உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு உத்தரவு
சென்னை, ஜூன் 20- தமிழ்நாட்டில் தெருக்கள், சாலைகளுக்கு வைக்கப்பட்ட ஜாதிப் பெயர்களை மாற்றி பொதுப்பெயர்களைச் சூட்டவேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
‘காலனி’ பெயர் நீக்கம்
தமிழ்நாட்டின் அனைத்து இடங்களிலும் உள்ள குடியிருப்புகள், சாலைகள், தெருக்கள் ஆகியவற்றில் உள்ள ஜாதி அடிப்படை யிலான பெயர்களை நீக்க வேண்டும் என்று 3.10.1978 அன்று அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 29 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “காலனி என்ற சொல் இந்த மண்ணின் ஆதிகுடி மக்களை அவமதிப்பதற்கு ஒரு பொருளாக மாறியுள்ளது. ஒடுக்குமுறையின் அடையாளமாகவும்,தீண்டாமை குறியீடாக வும், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வசிக்கும் குடியிருப்புகளை விவரிக்கப் பயன்படுத்தப்படும் போது அவமானமாகவும் மாறிவிட்டதால், ‘காலனி’ என்ற வார்த்தையை அதிகாரப்பூர்வ ஆவணத்திலிருந்தும் பொதுப்பயன்பாட்டிலிருந்தும் நீக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கும்’’ என்று அறிவித்தார்.
ஜாதி உணர்வுப் பெயர்கள்
இதுதொடர்பாக அனைத்து மாநகராட்சி ஆணையர்கள், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்கள், நகராட்சி ஆணையர்களுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறி யிருப்பதாவது:-
முதலமைச்சரின் அறிவிப்பை செயல் படுத்தும் நோக்கத்தில், குடியி ருப்புகள், சாலைகள், தெருக்கள் மற்றும் பிற பொது இடங்களின் பெயரிலிருந்து ஜாதிப் பெயர்களை நீக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அங்கு, சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் அல்லது சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எந்தவொரு குறிப்பிட்ட ஜாதி அல்லது சீர்குலைக்கும் உணர்வுகளை தூண்டும் விதமான பெயர்களை குறிக்கக் கூடாது.
பொதுமக்கள் விருப்பத்தில்….
ஏதேனும் ஜாதி ரீதியிலான தெரு அல்லது சாலையின் பெயர்களை மாற்றுவதற்காக, அந்தந்த மாநகராட்சி மற்றும் நகராட்சி போன்ற உள்ளாட்சிகளின் பகுதி சபையில் அதுபற்றிய பொதுமக்களின் விருப்பத்தின் அடிப்படையில் பெயர் மாற்ற ஒப்புதல் பெற்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
மாற்றுப் பெயர்கள்
மாற்றுப் பெயர்கள் உதாரணமாக ரோஜா தெரு, மல்லிகை தெரு, லில்லி, லாவண்டர், டெய்சி, வயலட், ஜா அய்ரிஸ் போன்ற பூக்க ளின் பெயர்கள்; வேம்பு, அரச மரம், புன்னை மரம், கடம்ப மரம், ஆலமரம், மாமரம், மருத மரம் போன்ற மரங்களின் பெயர்கள்;
பொது தலைவர்கள் பெயர்கள் சமூக மற்றும் வரலாறு, முக்கிய அடையாளங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பெயர் சூட்டலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.