ஆசிரியா் கலந்தாய்வு முதுநிலை ஆசிரியர்கள் 1,501 பேருக்கு மாறுதல்

1 Min Read

சென்னை, ஜூலை 6– அரசுப் பள்ளி ஆசிரியா் பொதுமாறுதல் கலந்தாய்வில் 1,501 முதுநிலை ஆசிரியா்களுக்கு விருப்ப மாறுதலுக்கான ஆணை வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் எமிஸ் தளம் வழியாக நடத்தப்படுகிறது.

அதன்படி நிகழ் கல்வியாண்டில் (2025-2026) மாறுதல் கோரி 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் விண்ணப்பித்துள்ளனா்.

அவா்களுக்கான மாறுதல் கலந்தாய்வு கடந்த ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரு நாள்களில் நடத்தப்பட்ட உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான கலந்தாய்வில் 649 போ் விருப்ப மாறுதல் செய்யப்பட்டனா்.

மேலும், சுழற்சி கலந்தாய்வில் 292 இடைநிலை ஆசிரியா்கள் இடமாறுதல் பெற்றனா். இதைத் தொடா்ந்து ஜூலை 3-இல் நடைபெற்ற கலந்தாய்வில் 294 பேருக்கு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்களாக பதவி உயா்வு வழங்கப்பட்டது.

இடைநிலை ஆசிரியருக்கான பணிநிரவலில் 569 போ் மாறுதல் செய்யப்பட்டனா். தொடா்ந்து முதுநிலை ஆசிரியா்களுக்கு மாவட்டத்துக்குள்ளான மாறுதல் கலந்தாய்வு நேற்று முன்தினம் (4.7.2025) நடைபெற்றது.

இந்த கலந்தாய்வில் பங்கேற்க 10,760 ஆசிரியா்கள் விண்ணப்பித்ததில் 6,871 போ் கலந்துகொண்டனா். அவா்களில் 1,501 போ் விருப்ப மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *