திருச்செந்தூரில் உள்ள தோப்பூர் கிராமத்தில் தோழர் தமிழினியன் கடந்த 25 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக அரசுத்தேர்வுகள் எழுதுவதற்கான பயிற்சி வகுப்புகளை வீட்டிலேயே நடத்தி வருகிறார். அத்துடன் அம் மாணவர்களுக்கு பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் ஆகியோரைப் பற்றியும் கற்றுக் கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டுதான் குற்றாலத்தில் நடைபெற்று வரும் பெரியாரியல் பயிற்சிப்பட்டறையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறார். தனது பயிற்சி வகுப்பில் பயிலும் 15 இருபால் மாணவர்களையும் அழைத்து வந்திருக்கிறார். பயிற்சி வகுப்பின் அருமையை உணர்ந்த தமிழினியன் இந்த ஆண்டு 33 இருபால் மாணவர்களை தனி வாகனத்தின் மூலம் அழைத்து வந்திருக்கிறார். இந்த 33 மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து, அவர்களுடன் கலந்துரையாடல் நடத்தி, பெரியாரியல் பயிற்சிப்பட்டறையின் அவசியத்தையும், சிறப்பையும் சொல்லி, பெற்றோர்களின் சம்மதத்துடன் அழைத்து வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்ட தமிழினியன், “பெரியார் பெற்ற சுயமரியாதையை நான் அழைத்து வந்திருக்கும் அனைத்து மாணவர்களும் பெறவேண்டும்” என்கிறார்.