எம்.ஜி.ஆர் முன் – பண்ருட்டியாரை பிடித்துத் தள்ளிய ஆர்.எஸ்.எஸ்.

viduthalai
5 Min Read

பரிசுகளாக அளித்து மட்டிலா மகிழ்ச்சி வானில் இறக்கை கட்டிப் பறந்தார்களோ!

ஆர்.எஸ்.எஸ். பற்றி – அதிமுகவின் நிறுவனர் எம்.ஜி.ஆர். சட்டப் பேரவையில் வெளுத்துக் கட்டினாரே. அந்தத் தகவல்கள் எல்லாம் தகர டப்பாக்களுக்குத் தெரியுமா?

இதோ முதல் அமைச்சர் பேசுகிறார் – மைதானத்தில் அல்ல – சட்டப் பேரவையில் பேசியதுதான்.

“மதவாதிகள் – அவர்களின் கொள்கை எதுவாக இருந்தாலும் மக்களை ஒற்றுமைப்படுத்துவதாக இருக்க வேண்டும். மதவாதிகள் மக்களைப்பிளவுபடுத்த நினைப்பதை – இந்த அரசு அனுமதிக்காது என்பதை தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

இந்து முன்னணி பேரணி கூடாது

இந்து முன்னணி என்ற பெயரால் பேரணி நடத்துகிறார்கள். இந்தப் பேரணியால் நாட்டுக்கு நன்மையா? சிந்திக்க வேண்டும்.

தூண்டிவிடும் மடாதிபதிகள்

இந்து முன்னணிக்காரர்களுக்கு யோசனை சொல்லும் மடாதிபதிகளுக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இதுபோன்ற செயல்களை அரசு அனுமதிக்காது. குன்றக்குடி அடிகளார் நடந்து கொள்வதுபோல் மற்ற மடாதிபதிகள் நடந்து கொள்ள வேண்டுமே தவிர, மற்ற வழிமுறைகளில் இறங்கக் கூடாது. (காஞ்சி சங்கராச்சாரியாரும், மதுரை மடாதிபதியும், இந்து முன்னணிக்காரர்களையும், ஆர்.எஸ்.எஸ்.காரர்களையும் தூண்டிவிட்டுப் பேசிவருவது வாசகர்கள் அறிந்ததே.)

ஆர்.எஸ்.எஸ்.

நான் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். அச்சுறுத்தல் பயிற்சி கொடுக்கிறார்களே – அதை அரசு ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக சொல்கிறேன்; ஆர்.எஸ்.எஸ். தனது பயிற்சிகளை நிறுத்தியாக வேண்டும். ஏற்கெனவே என்.சி.சி., சாரணர் பயிற்சிகள் இருக்கின்றன. அந்தப் பயிற்சியே போதும். ஆர்.எஸ்.எஸ்.சின் இந்தப் பயிற்சிகள் தேவை இல்லை.

மக்கள் நலன் காக்கக் கூடிய அரசியல் கட்சிகள் இருக்கின்றன. மக்கள் நலனுக்காகப் பாடுபடக்கூடிய சிறந்த தலைவர்கள் இருக்கிறார்கள். எல்லா அரசியல் கட்சிகளிலும் இருக்கிறார்கள். எனவே, மதவாதிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.

அரசு விதித்துள்ள 144 தடையை மீறுவோம் என்கிறார்கள். தடையை அவர்கள் மீறி செயல்பட்டால், அரசு அதை சமாளிக்கும். அரசு அதற்குத் தயாராக இருக்கிறது.”

– இவ்வாறு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சட்டப் பேரவையில் தனது பதில் உரையில் குறிப்பிட்டார். (28.3.1982).

மேலும், செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர்
எம்.ஜி.ஆர். ஆர்.எஸ்.எஸ். குறித்தும், இந்து அமைப்புகள் குறித்தும் கடுமையான கருத்துகளை முன் வைத்தார். ஆர்.எஸ்.எஸ்.சுக்கு தடை விதிக்கப்படுமா? என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த எம்.ஜி.ஆர். “டில்லியில் நேற்று நான் தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தேன். அப்போது எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இந்து மஞ்ச் என்ற இயக்கத்தைச் சேர்ந்த 15, 16 பேர் அங்கு வந்தனர். நாகர்கோவிலில் துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் இறந்து போய்விட்டார்களாமே, அதுபற்றி பேச வந்துள்ளோம் என்றார்கள். ஏற்கெனவே நேரம் குறித்தபடி, மத்திய அமைச்சரைப் பார்க்கப் போகிறேன். இப்போதைக்கு நேரமில்லை. சென்னைக்கு வாருங்கள். பேசுவோம் எனக் கூறினேன். அவர்கள் எம்.ஜி.ஆர் ஒழிக என கோஷம் போட்டார்கள். இப்படிப்பட்ட நடைமுறைதான் ஆர்.எஸ்.எஸ். நடைமுறையா?

நேரம் குறித்துக் கொள்ளாமல் திடீரென வந்து உண்மைக்கு மாறான தகவலைக் கூறிக் கொண்டு இப்போதே பேச வேண்டுமெனக் கேட்பது என்ன நியாயம்? அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனை அவர்கள் தள்ளிவிட்டனர். இப்படி ஓர் அமைப்பு. அது ஆர்.எஸ்.எஸ். என்றாலும் அல்லது வேறு எந்த அமைப்பு என்றாலும் அது பெருமை தரத்தக்க செயல் அல்ல. இதன் மூலம் இந்து மதத்தைக் காக்க முடியாது.

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பற்றி மற்றவர்கள் கூறியவற்றை நான் அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை. எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இப்படிப்பட்ட செயல்கள் நல்லதல்ல. இந்து முன்னணியில் ஆதிக்கம் செலுத்துவது அர்.எஸ்.எஸ்சா அல்லது ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இந்து முன்னணியில் உள்ளனரா? இதுதான் கட்டுப்பாடு, ஒழுங்கா என்ற கேள்விகள் எழுகின்றன” என்று தெரிவித்தாரே!

கட்சியின் நிறுவனரே – எம்.ஜி.ஆரே ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களை அக்கக்காக ஆணிவேர் வரை சென்று தோலுரித்துத் தொங்க விட்ட பிறகு, இன்றைய அதிமுகவினர் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களுடன் ஆலிங்கணம் செய்வது ஏன்? ஏன்?

மதுரை முருகன் மாநாட்டில் பங்கேற்ற மேனாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளதையும் கேட்க வேண்டாமா?

“முருகன் எனக்குப் பிடித்த கடவுள்! அதிமுகவில் 100 சதவிகிதம் ஹிந்துக்கள் ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர்கள் இருக்கிறார்கள்” என்று திருவாய் மலர்ந்துள்ளார்.

அப்படியா? சரி இருக்கட்டும்! கட்சியின் பெயரிலும், கொடியிலும் அண்ணாவைப் பறக்க விட்டுள்ள அருமை அதிமுக தோழர்களே, தலைவர்களே!

இந்து மதம் பற்றி அண்ணா கொள்கை என்ன தெரியுமா?

என்ன செய்வது! அண்ணாவைப் பற்றி அண்ணா திமுகவுக்குப் பாடம் எடுப்பது நமது கடமையல்லவா!

அண்ணா எழுதிய ‘ஆரிய மாயை’ தெரியுமா? இதோ ஆரிய மாயை நூலிலிருந்து…

“நாம் யாருக்கும் மேல் அல்ல, யாரும் நமக்கு மேலோர் அல்ல! நாம் ஆள ஆட்கள் வேண்டாம்! நம்மை ஆளவும் அய்யர்மார் வேண்டாம்!!

நம்மிடையே தரகர் கூடாது. தர்ப்பை ஆகாது. சேரியும் கூடாது. அக்கிரகாரமும் ஆகாது. யோக யாகப் புரட்டுகள், புரோகிதப் பித்தலாட்டம், மனுக்கொடுமை வேண்டாம். மனிதர் யாவரும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் என்று கூறுபவர் எப்படித் தம்மை “இந்து” என்று கூறிக்கொள்ள முடியும்? மூடமதிக்காரர், கொடுமைக்காரர், அடிமை, சூத்திரன் என்று கூறிக்கொள்ள எப்படித்தான் மனம் இடந்தரும்? எப்படித்தான் துணியும்?

“இந்து மதம்” என்பதிலே உள்ள கடவுள் முறை, சமுதாய முறை, மதக் கதை முறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை அலசிப் பார்த்தபிறகு யாருக்குத்தான் தன்னை ஓர் “இந்து” என்று கூறிக்கொள்ள மனம் இடந்தரும்?

பாம்பை எடுத்துப் படுக்கையில் விட்டுக் கொள்வாரா? விஷத்தை எடுத்து உணவில் சேர்ப்பாரா? வீதிக் குப்பையை வீட்டுக்குள் கொண்டு போய்ச் சேர்ப்பாரா? மதிதுலங்கும் விஷயங்களை விட்டு, மதி கெடுக்கும் கற்பனைகளைக் கட்டி அழுவாரா? மீள மார்க்கம் தேடுவதை விட்டு, மான வழி தேடிக் கொள்வாரா?

விடுதலைக்கு வழி பிறந்த பின்னர், அடிமை முறிச்சீட்டில் கையொப்பமிடுவாரா? கண் தெரியும்போது குழியில் வீழ்வாரா? தாம் திராவிடர் என்று தெரிந்தபிறகு, திராவிடர் தன்னிகரற்று வாழ்ந்த இனம் என்பது தெரிந்த பிறகு, தம்மை இழிவு செய்து கொடுமைக்கு ஆளாக்கும் ‘இந்து’ மார்க்கத்தில் போய்ச் சேர இசைவாரா? வீரத் திராவிடர் என்ற ஓர் உணர்ச்சி வீறிட்டு எழப்பெற்றோர், இனி ஈனமாய் நடத்தும் இந்து மார்க்கத்தை ஏறெடுத்தும் பாரார்! அதன் இடுக்கில் போய்ச் சேரார்! இழிவைத் தேடார்!”

‘ஆரிய மாயை’ நூலில் அண்ணாவின் இந்த ஆய்வைப் படியுங்கள் அதிமுக தலைவர்களே, தொண்டர்களே!

கொடியில்தான் அண்ணாவின் உருவத்தைக் காற்றில் பறக்க விட்டதாக நினைத்தோம்! இப்படி அண்ணாவின் கொள்கையையே காற்றில் பறக்க விட்டுள்ளனரே!

அண்ணா வெறும் படம் அல்ல தோழர்களே!

அண்ணா ஒரு பாடம்!!

ஆம். அடிப்படைப் பாடம்!!!

அ.தி.மு.க. தோழர்களே!

அண்ணாவைத் திரும்பிப் பாருங்கள்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *