புதுடில்லி, ஜூலை 11 – பீகார் மாநிலத்தில், திடீரென வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையை மேற் கொள்வது ஏன்? என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வாக்காளர் பட்டியலில் சிறப்புத் திருத்தம்
மேலும், பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளும் விஷயத்தில், ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை ஆவணங்களாக சேர்ப்பது குறித்து பரிசீலிக்குமாறு உத்தர விட்டிருக்கும் உச்சநீதிமன்றம், இது தொடர்பாக ஒரு வார காலத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு தாக்கீது அனுப்பியுள்ளது.
பீகாரில் சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், திடீரென அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் துவங்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அல்லது திருத்த 11 வகையான ஆவணங்களை பட்டியலிட்ட தேர்தல் ஆணையம், இந்த 11 ஆவணங்களில் ஆதார் அட்டை சேர்க்கப்படவில்லை. மாறாக பிறப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் அல்லது பட்டா மாதிரியான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.
குறிப்பாக, பீகார் மாநிலத்தில் 2003 ஆம் ஆண்டுக்குப் பின்னர், வாக்காளராகப் பதிவு செய்து கொண்டவர்கள், தாங்கள் இந்தி யர்கள் தான் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தில் வழக்குகள்!
இது பீகாரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு கள், நீதிபதிகள் சுதான்ஷூ துலியா மற்றும் ஜாய்மால்யா பாக்சி ஆகி யோர் அடங்கிய அமர்வில், நேற்று (10.7.2025) விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கு ரைஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி, கோபால் சங்கர நாராயணன் உள்ளிட்டோர் ஆஜராகினர்.
தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் கே.கே. வேணுகோபால், ராகேஷ் திவேதி ஆஜராகினர். கபில் சிபல், அபிஷேக் சிங்கி வாதங்களைக் கேட்ட நீதிபதி சுதான்சு துலியா, “சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி என்பது சிறப்புத் திருத்தமாகத் தெரியவில்லை. மாறாக, குடியுரிமையை கேள்விக்கு உட்ப டுத்து வதை நோக்கமாகக் கொண்ட ஒரு பணியைப் போல தெரிகிறது” என குறிப்பிட்டார்.
“குடியுரிமை பிரச்சினையை பீகார் தேர்தல் விவகாரத்தில் ஏன் கொண்டு வருகிறீர்கள்? குடியுரிமை என்பது உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருவது. இந்தப் பிரச்சினை தேர்தல் தொடர்பானது. வெவ்வேறு அதிகார வரம்புக்குள் வரக்கூடிய இவை இரண்டையும் குழப்பிக் கொள்ளாதீர்கள்” என்றார்.
திருத்தப் பணியை இப்போது செய்வது ஏன்?
அதேபோல “பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், இந்தச் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி ஏன் மேற்கொள்ளப்படுகிறது?” என நீதிபதி ஜோய் மல்யா பாக்சி கேள்வி எழுப்பி னார். “தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பிரச்சினை இல்லை, அதன் நேரம் தான் பிரச்சினை… பீகாரில் சிறப்புத் திருத்த (SIR) நடவடிக்கையைச் சட்டமன்றத் தேர்தல்களுடன் ஏன் இணைக்கிறீர்கள்? தேர்தல்கள் இல்லாத காலத்தில் அதைச் செய்யலாமே?” என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்துப் பேசிய தேர்தல் ஆணைய வழக்குரைஞர் ராகேஷ் திவேதி, “சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியானது, உரிய நடைமுறைகளின்படி மேற்கொள்ளப்படும். அறிவிப்பு இல்லாமல், விசாரணைக் கான வாய்ப்பு இல்லாமல் யாருடைய பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது” என உறுதி அளித்தார். ‘‘அதேநேரத்தில், ஆதார் என்பது அடையாள அங்கீகார ஆவணம். குடியுரிமை ஆவணம் அல்ல” என தெரிவித்தார்.
குடும்ப அட்டை
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை செல்லுபடியாகும் ஆவணமாக கருதுங்கள். 11 ஆவணங்களின் பட்டியல் முழுமையானது அல்ல என தேர்தல் ஆணைய வழக்குரைஞர் கூறியிருக்கிறார். எனவே, தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகிய வற்றை பரிசீலியுங்கள்” எனத் தெரிவித்தனர்.
மேலும், “குடிமக்கள் அல்லாதவர்கள் பட்டியலில் இருக்கக் கூடாது என்பதற்காகவே இந்த நட வடிக்கை எடுக்கப்படுகிறது என்ப தில் தவறில்லை. ஆனால், சிறப்புத் திருத்த நடவடிக்கையை மேற்கொள் வதற்கான அதிகாரம் உள்ளதா? என்பதை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும். ஆய்வு நடை முறையின் செல்லுபடியாகும் தன்மை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். தேர்தலுக்குச் சற்று முன்பு இந்த நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கான காரணம் என்ன என்பதையும் தெளிவாக விளக்கவேண்டும்” என்று உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.