழ்வில் உயர்வீர்கள்; கைநிறைய சம்பாதிப்பீர்கள். வாழ்வில் சிறப்பாக இருப்பீர்கள்.
இல்லறம் – தொண்டறம்
இல்லறம் என்று சொன்னால், அதற்குப் பிறகு துறவறம் என்று பழைய காலத்தில் சொல்வார்கள். பெரியார் ஒருவர்தான், இல்லறம் – தொண்டறம் என்று சொன்னார்.
அடுத்தவர்களுக்கு உதவி செய்யவேண்டும் – அதுதான் தொண்டறம்.
மணமக்களே, வாழ்வில் நீங்கள் எவ்வளவு உய ரத்திற்குச் சென்றாலும், உங்களுடைய பெற்றோர்தான் உங்களை இந்த அளவிற்கு ஆளாக்கியிருக்கிறார்கள்.
பெற்றோர்களிடம் நன்றி காட்ட, பெற்றோர்களிடம் மகிழ்ச்சி காட்ட தவறாதீர்கள். வயதான பெற்றோரைப் பராமரிக்காமல் நிறைய பிள்ளைகள் இருக்கின்றனர். நம்முடைய இயக்கப் பிள்ளைகள் அப்படியில்லை.
தன்முனைப்பு இல்லாமல் வாழுங்கள்!
மணமக்களே, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழுங்கள். தன்முனைப்பு இல்லாமல் வாழுங்கள். தன்முனைப்பினால்தான், பல குடும்பங்களில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
தந்தை பெரியாருடைய தலைமகனான அறிஞர் அண்ணா அவர்கள், சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்டம் வடிவம் தந்தவர்.
இந்த மணமுறையில்கூட தாலி கட்டலாம், தாலி கட்டாமல் இருக்கலாம் என்று சட்டத்தில் வைத்திருக்கிறார்கள்.
இங்கே நம்முடைய பாஸ்கர் அவர்கள், மணமக்கள் அணியக்கூடிய தங்கச் சங்கிலியில் மணமக்கள் பெயர் பொறித்திருப்பதைக் காட்டினார்.
தாலி என்ற ஒரு சடங்கை, சம்பிரதாயமாக வைக்கவில்லை.
ஒரே மாதிரி தாலி, எல்லா இடங்களிலும் கிடையாது. அதற்கு ஒரு விளக்கம் சொல்வார்கள். ஒற்றைத் தாலி, குண்டுத் தாலி, பட்டைத் தாலி, நாமத் தாலி என்று பலவகை உண்டு.
இது ஏனென்று கேட்டால், ‘‘எங்கள் ஜாதி வழக்கம்’’ என்று சொல்வார்கள். எங்கள் ஜாதியில் இந்த வழக்கம் இல்லை என்றும் சொல்வார்கள்.
ஜாதியை எங்கே கொண்டு போய் வைத்திருக்கிறார்கள்?
இந்த வார்த்தையை நன்றாகக் கவனிக்கவேண்டும்; ‘‘எங்கள் ஜாதிக்கு’’ வழக்கம் இல்லை என்று சொல்கிறார்கள். அப்படி என்றால், ஜாதியை எங்கே கொண்டு போய் வைத்திருக்கிறார்கள் என்றால், பத்திரமான இடத்தில் கொண்டு போய் ஜாதியை வைத்திருக்கிறார்கள்.
இந்த வழக்கத்தை, சுயமரியாதை இயக்கம், சுயமரியாதைத் திருமண முறை ஒழித்தது, மாற்றியது.
நமக்கொன்றும் யார்மீதும் சங்கடம் இல்லை. தாய்மார்கள், சகோதரிகள் அத்துணை பேரும் புரிந்துகொள்ளவேண்டும்.
மருந்து ஏன் சாப்பிடுகிறீர்கள்?
இது பெரியாருக்காக அல்ல; மருந்து ஏன் சாப்பிடுகிறீர்கள்? என்று கேட்டால், என்ன சொல்வீர்கள்?
டாக்டர் எழுதிக் கொடுத்திருக்கிறார்; அவர் மனது சங்கடப்படக் கூடாது என்பதற்காக சாப்பிடுகிறேன் என்றா சொல்வீர்கள்?
அல்லது மருந்துக் கடைக்காரருக்கு வியாபாரம் ஆகவேண்டுமே, அதற்காக சாப்பிடுகிறோம் என்றா சொல்வீர்கள்?
நம்முடைய நோய் தீருவதற்காக, நம்முடைய வியாதி தீருவதற்காகத்தான் நாம் மருந்து சாப்பிடுகின்றோம்.
ஆகவேதான், நம்முடைய தன்மானம், நம்முடைய அறிவு, நம்முடைய பகுத்தறிவு தெளிவாக இருப்பதற்குத்தான் இந்த சுயமரியாதை இயக்கம் – எங்களுடைய கொள்கை.
இந்தக் கொள்கையை எங்களுக்காக நீங்கள் ஏற்கவேண்டாம்; உங்களுக்காக, உங்கள் சந்ததிக்காக ஏற்கவேண்டும். மணமக்களின் பெற்றோர், படிக்கக் கூடாத மக்கள் என்று சொன்ன மக்களைப் படிக்க வைத்து, நல்ல நிலைக்கு இன்றைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள்.
எனவே, இந்த மணமக்கள் எல்லா வகையிலும் சிறப்போடு வாழ்வார்கள்.
இப்போது மணவிழா காணும் மணமக்களுடைய பிள்ளைகளின் மணவிழாவையேகூட நான் நடத்தி வைத்தாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை.
இவருக்கு இவ்வளவு பேராசையா? என்று நீங்கள் நினைக்கலாம்!
என்னடா, இவருக்கு இவ்வளவு பேராசையா? இப்போதே இவருக்கு 92 வயதாகிறதே என்று நீங்கள் எல்லாம் நினைக்கலாம்.
எனக்குப் பேராசை அல்ல. விஞ்ஞானம் அந்த அளவிற்கு வளர்ந்திருக்கின்றது.
இன்றைக்குக்கூட ஒரு செய்தி வந்திருக்கிறது – ‘‘முதுமையும் போகும்’’ என்பதுதான் அந்தச் செய்தி.
முதுமை போவது மட்டுமல்ல; எது நம்மை முதுமையாக்குகிறதோ, அதையெல்லாம் அறிவியல் போக்கிவிடும் என்று அந்தக் கட்டுரையில் செய்தி வந்திருக்கிறது.
அறிவியல் வளர்ந்து கொண்டிருக்கின்ற காலகட்டம்!
ஆகவே, இன்றைய காலகட்டம் என்பது அறிவியல் வளர்ந்து கொண்டிருக்கின்ற காலகட்டம்.
ஆனால், நம்மாள் என்ன செய்கிறான் தெரியுமா? அறிவியலின் கண்டுபிடிப்பான செல்போனுக்கு, ஆயுதப் பூஜை என்ற பெயரில், அதற்குப் பொட்டு வைத்து, பூஜை போடுகிறான்.
செல்போனுக்கும், ஆயுத பூஜைக்கும் என்ன சம்மந்தம்? என்று நீங்கள் நன்றாக சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
இதோ நான் பேசிக் கொண்டிருப்பது ஒலிபெருக்கியில். என் எதிரே நின்று கேமிராவில் வீடியோ எடுக்கிறார். முதலில், உரையை ரெக்கார்ட் செய்கின்ற கருவிதான் இருந்தது. இப்போது, ஒலி, ஒளியையும் பதிவு செய்கின்ற வீடியோ கேமிரா வந்தாயிற்று. அப்படிப்பட்ட அறிவியல் வளர்ச்சி பெற்று இருக்கின்ற காலம்.
அறிவியல் வளர்ச்சி பெற்ற காலத்தில், மூடநம்பிக்கைகளுக்கு இடமில்லை
இப்படிப்பட்ட அறிவியல் வளர்ச்சி பெற்ற காலத்தில், மூடநம்பிக்கைகளுக்கு இடமில்லை. தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதுதான் மிகவும் முக்கியம்.
மணமக்களை, மணமக்களின் பெற்றோரைப் பாராட்டவேண்டும். குறிப்பாக மணமகளின் பெற்றோரைப் பாராட்டவேண்டும். ஏனென்றால், மணமகன் குடும்பத்தினர் முழுக்க முழுக்க இந்தக் கொள்கையில் ஊறிய குடும்பம். மணமகள் குடும்பத்தினர் இந்தக் கொள்கை மணவிழா முறைக்கு ஒப்புக்கொண்டதற்காக மீண்டும் ஒருமுறை பாராட்டுகின்றோம்.
புரோகித மணவிழாவில் சொல்லப்படும் சமஸ்கிருத மந்திரத்தை இழிவை நினைவில் கொள்ளுங்கள்!
மணவிழாக்களை உங்களுடைய குடும்பத்தவரை வைத்து நடத்துங்கள்; புரோகிதத் திருமணத்தை விட்டுவிடுங்கள். ஏன் இதைச் சொல்கிறோம் என்றால், புரோகித மணவிழாவில் சொல்லப்படும் சமஸ்கிருத மந்திரத்திலுள்ள இழிவை நினைவில் கொள்ளுங்கள். அதற்குப் பிறகும், புரோகித முறையில் மணவிழாவை நடத்தவேண்டுமா? என்று நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.
மனிதநேயத்தில் நமக்கு மாறுபட்ட கருத்து கிடையாது
தனிப்பட்ட முறையில், பார்ப்பன நண்பர்கள் இருக்கலாம்; இங்கே கூட அவர்கள் வந்திருக்கலாம். அவர்களைப் புண்படுத்துவதோ, சங்கடப்படுத்துவதோ நம்முடைய நோக்கமல்ல. நம்மோடு அவர்கள் நண்பர்களாகப் பழகட்டும்; சாப்பிடட்டும். மனிதநேயத்தில் நமக்கு மாறுபட்ட கருத்து கிடையாது. இதுதான் சுயமரியாதை இயக்கம்.
அதனுடைய நூற்றாண்டு வெற்றிக்கு அடையாளம் என்னவென்றால், இதுபோன்று தலைமுறை தலைமுறையாக சுயமரியாதை மணவிழாக்களை நடத்துவதுதான்.
தமிழ்நாட்டில், சுயமரியாதை மணவிழா முறையைப் புகுத்தியவர் தந்தை பெரியார். அவர் மட்டும் பிறந்திருக்காவிட்டால், இப்படி ஒரு திருமணம் நடைபெற வாய்ப்பில்லை. எளிமையாக, மகிழ்ச்சியாக நடைபெறக்கூடிய திருமண முறை இது.
சுயமரியாதைத் திருமணங்கள் அந்தக் காலகட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றன. இந்தத் திருமணங்கள் செல்லாது என்று உயர்நீதிமன்றம் செல்லிவிட்டது. ஆனால், அதைப்பற்றிக் கவலைப்படாமல், நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடைபெற்றன.
சுயமரியாதைத் திருமண முறைக்கு
சட்ட வடிவம் கொடுத்தவர் முதலமைச்சர் அண்ணா!
அண்ணா அவர்கள் தலைமையில், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், சுயமரியாதைத் திருமண முறைக்கு சட்ட வடிவம் கொடுத்து, செய்த திருமணங்களும் செல்லும், செய்கின்ற திருமணமும் செல்லும்; செய்யப் போகின்ற திருமணங்களும் செல்லும் என்றார்.
பிறகு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், புதுவையில் பரூக் மரைக்காய் முதலமைச்சராக இருந்தார். தமிழ்நாட்டில் சுயமரியாதைத் திருமணச் சட்டம் நிறைவேறியதுபோல, புதுவையிலும் சுயமரியாதைத் திருமணச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
புதுவையிலும் சட்டம் நிறைவேற்றப்பட்டது!
ஆகவே, சட்டப்படி, தமிழ்நாட்டில் எப்படி செல்லுமோ, புதுவையிலும் அப்படியே இந்தத் திருமண முறை செல்லும்.
சுயமரியாதை மணவிழா முறைக்கு முக்கிய காரணம், தந்தை பெரியார், அண்ணா, கலைஞர், திராவிட இயக்கம். ஆகவேதான், அந்தத் தலைவர்களுக்கு நம்முடைய வீர வணக்கத்தைச் செலுத்தி, மணமக்கள் செல்வர்கள் தமிழ்ச்செல்வன் – சியாமளாதேவி ஆகிய இருவரும் வாழ்க்கை இணையேற்பு விழா உறுதிமொழிச் சொல்லி, வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சியினை அனைவரும் முன்னிலையிலும் நடத்திக் கொள்கிறார்கள்.
(மணமக்கள் இருவரும் உறுதிமொழி ஏற்று, தங்கச் சங்கிலியை அணிந்துகொண்டனர்).
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.