அரசமைப்பு கிளப் நிர்வாகிகள் தேர்தல்! கலாச்சாரப் பிரிவு செயலாளராக திருச்சி சிவா ஒருமனதாகத் தேர்வு!

viduthalai

புதுடில்லி, ஜூலை 13–- டில்லியில் மக்களவைத் தலைவர் தலைமையில் செயல்படும் அரசமைப்பு கிளப் (constitution club) நிர்வாகிகளுக்கான தேர்தலில் மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா செயலாளர் கலாச்சாரப் பிரிவு பொறுப்புக்கும், செயலாளர் விளையாட்டுப் பிரிவு பொறுப்பிற்கும் BCCIஇல் தலைவராக இருக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜீவ் சுக்லாவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து, குறிப்பாக தி.மு.கழகத்திலிருந்து இந்த முக்கிய பொறுப்புக்குதேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா என்பது குறிப்பிடத்தக்கது!

வெளிநாடுகளில் பயணம் முடித்து வந்துள்ள பிரதமர் மோடி, மணிப்பூருக்கு எப்போது செல்வார்?

காங். மூத்த தலைவர்
ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!

புதுடில்லி, ஜூலை 13 வெளிநாடுகளில் பயணம் முடித்து இந்தியா வந்துள்ள பிரதமர் மோடி, மணிப்பூருக்கு எப்போது செல்வார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், பிரதமர் மோடிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பிஉள்ளார். அதில், பல்வேறு வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ள பிரதமர் மோடியை இந்தியா வரவேற்கிறது என கூறியுள்ளார்.

கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலம், கடந்த 2 ஆண்டுகளாக பிரதமர் மோடியை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்துள்ள பிரதமர் மோடி, தற்போதாவது சிறிது நேரம் ஒதுக்கி, மணிப்பூருக்கு செல்வாரா என்றும் வினவியுள்ளார்.

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள், இதுவரை நீதியின்முன் நிறுத்தப்பட வில்லை, இதுகுறித்து பிரதமர் மோடிஆய்வு செய்வாரா?, பேரிடர்களால் பாதித்துள்ள இமாச்சல் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களின் நிவாரணப் பணிகள் மோடி கவனம் செலுத்துவாரா என வினவியுள்ள ஜெய்ராம் ரமேஷ், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்புநடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை ஏற்பாரா என்றும் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார்.

விளையாட்டுக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.64 கோடியில் பணிகள் தொடக்கம்

துணை முதலமைச்சர் உதயநிதி அடிக்கல் நாட்டினார்

சென்னை, ஜூலை 13– மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.64.43 கோடியில் 7 விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட விளையாட்டு மைதானங்கள் அமைத்தல், உள்விளையாட்டு அரங்கங்களை ஏற்படுத்துதல், நவீன உடற்பயிற்சி கூடங்கள் நிறுவுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டத்தில் ரூ.9.47 கோடி மதிப்பீட்டில் செயற்கை வளைகோல் பந்து மைதானம், திருவண்ணாமலையில் ரூ.10.15 கோடி மதிப்பீட்டிலும், அரியலூரில் ரூ.10.15 கோடி மதிப்பீட்டிலும் புதிய செயற்கை வளைகோல் பந்து மைதானம் அமைக்கும் பணிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி வாயிலாக 11.7.2025 அன்று அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து மதுரையில் ரூ.12.50 கோடி மதிப்பீட்டில் டைவிங் வசதியுடன் கூடிய நீச்சல் குளம், கரூரில் ரூ.6.28 கோடி மதிப்பீட்டில் புதிய நீச்சல்குளம், கோவையில் ரூ.7.95 கோடியிலும், சேலத்தில் ரூ.7.93 கோடி மதிப்பீட்டிலும் புதிய விளையாட்டு விடுதிகள் அமைக்கும் பணிகளுக்கும் துணை முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து சென்னை ராணிமேரி கல்லூரியின் விளையாட்டு கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.20 லட்சத்துக்கான காசோலையை, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மேலும் 52ஆவது தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கிய துணை முதலமைச்சர், ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான இந்திய மகளிர் அணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு வீராங்கனைகள் கார்த்திகா மற்றும் பிரிதயர்ஷினிக்கு பயணம், தங்குமிடம் மற்றும் செலவினங்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து ரூ.1.50 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் எ.வ.வேலு,
ஆர்.ராஜேந்திரன், பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், விளையாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *