அமெரிக்கா வரி விதிப்பு இந்தியாவுக்கு அபாய அறிவிப்பு

viduthalai
2 Min Read

வாஷிங்டன், ஜூலை 14 ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்குமிடையிலான பனிப் போர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 500% வரியை விதிக்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளதாம். இது தொடர்பான மசோதா அந்நாட்டு செனட் அவையில்  தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் இந்தியா இந்த வரியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அமெரிக்காவின் பொருட்களுக்கு உலக நாடுகள் வரியை விதிக்கின்றன. அதேபோல உலக நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவும் வரியை விதிக்கிறது. இந்த இரண்டு வரிகளும் சரி சமமாக இல்லை என்று கூறி அதனைச் சமன்படுத்தப் போவதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

ஆகஸ்ட் 1 முதல் பல நாடுகளுக்கு புதிய வரிகளை விதிக்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக 14 நாடுகளுக்கு டிரம்ப் கடிதங்களை அனுப்பியிருக்கிறார்.  அந்த நாடுகளுக்கு 25% முதல் 40% வரை வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். ஆனால் இந்தியாவுக்கு இப்படி எந்த கடிதமும் இதுவரை வரவில்லை. அப்படியெனில் வரி தொடர்பாக இந்தியா இன்னும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருப்பதாகவே பொருள் என்று கருதப்படுகிறது. இந்திய அதிகாரிகள் அமெரிக்கா சென்று, வாகன உதிரி பாகங்கள், எஃகு மற்றும் விவசாயப் பொருட்கள் மீதான வரிகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கவும் முயற்சிக்க இருக்கின்றனர்.

இந்நிலையில் வரி தொடர்பாக அமெரிக்கா புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் எரிசக்திப் பொருட்களை வாங்கும் நாடுகளைத் தண்டிக்கும் நோக்கில் “ரஷ்யாவுக்குத் தடை விதிக்கும் சட்டம் 2025” என்ற மசோதா, அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்மொழியப் பட்டுள்ளது. இந்த மசோதா இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளைக் குறிவைக்கிறது. இந்த நாடுகளுக்கு 500% வரி விதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

இந்த மசோதா இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில்  வரி குறித்து  டிரம்ப் கூறுகையில், “வரி விவகாரம் முற்றிலும் என்னுடைய விருப்பப்படி நடக்க வேண்டும். நான் இதை தீவிரமாகக் கவனித்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்திய அதிகாரிகள் அமெரிக்காவுடன் ஓர் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயன்று வருவதாக ப்ளூம்பெர்க்  தகவல் வெளியிட்டுள்ளது.  இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், அமெரிக்காவின் புதிய வரிகளிலிருந்து இந்தியா  சலுகைகளை பெறும். ஒருவேளை ஒப்பந்தம் செய்யப்படாவிட்டால் அது இந்தியாவில் பெரிய பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இந்தியாவின் ஏற்றுமதித் துறைகள் அமெரிக்கச் சந்தையைப் பெரிதும் நம்பியுள்ளன. ரத்தினங்கள், மருந்துகள், மின்னணுவியல் மற்றும் எஃகு போன்ற துறைகள் அதிக இழப்புகளைச் சந்திக்க நேரிடலாம் என்றும், 7-10 பில்லியன் டாலர் வரை இழப்புகள் ஏற்படலாம் என்றும் பொருளாதார நிபுணர் சங்கநாத் பந்தோபாத்யாய் எச்சரித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “வாஷிங்டனுடனான பேச்சுவார்த்தையில் இந்தியா தாராளமான சலுகைகளை முன்மொழிந்துள்ளது. அமெரிக்க இறக்குமதியில் 60% க்கு பூஜ்ய வரி மற்றும் 90% பொருட்களுக்கு முன்னுரிமை அணுகலும் வழங்கப்பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.

டிரம்ப் தரும் நெருக்கடியை அவரதுநண்பர் (!) நரேந்திர மோடி எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *