விமான சேவையில் தொடரும் குளறுபடிகள் விமானங்கள் ‘திடீர்’ ரத்தால் பயணிகள் கடும் அவதி!

viduthalai
3 Min Read

கொல்கத்தா, ஜூன் 18- தொழில்நுட்ப கோளாறு, பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் விமான சேவையில் தொடர்ந்து குளறுபடிகள் ஏற்பட்டுவருகின்றன. இதன் காரணமாக 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

விமானம் விபத்து

டாடா குழுமம் 3½ ஆண்டுகளுக்கு முன்பு, ஒன்றிய அரசிடம் இருந்து விமான நிறுவனத்தை வாங்கியது. இந்த நிலையில் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் ரக விமானம் ஒன்று, கடந்த 12ஆம் தேதி விபத்துக்கு உள்ளானது.

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் தொழில் நுட்ப கோளாறால், மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி கட்டிடத்தின் மீது விழுந்து வெடித்து சிதறியதால் 241 பயணிகள் உள்பட 270-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் அகமதாபாத் விமான விபத்துக்குப் பின்பு, டாடா நிறுவனத்தின் பல்வேறு விமானங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் இருப்பதாக ரத்து செய்யப்பட்டு உள்ளதால், அந்த நிறுவனம் கடும் நெருக்கடியை சந்தித்து உள்ளது.

மும்பை வந்த விமானம்

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து ஏர் இந்தியாவின் போயிங் 777-200 எல்ஆர் ரக விமானம், 211பயணிகளுடன் மும்பைக்கு புறப்பட்டது.வழக்கமாக அந்த விமானம், நேரடியாக மும்பை சென்று விடும். ஆனால், பாகிஸ்தான் வான்பகுதி மூடப் பட்ட உள்ளிட்ட காரணங்களால், நேற்று (17.6.2025) அதிகாலை அந்த விமானம் கொல்கத்தாவுக்கு திருப்பிவிடப்பட்டது.

சான் பிரான்சிஸ்கோவில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்ட போதிலும், திட்டமிட்டபடி கொல்கத்தாவில் நள்ளிரவு 12.45 மணிக்கு தரை இறங்கியது. அது, 2 மணிக்கு மும்பைக்கு புறப்பட வேண்டும்.

ஆனால், விமானத்தின் இடது என்ஜினில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதாக 2.40 மணிக்குத்தான் விமான ஊழியர்கள் அறிவித்தனர். இதையடுத்து பயணிகள் தங்கள் இலக்கை விரைவில் அடைய அனுமதிக்குமாறு அதிகரிகளிடம் முறையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கோளாறுகள் சரிசெய்ய தாமதம் ஏற்பட்டதால், அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.

ஈரான் வான்வெளி மூடல்

இதேபோல அகமதாபாத்தில் இருந்து லண்டனில் உள்ள கேட்விக் செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டது. வான்வெளி கட்டுப்பாடுகள் மற்றும் கூடுதல் முன்னெச்சரிக்கை சோதனைகள் காரணமாக விமானம் கிடைக்காததால், விமானம் வர வழக்கத்தைவிட நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது. இதன் காரணமாக அந்த விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

லண்டனில் இருந்து அமிர்தசரசுக்கு வரும் ஏ.அய்.170 விமானமும் நேற்று ரத்து செய்யப் பட்டது. இஸ்ரேலுடனான போர் காரணமாக ஈரான் தனது வான்வெளியை மூடியுள்ளது, இது அய்ரோப்பாவுக்குச் செல்லும் விமானங்களை பாதித்தது. இதன்காரணமாக அமிர்தசரஸ் விமானம் ரத்தானது.

இதேபோல டில்லியில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் செல்லும் விமானம் மற்றும் டில்லி-துபாய் விமானம் ரத்து செய்யப்பட்டதாக அந்த நிறுவனம் அறிவித்தது.

பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு

ஜூன் 12 அன்று விபத்துக்கு உள்ளான விமானத்தின் AII71 க்கு பதிலாக AI159 என்ற புதிய குறியீட்டைக் கொண்டு அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு நேற்று முன்தினம் முதல் மீண்டும் சேவையை தொடங்கிய நிலையில் விமானம் கிடைக்காததால் நேற்று விமானத்தை ரத்து செய்ய வேண்டியிருந்ததாக அறிவித்தது.

“தொழில்நுட்பக்கோளாறு காரணமாக விமானங்கள்  ரத்தால் பாதிக்கப்பட்ட பயணிகள் தங்கள் இலக்குக்குச் செல்வதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும், ரத்து செய்ததற்கான முழு பணத்தையும் திரும்பப் பெறுவதாகவும், அவர்கள் தேர்வு செய்தால் இலவச மறு அட்டவணையை வழங்குவதாகவும்” ஏர் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

வெடிகுண்டு மிரட்டல்

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து டில்லிக்கு நேற்று (17.6.2025) காலை 9.20 மணியளவில் இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த நிலையில் நடுவானில் பறந்து சென்று கொண்டிருந்த போது விமானத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து அந்த விமானம் நாக்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் உடனடியாக கீழே இறக்கப்பட்டனர். அதன்பிறகு வெடிகுண்டு வல்லுநர்கள், விமானத்தில் ஏறி அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர். ஆனால் விமானத்தில் இருந்து வெடிப்பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *