புதுடில்லி, ஜூலை 10 நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புப் படை வீரர்கள் தீயை அணைத்தனர். அப்போது வீட்டின் ஓர் அறையில் பாதி எரிந்த நிலையில் இருந்த ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
இது குறித்து உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, வர்மா அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
பின்னர், தலைமை நீதிபதி நியமித்த குழு தீவிர விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில் பதவி விலகுமாறு நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் தலைமை நீதிபதி அறி வுறுத்தினார். ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார்.இதைத் தொடர்ந்து வர்மாவை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் தலைமை நீதிபதி கடிதம் அனுப்பினார்.
இந்த சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 21-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவையில் பதவி நீக்க தீர்மானத்தை தாக்கல் செய்ய குறைந்தது 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் தேவை. அந்த வகையில் கையொப்பம் பெறும் பணி நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு விசாரணைக் குழு அமைக்கப்படும்.
இதனிடையே, இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக அனைத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் ஒன்றிய அரசு ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
பிரம்மபுத்ரா நதியில்
சீனா அணைகட்டுவதால் ஆபத்தை சந்திக்கப்போகும் இந்தியா
அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் எச்சரிக்கை
இடாநகர், ஜூலை 10 ‘‘பிரம்மபுத்ரா நதியில் சீனா மிகப் பெரிய அணை கட்டி வருகிறது. இதனை அந்நாடு ‘‘தண்ணீர் வெடிகுண்டு’ ஆக பயன்படுத்தக்கூடும்”, என அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு கூறியுள்ளார்.
பெரிய அணை
சீனாவின் திபெத் பகுதியில் பிரம்மபுத்ரா நதி உருவாகிறது. அங்கு, இந்த நதிக்கு ‘யார்லுங் சாங்போ’ என்று பெயர். இந்தியாவில் நுழையும் போது பிரம்மபுத்ரா என்ற பெயரில் இந்த நதி பெயர் பெறுகிறது. இந்த நதியின் குறுக்கே சீனா உலகின் மிகப்பெரிய அணையை கட்டி வருகிறது.
இது தொடர்பாக அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு பி.டி.அய்., செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
பிரம்மபுத்ரா நதியில் சீனா உலகின் மிகப்பெரிய அணையை கட்டி வருகிறது. இது கவலைக்குரிய விஷயம். சீனா நம்பகமான நாடு கிடையாது. அந்நாடு என்ன செய்யும் என யாருக்கும் தெரியாது. சீனாவின் ராணுவ அச்சுறுத்தலை தாண்டி, வேறு எதையும் விட இது மிகப்பெரிய பிரச்சினையாக எனக்கு தோன்றுகிறது. இது நமது பழங்குடியினருக்கும், நமது வாழ்வாதாரத்துக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தப் போகிறது. இது தீவிரமான பிரச்சினை. இதனை ஒரு வகையான, ‘தண்ணீர் வெடிகுண்டாக’ கூட சீனா பயன்படுத்தலாம். பன்னாட்டு நீர் பகிர்வு ஒப்பந்தங்களில் சீனா கையெழுத்து போட்டு இருந்தால், அருணாச்சலப் பிரதேசம், அசாம் மற்றும் வங்கதேசத்தில் கோடை காலத்தில் ஏற்படும் வெள்ளத்தை தடுக்கும் என்பதால், இந்த திட்டம் முக்கியமானதாக இருந்து இருக்கும். ஆனால், சீனா கையெழுத்து போடவில்லை. இதுதான் பிரச்சினை. அணை கட்டிய பிறகு, சீனா திடீரென தண்ணீரை திறந்துவிட்டால், நமது சியாங் பகுதி பேரழிவை சந்திக்கும். ஆதிவாசியினர், தங்களது நிலத்தையும், சொத்துக்களையும் இழக்க நேரிடும். மனிதர்கள் பேரழிவை சந்திக்க வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
விமான விபத்தில் இரண்டு விமானிகள் மரணம்
சுரு, ஜூலை 10 ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில், சூரத்கர் விமான தளத்திலிருந்து புறப்பட்ட விமானப் படைக்குச் சொந்தமான ஜாகுவார் ரக போர் விமானம் நேற்று (9.7.2025) மதியம் 1:25 மணியளவில் பனோடா கிராமத்தின் அருகே விழுந்தது.
இரட்டை இருக்கைகள் கொண்ட அந்த விமானம், நடுவானில் சமநிலையை இழந்து, ரத்தன்கர் பகுதியில் வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது.
இதை நேரில் கண்ட கிராம மக்கள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நொறுங்கிய விமான பாகங்களுக்கு அருகே இரண்டு விமானிகளின் உடல்கள் மீட்கப்பட்டன.
இந்த விமான விபத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பகடே மற்றும் முதலமைச்சர் பஜன்லால் இரங்கல் தெரிவித்தனர். விபத்திற்கான காரணத்தை அறிய, விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆண்டில் ஜாகுவார் விமானம் விபத்திற்குள்ளாவது இது மூன்றாவது முறை ஆகும்.